Showing posts with label இப்படிக்கு மதி. Show all posts
Showing posts with label இப்படிக்கு மதி. Show all posts

Dec 13, 2012

ஒரு டிசம்பர் தினம்!



                    எம்.ஜி.ஆர் நினைவிடம் புதுப்பிக்கப்பட்டுள்ளது.   மெரினா பார்க்கலாம்,  எம்.ஜி.ஆர் சமாதி பார்கலாம்  என்று எங்கோ ஒரு கிராமத்தில் இருந்து சுற்றுலா கிளம்பி வரும்,  எம்.ஜி.ஆரை இன்றும் தெய்வமாக நினைக்கும் மக்களை மகிழ்ச்சிப்படுத்தும்.

                  ஆனால் "அங்கு இரட்டை இலை சின்னம் அமைக்கப்பட்டுள்ளது.  அரசின் செலவில் கட்சி சின்னம் அமைப்பது தவறு"  என்று தி.மு.காவை சேர்ந்த ஆர்.எஸ்.பாரதி என்பவர் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்க,   அரசின் சார்பில்,   "அது இரட்டை இலை சின்னம் இல்லை...... அது வெற்றியை குறிக்கும் சின்னம்!" என்றும், "பறக்கும் குதிரையின் இறகுகள்".  என்றும் வாதிட்டுள்ளார்கள்.

                  எனக்கு, எப்படி படுத்துக்கொண்டு  பார்த்தாலும் அப்படியெல்லாம் தெரியவில்லை!  உங்களுக்கு?


*******************************************************************************************************************

                எங்கள் பகுதியில் ஒரு குறிப்பிட்ட தினசரி பத்திரிக்கை  தவிர்த்து வேறு தின பத்திரிக்கைகள் வராததால், ஏதோ தினசரி செய்திகளை அறிந்துகொள்ளலாம் என்ற எண்ணத்தில் அதை வாங்கிக்கொண்டிருக்கிறேன்.  கடந்த வாரம் ஒருநாள் எங்கள் வீட்டுக்கு போடப்பட்டிருந்த பத்திரிக்கையுடன் ஒரு காலண்டரும் சேர்த்து போட்டிருந்தார்கள்.  அதில் விலை பற்றி குறிப்பிடாததால்  நான் இலவசம் என்று எண்ணியிருந்தேன்.  பிறகுதான் கவனித்தேன்.  அன்றைய பத்திரிக்கை  விலை ரூபாய் 12 என்று. (மற்ற நாட்களில் ரூ.4)   காலண்டர் விலை ரூ 8 என்று மறைமுகமாக நிர்னையித்திருந்தார்கள்.   

                      எனக்கு வருடந்தோறும் இலவசமாக நான்கைந்து காலண்டர்கள் கிடைப்பதால்,  அந்த ஏஜெண்டிடம் எனக்கு இந்த காலண்டர் வேண்டாம்,  பில் தொகையில் ரூ.8 கழித்துக்கொள்ளுங்கள் என்றேன்.   அதற்க்கு அவர் முடியாது சார், அது  அன்றைய பத்திரிக்கையின்  விலை.  சேர்த்து தான் வழங்கப்படும் என்றார்.     நான் ஏமாற்றப்படுகிறேன் என்பதை உணர்ந்து இந்த தின பத்திரிக்கையின் மதுரை  வினியோக அலுவலகத்திற்க்கு ஃபோன் செய்து.  "ஊரெல்லாம்  அநியாயம் நடப்பதாக  சுட்டிக்காட்டும் உங்கள் அநியாயத்தை எந்த பத்திரிக்கையில் பிரசுரிப்பது" என்று சற்றே, கோபமாக கேட்டபிறகு  அந்த காலண்டரை திரும்ப எடுத்துக்கொள்வதாக சொன்னார்கள்.   பின்னே,  இதை அவர்களிடம் கேட்காமல் டீ கடை  பெஞ்சில் உட்கார்ந்துகொண்டு பேசிக்கொண்டா இருக்கமுடியும்? 
                      எனக்கு 8 ரூபாய் செலுத்தவேண்டும் என்ற கோபம் இல்லை,  "என் விருப்பம் இல்லாமல் என்னிடம் ஒரு பொருளை விற்பனை செய்யப்பட்டவிதம் "  என்னை கோபப்படுத்தியது!  

இந்த நிகழ்வை கேட்டால் கிடைக்கும் ask இல் பதிவிட்டதன்மூலம்  என் நிலைப்பாட்டிற்க்கு ஆதரவு வழங்கிய நண்பர்களுக்கும்,  கேபிள் சங்கர்  அவர்களுக்கும் நன்றி!  

                
********************************************************************************************************************      

             
                       
 ஒரு  யூ ட்யூப்   வீடியோ இந்த நிமிடம் வரை 164,003,004 ஹிட்ஸ்களை பெற்றிருக்கிறது.  இது யூ ட்யூப்  வரலாற்றில் அதிக பட்ச எண்ணிக்கையாகும்.     தென்கொரிய பாப் பாடகர் PSY ஆடிப்பாடி வெளியிட்ட இந்த வீடியோ   "கங்கணம் ஸ்டைல்"  என்று அழைக்கப்படுகிறது.   இந்த ஸ்டைல் நடனம் இன்று உலகம் முழுதும் பரபரவென்று பற்றி பரவி  வருகிறது.           

               எல்லோரும் கலாச்சாரத்தை ஒரு வழிபண்ண கங்கணம் கட்டிக்கிட்டுதான்  திரியுறாங்க!  
  
