Dec 25, 2011

வெங்காயம்!

சிறுநீர் கற்களைக் கரைக்கும் வெங்காயம்!

* சிறுநீர் அடக்கிவைக்கும் பழக்கம் ஆண்களைவிட பெண்களிடம் அதிகம் உண்டு. அவ்வாறு சிறுநீரை அடக்குவதால் அதில் நுண்ணுயிரிகளின் உற்பத்தி அதிகமாகி, நோய் உண்டாகும் வாய்ப்பு அதிகரிக்கும். இந்த பழக்கத்தை தொடர்பவர்களுக்கு சிறுநீர்த்தாரைத் தொற்று வரும். இவர்கள், வெங்காயத்தை உணவில் அதிகமாகச் சேர்த்துக்கொண்டால் போதும். வெங்காயம் கழிவுப் பொருட்களை கரைத்து, அழற்சியைக் குறைத்து கழிவுகளை வெளியே தள்ளிவிடும். இதனால் சிறுநீர்த் தாரைத் தொற்றும் குறையும்.

* யூரிக் அமிலம் அதிகமாக சிறுநீர்ப் பையில் சேர்ந்தால் கற்கள் தோன்றும். வெங்காயத்தை அடிக்கடி சாப்பிட்டால் அந்த கற்கள் கரைந்துவிடும்.
வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம்ஸ அதில் உள்ள ‘அலைல் புரோப்பைல் டை சல்பைடு’ என்ற எண்ணெய். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும், நமது கண்களில் கண்ணீர் வருவதற்கும் காரணமாக அமைகிறது. வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் ஆகியவை உள்ளன.

Dec 5, 2011

ஏன் இந்த கொலை வெறி?

"why this கொலைவெறி" பாடல் மொழி கடந்து நாடு கடந்து வெறித்தனமாக ஹிட் ஆகிவிட்டது.   இதை தனுஷ் உட்பட அதை உருவாக்கிய டீமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.  பாலிவுட் பாடகர் சோனு நிகாமும் இந்த பாடலில் இம்ப்ரெஸ் ஆகி தன மகனை பாட வைத்திருக்கிறார்!   சுட்டி பாட்டு  இனிமை!  


***************************************************************************************
சில வாரங்களுக்கு முன்பு  பெய்த மழை தமிழகத்தை குறிப்பாக கடலோர மாவட்டங்களை உண்டு இல்லை என ஆக்கிவிட்டது.   விவசாயிகளின் வயிற்றில் பாலை வார்த்தாலும், ஆங்காங்கே பாதிப்புகளும் சற்றே அதிகம்.
ஏரிகள், கண்மாய்கள் நிரம்பி காண கண்கொள்ளா காட்சியாக இருக்கிறது.  இப்படி கொட்டிய சென்ற வார மழை நாளில் நான் நன்றாக நனைந்து விட்டேன்.   பக்கத்தில் இருந்தவர் நனையவில்லை.  கையில் குடை இருந்ததது.  பிறகு என்ன குடை பிடிக்க வேண்டியது தானே என்கிறீர்களா?  பேருந்தில் குடை பிடித்தால் பக்கத்தில் இருப்பவருக்கு இடிக்காதா? அதனால் குடை பிடிக்கவில்லை.   சரி பேருந்து கட்டணங்களை எற்றிவிட்டார்களே இந்த ஓட்டை உடைசல் பேருந்துகளை கொஞ்சம் சரி பண்ணுங்கள் இல்லையேல் எடைக்கு போடுங்களேன்!

பேருந்து கட்டண  உயர்வு என்றவுடன் எனக்கு ஒரு கேள்வி எழுகிறது.
குறைவான கட்டணம் நீண்ட நாட்களாக வாங்கியதால் போக்குவரத்து துறைக்கு பேரிழப்பு என்று சொல்கிறார்களே,  இந்த தனியார் பேருந்துகளும் அதே கட்டணத்தை தானே இவ்வளவு நாட்களும் வாங்கிகொண்டிருந்தார்கள்!   
அவர்களும் நட்டத்தில்தான் வண்டி ஒட்டிக்கொண்டிருந்தார்களா?

