Dec 2, 2010

“அது!”

-ஒரு திகில் கதை
(இதய பலவீனமானவர்கள் படிக்க வேண்டாம்)

அது ஒரு அம்மாவாசை நாள். நட்சத்திரங்கள் கூட ஒன்று விடாமல் மொத்தமாக காணாமல்
  போயிருந்தது. போக்குவரத்து வசதி குறைவான அந்த மலை கிராமத்திலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ள அந்த பேருந்து நிறுத்தத்திற்கு நான் வேக வேகமாக வந்து சேர்ந்த பொழுது இரவு மணி சுமாராக 11.30 இருக்கும். அந்த நேரத்தில் அவ்வழியே பொள்ளாச்சிக்கு ஒரு கடைசி பேருந்து போவதாக சொல்லியிருந்தார்கள். அந்த இடத்தில் தார்சாலையை ஒட்டி பெரிய ஆலமரம் ஒன்று, ஒரு அடையாளமாக இருந்தது. அந்த இடத்தில் மட்டும் ஆச்சரியமாக ஒரு மின் கம்பத்தில் குழல் விளக்கு ஒன்று மங்கிய ஒளியை தந்து கடமையற்றியது. அந்த கும்மிருட்டுக்கு அது போதுமானதாக இல்லாவிட்டாலும், சற்று தூரத்திற்க்குள் உள்ளவைகளை அடையாளம் காண உதவியாக இருந்தது.  இங்கேதான் அந்த "அது" இருப்பதாக கடைக்காரர் சொன்னார். 

சாலையின் மறுபுறம் ஒரு பெட்டியும் நான்கைந்து தட்டியும் வைத்த ஒரு தேநீர் கடை தெரிந்தது. மொத்த கடைக்கும் ஒரு சிம்னி விளக்கு மட்டுமே ஒளி கொடுத்தது. அந்த கடைசி பேருந்து வந்து சென்ற பிறகே அந்த ஒத்தை கடையும் அடைப்பார்கள் என்று எனக்கு முன்னதாக கிடைத்த தகவல். எனவே அந்த கடையின் வெளிச்சத்தை வைத்தே பேருந்து இன்னும் கடக்கவில்லை என்று ஊகித்து மகிழ்ச்சியடைந்தேன்.

தாழ்வான கூரை கொண்ட அந்த கடையில் குனிந்து நோக்கிய போது, கடைக்காரர்,

“என்ன தம்பி பொள்ளாச்சியா” என்றார்.

“ஆமாங்க, கடைசி பஸ் போய்டுசிங்களா?”

“இன்னும் இல்ல தம்பி. பதினொன்னேகாலுக்கே வர வேண்டியது. இன்னும் வரவில்லை, சில நாட்கள் தாமதமா வரும் சில நாட்கள் வராது. இப்பவே மணி பனிரெண்டாகபோகுது. இனி சந்தேகம்தான்”

திக்கென்று இருந்தது எனக்கு!.

“தம்பி டீ குடிக்கிறிங்களா?” என்றார் கடைக்காரர்.

“தாங்க”.

இந்த குளிருக்கு அது தேவைப்பட்டது. மதியத்திலிருந்து சாப்பிடவில்லை. வேறு ஏதாவது கிடைக்குமா என்று கடையை கண்ணால் அலசிய போது, பசிக்கு தோதாக அங்கு தொங்கிய பன் தென்பட்டது.

டீயும் பன்னும் கொஞ்சம் தெம்பை கொடுத்தது. நேரம் பனிரெண்டை தாண்டியது.

அடுப்பை அணைத்து, பத்திரங்களை கழுவ ஆரம்பித்தார் கடைகாரர்.

“என்னங்க கடைய அடைக்க போறிங்களா?”

“ஆமாம் தம்பி நான் இங்கிருந்து சைக்கிளில் இரண்டு கிலோமீட்டர் போகவேண்டும், இனி பஸ் வருவது சந்தேகம். இந்த நேரத்தில் இங்கு வந்து மாட்டிக்கிட்டீன்களே!. கொஞ்ச நேரம் பாருங்க, இல்லைனா இந்த வழியா எப்பவாவது மரம் ஏற்றிச்செல்லும் லாரி வரும். அதில் ஏறி பொள்ளாச்சி போய்டுங்க”
“சரிங்க”

“இந்த இடம் கொஞ்சம் மோசமான இடம்!. இன்று அம்மவசை வேறு. எப்படியாவது எதையாவது பிடிச்சு ஊர் போய் சேருங்க!”

“ஏங்க?”

“இந்த இடத்தில் ‘அது’ இருக்குங்க!. நானே ஒரு வாட்டி பாத்திருக்கேன். நீங்க நம்புரீங்களோ இல்லையோ?. சின்ன வயசா வேற இருக்கீங்க கவனமா இருங்க!” என்று சொல்லிவிட்டு என் பதிலை கூட எதிபாராமல் கடையை பூட்டி, சைக்கிளை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டார்.