  
                      



*********************************************************************************************************************





                    நமது உறவுப்பினைப்புகளை  எந்த எல்லை வரை உங்களால் ஞாபகம் வைத்துக்கொள்ள முடியும்!.   உங்கள் அத்தையின் தம்பியுடைய மாமனாரை எங்காவது ஒரு குடும்ப விழாவில்  சந்திக்கும் பொழுது என்ன உறவு சொல்லி அழைப்பது  என்பன போன்ற குழப்பங்கள் ஏற்ப்பட்டிருக்கிறதா?  கண்டிப்பாக ஏற்பட்டிருக்கும்!.   அதுமிட்டுமில்லாமல் நம் பெற்றோர்கள் நமக்கு அறிமுகப்பதத்திவைத்த உறவுகள் அனைவரையும் ஞாபகத்தில் கொள்ள நம்மால் இயலவில்லை.     நம் நிலைமை இப்படி இருக்கும்பொழுது,  நாம் நமது வாரிசுகளுக்கு அவர்களை எப்படி அறிமுகபடுத்த முடியும்?

                        இந்த பிரச்சனைகளுக்கு தீர்வுகாண இணையத்தில் தேடியபொழுது எனக்கு ஒரு அருமையான family tree -யை உருவாக்கக்கூடிய ஒரு இணையத்தளம் கிடைத்தது.

              அது   www.geni.com   பயன்படுத்த எளிதாகவும், உபயோகமாகவும் இருந்த்தது.    இதைவிட சிறந்ததாக வேறு இணையதளம் இருந்தால் எனக்கு சிபாரிசு செய்யவும்!
           
                " ஏன்னா உறவு அறுந்துடக்கூடாது பாருங்க!, அதான்!!"


*********************************************************************************************************************

நண்பர் விஜயகுமாருடன்  நாமக்கல்லில்  பின்னிரவு பேருந்தை கணக்கில் கொண்டு இரவுக்காட்சி  "நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்"  படத்திற்க்கு எவ்வித எதிர்பார்புமின்றி சென்றேன்!   ஒரு வருடமாக காதலித்து,  மூன்று நாளில் திருமணத்திற்க்கு   தயாராகும் கதாநாயகன்  நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடும் பொழுது ஒரு விபத்து, அதன்மூலம்  கடந்த ஒருவருட ஞாபகமறதி(காதலித்த பெண்ணையும், தன் திருமணத்தையும் கூட மறந்து விட்டார்)  அதைத்தொடர்ந்து,   அவரின்  நண்பர்கள்  மாப்பிள்ளை வீட்டாருக்கும், பெண்ணுக்கும் தெரியாமல்,  சிகிச்சை,  திருமணம்  என்று கஷ்டப்படுகிறார்கள்!   நடிகர்கள் அனைவரும் சீரியசாக நடிக்க பார்க்கும் ரசிகர்களுக்கு  அவ்வளவும் காமெடி!    நீண்ட நாட்களுக்குப்பிறகு ஒரு முழுப்படத்தையும் ரசித்து சிரித்தேன்!   
நன்றி புதுமுக இயாக்குனர் பாலாஜி தரணீதரன்! 
 பீட்ஸா மாதிரி எளிமை & நன்று!

********************************************************************************************************************


ஒரு கொசு'றுத் தகவல்    

இன்று நமக்கெல்லாம் மெகா வில்லனாக அவதாரம் எடுத்திருக்கும்,  கொசுவுக்கு 47 பற்கள்,  மழைத்துளிகளிடையே நனையாமல் புகுந்து பறக்கக்கூடிய வல்லமை பெற்றவை!.  பறக்கும் பொழுது ஒரு வினாடிக்கு 300 முதல் 600 முறை சிறகடிக்கும்.  அதுதான் நாம் காதுக்கு கேட்கும் அந்த ரீங்காரம்!  பெண்கொசுக்கள் மட்டுமே கடிக்கக்கூடியவை! 

                                   பிறந்து ஒரு வாரமே வாழும் இவை  உலகம் முழுவதும் வருடத்திற்கு 10 லட்சம் மனிதர்களை கொன்று குவிக்கிறது! 

நான் கொசு!

*********************************************************************************************************************



கிறிஸ்து பிறப்பதற்க்கு 2000 ஆண்டுகளுக்கு முன்பு தென் ஆப்பிரிக்காவில் வசித்த மாயன் என்ற ஒரு குறிப்பிட்ட நாகரீக வம்ஸத்தினர் எழுதிய காலண்டர் டிசம்பர் 21, 2012 வரை மட்டுமே உள்ளதாகவும், அதன் பிறகு அந்த காலண்டரில் விசயங்கள் இல்லாததால் டிசம்பர் 21 அன்று உலகம் அழிந்து விடும் என்று அறிவு ஜீவிகள் முடிவு செய்திருக்கிறார்கள்.

இதை ஏன் அப்படி நினைக்க வேண்டும், கீழ்க்கண்ட பிற காரணங்கள் இருக்கலாம் அல்லவா?

1. அந்த காலண்டரை செதுக்கிக்கொண்டிருக்கும் பொழுது, உழி உடைந்து போயிருக்கலாம்! அல்லது கூர்மலுங்கி இருக்கலாம்!, அதன் பிறகு வேறு வேலை இருந்து அதை கவனிக்க போயிருக்கலாம்!

2. அந்த வேலையை மெனக்கெட்டு செய்துகொண்டிருந்த நபர் கூலி கட்டுபடியாகாமல் ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு போயிருக்கலாம்!