                       கட்டணத்த ஏத்துங்க வேண்டாம்னு சொல்லல கொஞ்சமா ஏத்துங்க? 

Nov 10, 2011

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்...!


இன்றைய தமிழக முதல்வரின் சில துக்ளத்தனமான அதிரடி அறிவிப்புகளை 
பார்க்கும் பொழுது எதிர்க்கட்சி தலைவர் மேல் வெறுப்பு இருக்க வேண்டியதுதான்! அதற்காக அவர்கள் கொண்டு வந்த சில நல்ல விஷயங்களை இப்படியா கண்மூடிதானமாக மாற்றுவது என்ற ஆதங்கம் சாமான்ய மக்களிடம் ஏற்பட்டிருப்பது இயல்பு.  அநேகமாக முதல்வருக்கு சருக்கப்போகும் இரண்டாவது தவறான முடிவு இதுவாகத்தான் இருக்கும் என்று எண்ணுகிறேன்! 

         சமீபத்தில் படித்து ரசித்த ஆதவன் தீட்சண்யாவின் கவிதை!


Nov 6, 2011

உடல் எடையை குறைக்க!

காபி, டீ அருந்தும் பழக்கமுடையவர்கள், அதற்கு பதிலாக (பால் சேர்க்காமல்) காபி அல்லது டீயில் எலுமிச்சை சாறு பிழிந்து அருந்தலாம். பால் சேர்த்து அருந்த விரும்புபவர்கள் பாலை, 3- 4 முறை காய்ச்சி ஆடை நீக்கிய பின் பயன்படுத்துவது நல்லது. முடிந்த வரை சர்க்கரையைத் தவிர்ப்பது நல்லது.

நம் அன்றாட வேலைகளை செய்யவும், உடல் உறுப்புகள் இயங்கவும், நமக்கு சக்தி தேவைப்படுகிறது. இந்த சக்தி, நாம் உண்ணும் உணவின் வாயிலாக கிடைக்கிறது. நாம் உட்கொள்ளும் உணவு, உடல் செலவிடும் சக்தியை காட்டிலும் அதிகமாகும் போது, உடல் அதை கொழுப்பாக மாற்றி சேமித்து வைக்கிறது. இவ்வாறு, இந்த சேமிப்பு, ஆண்டுக்கணக்கில் அதிகரித்துக் கொண்டே போகும் போது, உடல் எடை மெல்ல, மெல்ல அதிகரித்துக் கொண்டே செல்லும். இதுவே, உடல் எடை கூடுவதன் முதல் காரணம். மிகச் சிலருக்கு மட்டும் ஹார்மோன் காரணங்களால் உடல் எடையும், பருமனும் திகரிக்கின்றன.

Sep 19, 2011

மனம் தளராத பெண் போராளி -இரும்பு மனுஷி- ஐரோம் சானு ஷர்மிளா ( Irom Chanu Sharmila)


கட்டுரை: P.S.P.பாண்டியன் 

Armed Forces ( Special Powers) Act 1958 ( இராணுவத்தினருக்க்கான சிறப்பு அதிகாரத்திற்கான சட்டம் 1958)   கலவரப் பகுதிகள் என அறிவிக்கப்பட்ட மணிப்பூர் , நாகாலந்து, மிசோரம் , மேகாலயா, திரிபுரா,அருணாசல பிரதேசம் போன்ற வட கிழக்கு மாநிலங்களிலும், ஜம்மு காஷ்மீரிலும் அமலில் இருந்து வருகிறது. இராணுவத்தினருக்கு கட்டுப்பாடற்ற அதிகாரத்தை இச்சட்டம் தந்துள்ளது. கேள்வி கேட்பாடே இல்லாமல் யாரையும் எப்போதும் கைது செய்ய்யலாம் . விசாரணைக்கு அழைத்து செல்லலாம்.  அவர்கள் திரும்பி வரலாம் வராமலும் போய்விடலாம். தீவிரவாதிகளுடன் தொடர்பு உள்ளதா என்பதை விசாரிக்கப் போகிறோம் என்று சொல்லி அள்ளிச் செல்லப் பட்ட குறைந்த வயதுள்ள பெண்களும், ஆண்களும் திரும்பி வராவிட்டல் அவர்களது பெற்றோர் படும் துயரங்களை வார்த்தைகளால் விவரிக்க முடியுமா ? மனித உரிமை மீறலுக்கு அப்பட்டமாக துணை போகும்  கொடுஞ்சட்டம் அது.