இவ்வளவு நேரம் துணைக்கு கடைக்காரர் இருக்கிறார் என்ற நம்பிக்கையிலிருந்த எனக்கு பயம் தலை தூக்கியது.

இப்போது அந்த கடைக்காரர் மீது எனக்கு கோபம் வந்தது. போற மனுஷன் சும்மா போக வேண்டியதுதானே? எதற்கு “அது” என்று எதையோ சொல்லிவிட்டு போகவேண்டும்?. பொதுவாக எனக்கு இந்த பேய் பிசாசு இவைகளில் நம்பிக்கை இல்லை. இவர் சொல்லாமல் போயிருந்தால் இந்த அமானுசிய சூழ்நிலையில் நான் ஓரளவு தைரியமாக இருந்திருப்பேன்.

நேரம் நள்ளிரவு ஒரு மணியை தொட்டது!. எங்கோ தூ.....ரத்தில் ஒரு நாய் ஊளையிட்டது. இந்த ஒத்தை குழல் விளக்கும் அவ்வப்பொழுது ஒரு நிமிடம் அணைந்து ஒளிர்ந்தது. வெகு தொலைவில் ஒரு வீடு இருக்கும் போலும். ஒரு சிறிய வெளிச்சம் மட்டும் மினிக்கிக்கொண்டிருந்தது. அண்ணாந்து ஆலமரத்தை பார்தேன். ஆலமரத்தில் காக்கை குருவிகள் இருக்கிறதா? தூங்கிவிட்டிருக்கும் போலும். அவ்வளவு அமைதி. மரத்தில் அந்த இருளினில் ஏதேதோ உருவங்கள் நின்றுகொண்டும் உட்கார்ந்து கொண்டும் என்னை நோட்டமிடுவதுபோல் எனக்கு பிரமை ஏற்பட்டது. சில் வண்டுகளின் அந்த இடைவிடாத ரீங்காரம்தான் என் பயத்தை கொஞ்சம் அதிகப்படுத்தியது.

நான் கோவையிலிருந்து கிளம்பும்போதே என் மனைவி சொன்னாள், இப்போதே மணி நான்கு ஆகிறது. இனி பொள்ளாச்சி போய் அங்கிருந்து அந்த கிராமத்தை அடைய எட்டு மணி ஆகிவிடும். திரும்ப தாமதமானால் பேருந்து கிடைப்பது சிரமம் என்று. நான்தான் கேட்கவில்லை. அனுபவிக்கிறேன்.

எனக்கு நீண்ட நாள் வர வேண்டிய பாக்கி அது. பால்ய காலத்து சிநேகிதன், நட்பு ரீதியாக அவசரத்திற்கு கேட்டானே என்று சுளையாக பத்தாயிரம் எடுத்து கொடுத்தேன். வருடம் இரண்டாகி ஆள் காணாமல் போய் நேற்றுதான் அவன் சித்தப்பா யதேச்சையாக சந்தித்தபோது இங்கு இருப்பதாக கூறினார். இன்று சம்பள நாள் ஆகையால் நேரடியாக சொல்லாமல் போனால் வாங்கலாம் என்ற எண்ணத்தில் இங்கு வந்தால் காரியம் ஆகவில்லை. காதிருந்ததுதான் மிச்சம். இங்கு தங்குவதற்கும் தோது இல்லை.

பயத்தை போக்க பாடலாம் என்று நினைத்தால், எனக்கு அவ்வளவாக பாடவராது. அதுவுமில்லாமல் நான் ஏடா கூடமாக பாடி, ஆலமரத்தில் நிம்மதியாக தூங்கிக்கொண்டிருக்கும் அந்த “அது” தன்னை தொந்தரவு செய்ததாக நினைத்து மேலிருந்து குதித்துவிட்டால் என்ன செய்வது என்ற காரணத்தினால் பாடாமல் இருந்துவிட்டேன்.

இந்த பயத்திலேயே மேற்கொண்டு ஒரு அரை மணிநேரம் காத்திருந்த பொழுது, அந்த சாலையின் சற்று தூரத்தில் இரண்டு விளக்கொளி மெதுவாக ஊர்ந்து என்னை நோக்கி வருவது தெரிந்தது!. எனக்கு அது பல சந்தேகங்களை ஏற்படுத்தியது. அது பேருந்து என்றால் அந்த ஒளி இன்னும் கொஞ்சம் பிரகாசமாகவும் வேகமாகவும் நகர்ந்து வரவேண்டும். மேலும் பேருந்தின் அந்த இயல்பான இரைச்சலும் இல்லை. அந்த குளிரிலும் எனக்கு வியர்க்க ஆரம்பித்தது!.