3. இந்த நூற்றாண்டில் வாழும் நம்மை ஏப்ரல் ஃபூல் செய்ய முயற்சி செய்து, டிசம்பர் ஃபூல் செய்திருக்கலாம்!.

4. பாதி வேலை பார்த்துக்கொண்டிருக்கும்பொழுது, திடீரென்று ஞானோதயம் ஏற்பட்டு, இந்த வேலையை பார்க்கிறதுக்கு, பேசாம டினோசருக்கு பேன் பார்க்க போகலாம் என்று நினைத்திருக்கலாம்!.

Nov 20, 2012

கருத்து சொல்லலாமா?

     கோடிக்கணக்கில் பணத்தை கொட்டி மெகா ஸ்டார்களை வைத்து எடுத்த சமீபத்திய படங்களான முகமூடி, தாண்டவம், மாற்றான் போன்றவை திரைக்கதையில் சொதப்பியதால் தியேட்டரை விட்டு நன்றாக ஓடுகிறது (தியேட்டரைவிட்டு) .    சூர்யா+கே.வி.ஆனந்த் கூட்டணி என்ற ஒரே காரணத்தினால் 'மாற்றான்' நன்றாக இருக்கும் என்று நம்பி குடும்பத்துடன் கடந்த சனிக்கிழமை  சென்றபொழுது தியேட்டரில் எங்களுடன் சேர்த்து மொத்தம் 13 பேர் இருந்தார்கள்.   ஆனால் எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் சென்று  சமீபத்தில் பார்த்து ரசித்த படம் பீட்சா.  ஒரு டார்ச் லைட் வெளிச்சத்தை  வைத்து நல்லாதான் பயமுறுத்துராங்க!   நல்ல திரைக்கதை மற்றும் இயக்கம்.  கலைஞர் டி‌வி நாளைய இயக்குனரில் வெற்றிபெற்ற  கார்த்திக் சுப்பாராஜ் தன் திறமையை அகன்ற திரையிலும் நிரூபித்திருக்கிறார்.
                             
*********************************************************************************************************************
       
          இந்த தீபாவளிக்கு முன்பும்   பின்பும் தென்மாவட்டங்களில் நடந்த படுகொலைகள் அதை ஒட்டி நடந்த கலவரங்கள்,  கடையடைப்புகள், போக்குவரத்து நிறுத்தம் என்று ஒரே கலவர பூமியாக இருந்தது.    தீபாவளியை நிம்மதியாக கொண்டாட முடியாத சூழ்நிலை இப்பகுதிகளில் நிலவியது..   காவல் துறை உதவி ஆய்வாளர் படுகொலை செய்யப்பட்டது இதன் உச்சம்!

                இப்பகுதிகளில் வருடந்தோறும் நிகழும் இம்மாதிரியான சம்பவங்களுக்கு அடிப்படை காரணத்தை அரசு அலசி ஆராய வேண்டும்.

                தொழில், வேலை வாய்ப்புகள்   இம்மாவட்டங்களில் வளர்ச்சியடையாததே   முதன்மை காரணம்.   சமீபத்தில்கூட  பல்வேறு தொழிற்சாலைகளுக்கு போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களில்  கூட சென்னையை சுற்றியே பல்வேறு  தொழிற்சாலைகள் அமைய வாய்ப்பு வளங்கப்பட்டுள்ளன.   தென் மாவட்டங்களான ராமநாதபுரம், சிவகங்கை போன்ற மாவட்டங்கள்  தொடர்ந்து புறக்கணிக்கப்படுகின்றன.  

                                      தொழில்,  வேலை வாய்ப்புகள்  பெறுகியுள்ள நகரங்களில் இத்தகைய சாதியக்கலவரங்கள் ஏற்பட வாய்ப்பில்லாமல் சமூக ஒற்றுமை நிலவுகிறது.

                                  இனியாவது சென்னையை தாண்டி தென் மாவட்டங்களுக்கு ஒன்றிரண்டு தொழிற்சாலைகளை தள்ளிவிட்டால் மாநிலம் சமச்சீரான வளர்ச்சிகண்டு, சாதிய கலவரங்களும் ஒழிய வாய்ப்பு ஏற்ப்படும்.


இதெல்லாம் எனக்கே தோணுதே...., உங்களுக்கு தோணாமலா........ இருக்கும்ம்ம்.......!
*********************************************************************************************************************
டிவிட்டியத்தில் சில: 

பெட்ரோல் விலை ரூ.1.20 குறைப்பு!- இதுதான் தெளிய வச்சு அடிக்கிறதோ?

           
கடித்த கொசுவை கையில் பிடித்து பார்த்த பிறகு மகிழ்ச்சி ஏற்படுகிறது: அது டெங்கு கொசு இல்லை என உறுதிபடுத்தபட்டதால்   

இன்வெர்ட்டர் பயன் படுத்தாதவர்களின் மின் பங்கை அபகரிக்கும் குற்ற உணர்வு மின்வெட்டு சமயத்தில் ஏற்படுகிறது!       

ஒரு தடவை பொய் பேசினாலும், மை பூசினாலும் கடைசிவரைக்கும் மெயின்டைன் பண்ணனும் # பேக்ட்

எனக்கு ஒரு விசயம் புரியவில்லை! #இரண்டுமணி நேரம் இடைவெளிவிட்டு, விட்டு, விளம்பரத்தை காட்டி அதற்க்கு ஏன் நீயா நானா என்று பெயர் வைத்தார்கள்?

தமிழ் நாட்டில் பெரும்பாலானவர்கள், பெரும்பாலானவர்களுக்கு செய்யும் உதவி "சார் சைடு ஸ்டாண்ட்"

இரண்டாவது உதவி "லைட் எரியுது!"   

படித்து ரசித்த டிவிட்:

  குழந்தையாய் இருக்கும்பொழுது கோடிக்கணக்கில் இருக்கும் உலகஅதிசயங்கள் வளர்ந்தவுடன் வெறும் ஏழாகி விடுகின்றன

*********************************************************************************************************************

       ராம் படத்திற்காக யுவன் சங்கர் ராஜ இசையில், ஜேசுதாஸ் தன்  இனிமையான குரலில் வசீகரித்த பாடல்,   சூப்பர் சிங்கரில் சந்தோசின் குரலில் மேலும் ஒரு ஈர்ப்பை ஏற்ப்படுத்தியது.   அனுபவித்து பாடுவது என்பது இதுதான்!



*****************************************************************************************************************

கொஞ்சம் தாமதமாகிவிட்டது! 

ஜேர்மன் நாட்டிலிருந்து அனுப்பப்பட்ட கடிதம் 49 ஆண்டுகளுக்கு பிறகு பிரிட்டனில் விநியோகம் செய்யப்பட்டு உள்ளது. ஜேர்மனியின் பான் நகருக்கு அருகே உள்ள பேட் காடஸ்பெர்க்கிலிருந்து கடந்த 1963ஆம் ஆண்டு மார்ச் மாதம் 13ஆம் திகதி கடிதமொன்று, பிரிட்டனில் உள்ள பேனா நண்பருக்கு அனுப்பப்பட்டது. இந்த கடிதம் 49 ஆண்டுகளுக்கு பின், கடந்த மாதம் 29ஆம் திகதி பிரிட்டனின் பெர்க்ஷயர் பகுதியில் உள்ள டெரிக் லெவிசுக்க கிடைத்துள்ளது. 

இதுகுறித்து லெவிஸ் கூறுகையில், ஜேர்மனியில் உள்ள கட்ரன் ரென்ட்ராப் என்ற பெண்ணும், நானும் 17 வயதிலிருந்து பேனா நண்பர்களாக இருந்தோம். அவளது தந்தையின் பிரிட்டன் வருகை குறித்து எனக்கு எழுதிய கடிதம் தான், இப்போது என் கையில் கிடைத்துள்ளது. அந்த காலத்தில் அஞ்சல் குறியீட்டு எண் நடைமுறையில் இல்லை. இது கடிதம் தாமதமாக கிடைத்ததற்கு ஒரு காரணமாக இருக்கும் என நினைக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். இந்த தபால் 49 ஆண்டுகள் தாமதமாக வினியோகிக்கப்பட்டதற்கு நாங்கள் காரணமில்லை என ராயல் மெயில் நிறுவனம் தெரிவித்து உள்ளது.
                                  தாமதமானாலும் சரியான முகவரிக்கு கொடுத்தமா!?இல்லையா? அத பாருங்க!
**********************************************************
    மும்பை கடையடைப்பை பற்றி கருத்து சொன்ன பெண்ணையும், அதற்க்கு லைக் போட்ட பெண்ணையும் மும்பை காவல் துறை கைது செய்திருக்கிறார்கள்!   கருத்து பரிமாற்றம் என்பது ஒரு ஆக்கபூர்வமான ஒரு விவாதம் தான்.  கலைஞரும், பவர் ஸ்டாரும் நினைத்தால் முக்கால்வாசி FACEBOOK தமிழர்கள் மீது புகார் கொடுக்கலாம்.    அந்த பெண்ணின் கருத்து சரியல்ல எனில் அதில் பதிலளிக்க வாய்ப்புள்ளது.  அதை விடுத்து, புகார் செய்தார்கள் என்பதற்காக கைது என்பது,  என்ன ஒரு  .......!

                        அய்யோ .......இந்த மாதிரி நான் கருத்து சொல்லலாமா......?  
இது சம்பந்தமாக  தற்போதைய செய்தி:

Aug 31, 2012

காந்தியின் ஆன்மா அக்டோபர் 2-ல் சாந்தி அடையட்டும்!

                      BSNL இணைய இணைப்பு  வைத்துள்ளேன்.  கடந்த மூன்று மாதங்களாக  தொலைபேசி பில்லில்  One time charges என்ற பெயரில் சுமார் ரூ. 100 வீதம் கட்டணம் சேர்த்துள்ளார்கள்.  விவரத்தில் அந்த தொகை Hungma Music on Demand என்ற சர்விஸ் க்காக பிடித்துள்ளதாக இருந்தது.  இது சம்பந்தமாக காரைக்குடி BSNL அதிகாரியை தொடர்புகொண்டு கேட்டதற்க்கு "உங்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டிருப்பார்கள்.  நீங்கள் சம்மதித்து add on செய்திருப்பீர்கள்" என்றார்.  நான் இல்லை என்று மறுத்தபோது, "உங்கள் பிள்ளைகள் இதை செய்திருக்கலாம்" என்றார்.   அவர்களும் அப்படி செய்யவில்லை என்று உறுதிபட கூறிய பொழுதும் அவர் ஏற்றுக்கொள்ளவில்லை.  