அந்த ஒளி அருகில் வந்த போதுதான் தெரிந்தது, அது ஒரு பேருந்து என்று. எனக்கு மகிழ்ச்சி தாளவில்லை!. அப்பாடா, இந்த இடத்திலிருந்து தப்பிக்க போகிறோம்!. இனி எது வந்தாலும் பயமில்லை!. இந்த மகிழ்ச்சியில், பேருந்து நிற்பதற்க்காக கூட காத்திராமல் ஓடிச்சென்று ஏறினேன். ஆனால், இந்த மகிழ்ச்சி நீடிக்காது!, ‘அந்த’ பயங்கரத்திடம் மாட்டப்போகிறோம்! என்று அப்போது உணரவில்லை.

பேருந்தின் முன் வழியாக ஏறியவுடன், அருகில் இருந்த இருக்கை காலியாக இருந்ததால் ஜன்னல் ஓரமாக அமர்ந்துகொண்டேன். இவ்வளவு நேரம் பயத்தில் தூக்கம் வாராவிட்டாலும், அசதியாக இருந்ததால், இனிமேலாவது பொள்ளாச்சிவரை தூங்கிக்கொண்டு போகலாம். அந்த இடம் சாய்வதற்கு வசதியாக இருந்தது.

அப்போதுதான் கவனித்தேன். முன்புறம் பயணிகள் இருக்கைகள் காலியாக இருந்தன. பின்புறம் திரும்பி பார்த்தேன். எல்லா இருக்கைகலுமே காலியாக இருந்தன. நள்ளிரவு கடந்துவிட்டதால், பயணிகள் யாரும் இல்லை என்று நினைத்துக்கொண்டு நடத்துனரை தேடினேன். அவரையும் காணவில்லை. எனக்கு பயம் கலந்த வியப்பு ஏற்பட்டது. பேருந்தின் நடுவில் ஒரே ஒரு விளக்கு மட்டும் மங்கலாக எரிந்து கொண்டிருந்தது. ஓட்டுனரை பார்த்து கேட்போம் என்றெண்ணி அவர் இருக்கை அருகில் சென்று பார்த்தேன். அந்த விநாடி என் இதயத் துடிப்பு கிட்டத் தட்ட நின்றுவிட்டது.

இருக்கையில் ஓட்டுனரை காணவில்லை!....? ஆனால், பேருந்து மெதுவாக ஊர்ந்து கொண்டிருந்தது....!

எனக்கு பயத்தில் மயக்கம் வருவது போல் இருந்தது. ஓட்டுனருக்கு பின் இருக்கையில் அமர்ந்துவிட்டேன். டீக்கடைக்காரர் சொன்னது உண்மைதான். அது தன் செயலை நடத்தி விட்டது. ஓரளவு தைரியத்தை எனக்குள் ஏற்படுத்திக்கொண்டு, பேருந்தில் இருந்து குதித்து விடலாம் என்று நினைத்து இருக்கையிலிருந்து எழ முற்பட்ட பொழுது,

பேருந்து மெதுவாக நின்றது.....!?

என்ன நடக்கப்போகிறதோ? ..... என்று யோசித்த போது....

என் தோளை ஒரு முரட்டு கை பற்றி இறுக்கியது.......!!!!!

இந்த கதையின் முடிவை உங்களால் ஊகிக்க முடிகிறதா?. ஊகித்து பதில் அனுப்புங்கள். அந்த திகில் முடிவை அடுத்த வாரம் எழுதுகிறேன் என்று சொல்லியிருந்தேன். இதோ முடிவு.

திருப்பி பார்த்தேன்!  கண்டக்டர் கோபத்துடன் நின்றிருந்தார்!.   "ஏன் சார் இப்படி பண்றீங்க?  நாங்களே பஸ் பிரேக் டவுன் ஆனதால தள்ள முடியாம ஓட்டுனரையும் சேர்த்துகிட்டு தள்ளிவருகிறோம்!.  நீங்க ஜம்முனு ஏறி உட்கார்ந்துகிட்டீங்க! இங்குதான் பேருந்தை இரவு முழுதும் நிருத்தப்போகிறோம். இறங்குங்க! என்றார்.

(அடிப்பதற்கு ஆள் அனுப்புவீர்கள் என்றுதான் இப்போதைக்கு முகவரி கொடுக்க வில்லை!)


       

4 comments:

  1. முடிவை சீக்கிரம் சொல்லுங்க. சஸ்பென்ஸ் தாங்கல

    ReplyDelete
  2. நண்பரே பிரமாதம் .உங்க சிறுகதை முதலிலிருந்து கடைசி வரை சுவாரஷ்யம் குறையாமல் இருக்கிறது .சரி முடிவை சீக்கிரம் சொல்லுங்க சார் . பதட்டம் அதிகரிக்குது .நீங்களே தொடர்ந்து எழுதுங்க. முடிவை சொல்லுங்கய்யா!

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள் சுரேஷ்! இந்த விசயம் நம்மளோட இருக்கட்டும்.

    ReplyDelete