                  சில நாட்கள் கழித்து இது சம்பந்தமாக இன்னொரு அதிகாரியிடம்   "தனியார் தொலைபேசி நிறுவனங்கள் தான் இந்த மாதிரி கோல்மால் வேலைகளை செய்யும் என்றால் பொதுத்துறை நிறுவனமான BSNL லுமா இப்படி" என்று காரமாக கேட்டபிறகு "இந்த மாதிரி add on சர்வீஸ்-களை தனியாருக்கு விட்டுவிட்டதாகவும் அவர்களே இப்படி சேர்த்திருக்கலாம்" என்றார்.   எனக்கு மேற்கொண்டு என்ன பேசுவதென்று தெரியவில்லை.

Dec 5, 2011

ஏன் இந்த கொலை வெறி?

"why this கொலைவெறி" பாடல் மொழி கடந்து நாடு கடந்து வெறித்தனமாக ஹிட் ஆகிவிட்டது.   இதை தனுஷ் உட்பட அதை உருவாக்கிய டீமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.  பாலிவுட் பாடகர் சோனு நிகாமும் இந்த பாடலில் இம்ப்ரெஸ் ஆகி தன மகனை பாட வைத்திருக்கிறார்!   சுட்டி பாட்டு  இனிமை!  


***************************************************************************************
சில வாரங்களுக்கு முன்பு  பெய்த மழை தமிழகத்தை குறிப்பாக கடலோர மாவட்டங்களை உண்டு இல்லை என ஆக்கிவிட்டது.   விவசாயிகளின் வயிற்றில் பாலை வார்த்தாலும், ஆங்காங்கே பாதிப்புகளும் சற்றே அதிகம்.
ஏரிகள், கண்மாய்கள் நிரம்பி காண கண்கொள்ளா காட்சியாக இருக்கிறது.  இப்படி கொட்டிய சென்ற வார மழை நாளில் நான் நன்றாக நனைந்து விட்டேன்.   பக்கத்தில் இருந்தவர் நனையவில்லை.  கையில் குடை இருந்ததது.  பிறகு என்ன குடை பிடிக்க வேண்டியது தானே என்கிறீர்களா?  பேருந்தில் குடை பிடித்தால் பக்கத்தில் இருப்பவருக்கு இடிக்காதா? அதனால் குடை பிடிக்கவில்லை.   சரி பேருந்து கட்டணங்களை எற்றிவிட்டார்களே இந்த ஓட்டை உடைசல் பேருந்துகளை கொஞ்சம் சரி பண்ணுங்கள் இல்லையேல் எடைக்கு போடுங்களேன்!

பேருந்து கட்டண  உயர்வு என்றவுடன் எனக்கு ஒரு கேள்வி எழுகிறது.
குறைவான கட்டணம் நீண்ட நாட்களாக வாங்கியதால் போக்குவரத்து துறைக்கு பேரிழப்பு என்று சொல்கிறார்களே,  இந்த தனியார் பேருந்துகளும் அதே கட்டணத்தை தானே இவ்வளவு நாட்களும் வாங்கிகொண்டிருந்தார்கள்!   
அவர்களும் நட்டத்தில்தான் வண்டி ஒட்டிக்கொண்டிருந்தார்களா?

                       கட்டணத்த ஏத்துங்க வேண்டாம்னு சொல்லல கொஞ்சமா ஏத்துங்க? 

Nov 10, 2011

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்...!


இன்றைய தமிழக முதல்வரின் சில துக்ளத்தனமான அதிரடி அறிவிப்புகளை 
பார்க்கும் பொழுது எதிர்க்கட்சி தலைவர் மேல் வெறுப்பு இருக்க வேண்டியதுதான்! அதற்காக அவர்கள் கொண்டு வந்த சில நல்ல விஷயங்களை இப்படியா கண்மூடிதானமாக மாற்றுவது என்ற ஆதங்கம் சாமான்ய மக்களிடம் ஏற்பட்டிருப்பது இயல்பு.  அநேகமாக முதல்வருக்கு சருக்கப்போகும் இரண்டாவது தவறான முடிவு இதுவாகத்தான் இருக்கும் என்று எண்ணுகிறேன்! 

         சமீபத்தில் படித்து ரசித்த ஆதவன் தீட்சண்யாவின் கவிதை!


Aug 30, 2011

கமல்+கிரேசி=காமெடி சரவெடி!

கமல்+கிரேசி=காமெடி சரவெடி!
கமல்-கிரேசி மோகன் இணைந்தால்  படம் முழுவதும் தாராளமாக ரசித்து சிரித்து, வீட்டுக்கு வந்தும் சிரிக்கலாம். குடும்பத்துடன் தியேட்டருக்கு நம்பி செல்லலாம். இந்த காமெடி கூட்டணி மீண்டும் இணைவதாக ஒரு செய்தி எனக்கு இப்போதே ஆர்வத்தை ஏற்படுத்திவிட்டது. படத்திற்கு தலைப்பு “நண்பர்களும் 40 திருடர்களும்”  என்பது தகவல். கமல் தற்போது “விஸ்வருபம்” படவேளைகளில் இருக்கிறார். “மன்மதன் அம்பு” பார்த்து நொந்த மனங்களுக்கு விரைவில் ஆறுதல் தாங்க கமல் சார்.
=============================================================================
குற்றமுள்ள நெஞ்சு!
ஒரு வழியாக அன்னா ஹசாரேவின் உண்ணா விரதம் நல்ல விதமாக முடிந்திருக்கிறது.  லோக் பால் வராமல் தடுக்க,   ஏகப்பட்ட நோ பால்களை (முட்டுக்கட்டைகளை) போட்டுப்பார்த்துவிட்டு முடியாமல் ஒருவழியாக அரைமனதாக கோரிக்கைளை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். லோக்பால் குழந்தையை ஆரோக்கியமாக  பிரசவிக்கவிடுவார்களா? பொறுத்திருந்து பார்க்கவேண்டும்.
அன்னா  ஹாசாரே பற்றி ஆளாளுக்கு ஏதோதோ சொன்னார்கள். “பாராளுமன்றத்துக்கு எதிராக ஒரு தனிமனிதரா?”, “ஊழல்வாதி” “அமெரிக்க பின்னணி” என்றெல்லாம்!.  அணுசக்தி உடன்பாடு, சிலர் வெற்றிபெற்ற  ரகசியம், சிலர்  பதவிக்கு வந்த ரகசியம் இவற்றிலெல்லாம் நமக்கு மேலிருக்கும் சரவ வல்லமை படைத்த அந்த நாட்டாமை?யின் பின்னணி இருப்பதாக பரவலாக தெரியும்! ஆனால் ஜன்லோக்பால் மசோதாவை நிறைவேற்றத் தயங்கியத்தின் உண்மையான காரணம் “நமக்குதான் குழி தோண்டுகிறார்கள்” என்பதை சிலர் உணர்ந்ததால்!. =============================================================================

Jul 30, 2011

நொறுக்குத்தீனி!

                 “எப்படி இருந்த இருந்த மதுரை  மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் இப்படி ஆயிடுச்சே”   என்று மதுரை வந்து செல்லும் பயணிகள் வருத்தப்பட்டுக்கொண்டிருக்கையில், கலெக்டர் சகாயம் களத்தில் இறங்கி மாட்டுத்தாவணியை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்டிருக்கிறார்.  அடைசலான கடைகளை இல்லாமல், இப்போது ஒரு நேர்த்தி தெரிகிறது, மக்கள் நடந்துசெல்லும் பாதையில் இருந்த முறுக்கு கடை, டீ கடை, பழக்கடை என்று சகலமும் அகற்றப்பட்டுள்ளது நல்ல விசயம்.  நியாயமான கழிவறை கட்டணம் வாங்குகிறார்கள் இன்று வரை.  எத்தனை நாட்களுக்கு தொடரும் என்பது அல்லக்கைகளை அடக்கி வைக்கும் ஆட்சியாளர்களின் கைகளில்!
_____________________________________________________________________________   
                    
                          சமீபத்தில் எனக்கும் என்  நண்பர்கள் வட்டாரத்திற்கும் ஒரு மெயில் பார்வர்ட் ஆகி வந்தது.  அதில்  ஒரு வயதான மூதாட்டியின் படத்தை போட்டும், இந்த மெயிலை ஒரு பத்து பேருக்கு பார்வர்ட் செய்ய வேண்டும், இல்லையேல் அவர்களுக்கு அது நடக்கும், இது நடக்கும் என்று ஒரு பீதியை கிளப்பி  அந்த மெயில் இருந்தது.   அப்படி பார்வர்ட் செய்தால் அவர்களுக்கு நல்லது நடக்குமாம்.   அந்த மெயிலை எனக்கு பார்வர்ட் செய்தவர்களுக்கு நடந்த நல்லவிசயம் என்னவென்று எனக்கு தெரியாது.  ஆனால் அந்த மெயிலை பார்வர்ட் செய்யாத எனக்கு கெட்டவை எதுவும் இன்றுவரை நடக்கவில்லை என்பது உண்மை.      பலவருடங்களுக்கு முன்பு பிட் நோட்டீஸ் அடித்து வெங்கடாசலபதி பெயரை சொல்லி இப்படி வரும், இப்போது நாவீனமாகி விட்டதால் இமெயிலில் அந்த மூடநம்பிக்கை விதைக்கப்படுகிறது.  அதுவும் வடக்கே இருந்து. 
        எனக்கு இன்னொரு  சந்தேகம். யாரோ ஒரு விவகாரம் பிடிச்ச ஆள், நம் இந்தியாவில் எத்தனை முட்டாள்கள் இருக்கிறார்கள்? என்று கணக்கெடுக்கிறார்களோ! என்னவோ! ( பார்வர்ட் செய்த நண்பர்கள் கோபப்படக்கூடாது ).
 யாராவது அந்த மெயிலை பார்க்க வேண்டும் என்றால் email ID கொடுங்கள் தவறாமல் அனுப்பிவைக்கிறேன்!
_____________________________________________________________________________

Mar 21, 2011

நொறுக்குத்தீனி!

அவ்வப்பொழுது எட்டிப்பார்த்து, என்ன ஒண்ணுமே போடலையா, என்று கேட்கும் அன்பர்கள் மன்னிக்கவும்.  தாங்கள் இவ்வளவு விரைவில் ஆயிரத்தை தாண்டி ஹிட் அடிப்பீர்கள் என்று எதிர்பார்க்கவில்லை. தங்கள் தொடர்ந்த ஆதரவிற்கும் கருத்திற்கும் நன்றி!  எழுத நிறைய விசயங்கள் இருக்கிறது. ஆனால் நேரம்? .... இனி வாரம் குறைந்த பட்சம் ஒருமுறையாவது  எழுத முயற்சிக்கிறேன்.
=========================================================================
எப்போதும் இல்லாத வகையில் இந்த சட்டமன்ற தேர்தலுக்கு தேர்தல் கமிஷன் மிகவும் கெடுபிடியாக இருப்பது சில பணக்கார கட்சிகளுக்கு வயிற்றை கலக்கியிருக்கிறது.   ஆங்காங்கே வாகன சோதனைகளில் கட்டு கட்டாக ரூபாய்களும், நகைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. முறையான ஆவணங்கள் இருந்தால் கைக்கு திரும்பி வரும். இல்லையேல் அரசு கஜானாவுக்கு போவதில் தப்பில்லை.  நேர்மையான தேர்தலை நடத்துவதில் தேர்தல் கமிஷன் முனைப்பு காட்டுகிறது.  ஆனால் நேர்மையான ஒரு வேட்பாளரை சட்டசபைக்கு அனுப்புவதில் வாக்காளர்கலாகிய நாம்தான்  கவனம் செலுத்த வேண்டும்.
=========================================================================
ஆனந்த விகடன் 23.3.2011  தேதியிட்ட இதழில் அரசியல் தலைவர்களுக்கு, சமுகத்தில் மரியாதை மிக்க மனிதர்கள்  கீழ்க்கண்டவாறு மதிப்பெண் வழங்கி  இருக்கிறார்கள். பாஸ் செய்தவர்களுக்கு வாழ்த்துக்கள்!. இன்னும் 
நிறைய மார்க் வாங்க முயற்சி செய்யுங்க.  பெயில் ஆனவர்களுக்கு - நல்லா படிச்சி  குறைந்த பட்சம் பாஸ் செய்ய பாருங்க.
       1.       கருணாநிதி   -4௦
       2.       ஜெயலலிதா  –35
3.       விஜயகாந்த்   –21
4.       வைகோ      -41
5.       ராமதாஸ்     -31
6.       ஸ்டாலின்    -31
7.       தா.பாண்டியன் –42
8.       சரத்குமார்     -10
9.       திருமாவளவன்_33
10.   தங்கபாலு     _09

அரசியல் கட்சிகள் போட்டி போட்டு இலவசங்களை வாரி வழங்க முற்பட்டுள்ளன.   இலவசங்களை கொடுத்து அப்பாவி மக்களை மயக்கலாம்.  மக்களும் எதோ தங்கள் காசு திரும்பி வந்ததே வந்த வரை லாபம் என்று நினைக்கலாம்.  ஆனால் இது எங்கு போய் முடியும் என்று தெரியவில்லை. இருந்தாலும் சில கட்சிகள் நிறைய இலவசங்களை வாரி வழங்கி விட்டதால், மற்ற கட்சிகள் என்ன செய்யாலாம் என்று மூளையை(?) கசக்கி சிந்தித்து கொண்டிருக்கின்றன. அவர்களுக்காக நான் உட்கார்ந்து யோசித்து கீழ்க்கண்ட சலுகைகளை தருகிறேன்.

1.   ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு நபருக்கு தினமும் நான்கு இட்லி கொஞ்சம் கெட்டி சட்னி (யோசனைக்கு  நன்றி மதி-தினமணி)

2.    கல்லூரி மாணவ மாணவிகளுக்கு மாதம் 1000 SMS  இலவசம்.
(கடி ஜோக்ஸ் தயாரித்து வழங்கப்படும்)
3.    மாதம் ஒரு நான்கு சினிமா டிக்கெட் இலவசமாக வழங்கப்படும், தி.மு.க என்றால் சனி ஞாயிறு தவிர்த்து(அன்று மானாட மயிலாட இருப்பதால்) மற்ற நாட்களில் அதுவும் கலைஞர் கதை வசனம் உள்ள படங்களுக்கு மட்டும். அ.தி.மு.க. என்றால் விஜய் படத்துக்கு.
4.  வீட்டுக்கு மாதம் 100 unit  மின்சாரம் இலவசம் (மின் வெட்டு உள்ள நேரங்களில் மட்டும்)
5.  வீட்டு வாடகையை அரசே கொடுக்கும். பிளாட் பாரத்தில் வசிப்பவர்களுக்கு வருடத்திற்கு இரண்டு பாய், இரண்டு தலையணை இலவசம்.
6.   வீட்டில் சமைத்து, துணி துவைத்து, காயவைத்து, அயன் செய்து, பாத்திரம் கழுவி, வீட்டை கூட்டி, பள்ளிக்கு போகும் பையன்களை குளிக்க வைத்து பள்ளிக்கு அனுப்ப ஆயாமார்கள் அரசு சம்பளத்தில் வேலை வாய்ப்பு  பதிமூப்பு அடிப்படையில் நியமிக்கப்படும்.
7.   வரன் தேடுபவர்கள் கோரிக்கையை ஏற்று அரசாங்க மேட்ரிமோனியல் இணைய தளம் ஏற்படுத்தப்படும். www.governmentmatrimony.com
8.    டாஸ்மார்க் கடைகளில் ஒரு குவாட்டருக்கு ஒரு முட்டை இலவசம்.

      என் பையன் எனக்கு ஒன்றும் இல்லையா என்றான்!

      இதோ அவனுக்கு, 
9.   இனி பள்ளிகளில் ஹோம் வொர்க் கொடுக்கக் கூடாது.

      "ஹையா....ஜாலி"
       என் பையன் சொல்லவில்லை!  நான் தான் கூவினேன்!

சரி, நீங்களும் கொஞ்சம் யோசித்து சொல்லுங்களேன்.
  
படித்து ரசித்த தேர்தல் ஜோக்:

“தலைவர் ஏன் கோபமா இருக்கார்”

“ஒரு வீட்டுக்கு ஒட்டு கேட்கபோய், நான் உங்க உங்க வீட்டு பிள்ளை என்று சொல்லி இருக்கிறார்.  அதற்க்கு அந்த வீட்டு பெரியம்மா, ‘ஏன்  இப்படி உருப்படாம ஊரை சுத்திகிட்டு இருக்கே? என்று கேட்டு கொட்டு வைத்து விட்டாராம்”.

=============================================================
ஆச்சர்ய மனிதர்கள்:

சமீபத்தில் ஒரு செய்தி தாளில் படைத்த நெகிழ்ச்சியான செய்தி.

ஆயுள் தண்டனை பெற்று 10 வருடங்களுக்குமேல் மதுரை சிறையில் இருக்கும் தன் மகனை பார்க்க 80 வயதான தாய், பல வருடங்களாக முயற்சி செய்து சமீபத்தில் சந்தித்து பாசமழை பொழிந்தது இருக்கிறார். நெகிழ்ச்சியான நிகழ்ச்சி. அதை விட நெகிழ்ச்சியான செய்தி, அந்த மூதாட்டி  தன் மகனை சந்திப்பதற்கு மனுபோடுவதிலிருந்து அனைத்து ஏற்பாடுகளையும் செய்து அவரை பதிராமாக ஊருக்கு பேருந்து ஏற்றிவிட்டு உபகாரம்  செய்திருக்கிறார்கள் அந்த சிறை காவலர்கள்!.  நல்லமனம் வாழ்க!  
        இதை படித்துக்கொண்டிருந்த பொழுது எனக்கு ஒரு ஞாபகம் வந்தது.  ஒருமுறை எங்கள் தலைமை அலுவலகத்திலிருந்து மற்றொரு அலுவலகத்திற்கு ஒரு பெரிய தொகைக்கு பணம் கொண்டுசெல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.  அப்பொழுது எனக்கு பாதுகாப்புக்கு அதாவது பணத்திற்கு பாதுகாப்பிற்க்காக ஒரு போலீஸ்காரர் உடன் அனுப்பப்பட்டார்(எஸ்கார்ட்). போலீஸ்காரர் என்றால் பொதுவாக எப்படி இருப்பார் என்று நான் அறிந்திருந்ததால் அவருடன் சகஜமாக பழகாமல் பேருந்தில் பயணித்தேன்.  அதன் பிறகு அவரின் செயல்கள் எனக்கு மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.  போலீஸ்காரர்களை பொதுவாக தவறாக கருதியதர்க்காகவும் வருந்தினேன்.

            நான் பயணச்சீட்டு எடுக்க முற்ப்பட்டபொழுது,  அதை தடுத்து  தானே  பயணச் சீட்டு   வாங்கினார்.    பேருந்திலிருந்து இறங்கியதும் குளிர்பானம் குடிக்கலாம் என்று ஒரு கடைக்கு அழைத்துச் சென்றார்.  அதற்க்கும்  என்னை ரூபாய் கொடுக்கவிடாமல் அவரே கொடுத்தார்.  நாங்கள் கொஞ்சம் சகஜமாக நிறைய விசயங்களை பேசினோம். திரும்பி வரும் பொழுதும் என்னை செலவு செய்ய விடவில்லை.  நான் அவரை ஆச்சர்யமாக பார்த்தபொழுது அவர் "என்ன சார் ஆச்சர்யமாக பார்க்கிறீர்கள் நான் வித்தியாசமானவன்,  இதனாலேயே என்னை என் நண்பர்கள் 'மெண்டல்' என்று கூறுவார்கள்"  என்றார்.  அதன் பிறகு அவர் என்னை எங்கு பார்த்தாலும் முதலில் வணக்கம் ( salute  )  சொல்வது அவராகத்தான் இருக்கும்.  இன்று எனக்கு நல்ல நண்பர் (அவரே எனக்கு அன்று செலவு செய்ததால் அல்ல).   நேர்மையானவர்கள் சில இடங்களில் சில நேர்மை தவறியவர்களுக்கு மென்டலாகத்தான்  தெரிவார்கள்.

கேட்க-ரசிக்க!

இளையராஜா இசையமைத்து ‘நிழல்கள்’ படத்தில் இடம்பெற்ற “இது ஒரு பொன் மாலை பொழுது”  பாடலை கேட்கும் பொழுது இன்றும் நம்மை எங்கோ தாலாட்டி அழைத்துச் செல்வதை உணரமுடிகிறது!. அமைதியான சூழ்நிலையில்  கேட்டுப்பாருங்கள், நீங்களும் இந்த பாடலை அப்படி உணர்ந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்!  இதோ உங்களுக்காக.....  

Dec 26, 2010

பிச்சைராமனும் கீரபோண்டாவும்!

                நண்பர் கரிகாலன் மன்மதன் அம்பு போகலாமா? என்று கேட்டபொழுது யோசிக்காமல் போகலாம் என்று கூறிவிட்டேன்!. கமல் படம் என்றால் குறைந்த பட்ச உத்திரவாதம் இருக்கும் என்ற நம்பிக்கையிலும், இந்த பதிவில் எனது முதல் திரை விமர்சனத்தை எழுதலாம் என்ற ஆவலிலும்!.  நீண்ட நாட்களுக்கு பிறகு சிவகங்கையில் உள்ள ஒரு திரையரங்குக்கு சென்று படம் பார்த்தோம்.  பிறகுதான் தெரிந்தது மக்கள் ஏன் திரையரங்குக்கு வராமல் வீட்டில் உட்கார்ந்து ---சி.டி–யில் படம் பார்க்கிறார்கள் என்று!.  எல்லா நடிகர்களும் விபரம் தெரியாமல் கத்திக்கொண்டிருக்கிறார்கள் ‘திருட்டு சி.டி–யில் படம் பார்க்கவேண்டாம் திரையரங்கத்துக்கு வாங்க!’ என்று.