Sep 15, 2011

போஸ்ட்மேன்

நவீனத்தின் பாதிப்பில் மறக்கடிக்கப்பட்ட உறவுகளை, உணர்வுகளை,  இக்குறும்படத்தின் மூலம் அருமையாக காட்சிப்படுத்தியுள்ளார்கள்! 

Sep 9, 2011

நெஞ்சுக்கு நீதி- குறும்படம்!

  நாளைய இயக்குனர் வெற்றியாளர் நளனின் குறும்படம் படம்.
அருமையாக இருக்கிறது.  வாழ்த்துக்கள்!

Aug 30, 2011

கமல்+கிரேசி=காமெடி சரவெடி!

கமல்+கிரேசி=காமெடி சரவெடி!
கமல்-கிரேசி மோகன் இணைந்தால்  படம் முழுவதும் தாராளமாக ரசித்து சிரித்து, வீட்டுக்கு வந்தும் சிரிக்கலாம். குடும்பத்துடன் தியேட்டருக்கு நம்பி செல்லலாம். இந்த காமெடி கூட்டணி மீண்டும் இணைவதாக ஒரு செய்தி எனக்கு இப்போதே ஆர்வத்தை ஏற்படுத்திவிட்டது. படத்திற்கு தலைப்பு “நண்பர்களும் 40 திருடர்களும்  என்பது தகவல். கமல் தற்போது “விஸ்வருபம் படவேளைகளில் இருக்கிறார். “மன்மதன் அம்பு பார்த்து நொந்த மனங்களுக்கு விரைவில் ஆறுதல் தாங்க கமல் சார்.
=============================================================================
குற்றமுள்ள நெஞ்சு!
ஒரு வழியாக அன்னா ஹசாரேவின் உண்ணா விரதம் நல்ல விதமாக முடிந்திருக்கிறது.  லோக் பால் வராமல் தடுக்க,   ஏகப்பட்ட நோ பால்களை (முட்டுக்கட்டைகளை) போட்டுப்பார்த்துவிட்டு முடியாமல் ஒருவழியாக அரைமனதாக கோரிக்கைளை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். லோக்பால் குழந்தையை ஆரோக்கியமாக  பிரசவிக்கவிடுவார்களா? பொறுத்திருந்து பார்க்கவேண்டும்.
அன்னா  ஹாசாரே பற்றி ஆளாளுக்கு ஏதோதோ சொன்னார்கள். “பாராளுமன்றத்துக்கு எதிராக ஒரு தனிமனிதரா?, “ஊழல்வாதி “அமெரிக்க பின்னணி என்றெல்லாம்!.  அணுசக்தி உடன்பாடு, சிலர் வெற்றிபெற்ற  ரகசியம், சிலர்  பதவிக்கு வந்த ரகசியம் இவற்றிலெல்லாம் நமக்கு மேலிருக்கும் சரவ வல்லமை படைத்த அந்த நாட்டாமை?யின் பின்னணி இருப்பதாக பரவலாக தெரியும்! ஆனால் ஜன்லோக்பால் மசோதாவை நிறைவேற்றத் தயங்கியத்தின் உண்மையான காரணம் “நமக்குதான் குழி தோண்டுகிறார்கள்என்பதை சிலர் உணர்ந்ததால்!. =============================================================================

Aug 29, 2011

லோக்பால்-ஜன்லோக்பால்

அரசு அதிகாரிகள், ஊழியர்கள் மீது கூறப்படும் ஊழல், பாரபட்சம் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஒரு அமைப்பு தான், லோக்பால். ஊழலில் ஈடுபடுவோர் மீது, பொதுமக்கள், லோக்பாலிடம் நேரடியாக புகார் அளிக்கலாம். இதன் அடிப்படையில், லோக்பால் அமைப்பு விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்கும். லோக்பாலின் அதிகாரங்கள், செயல்பாடுகள் ஆகியவற்றை நிர்ணயிக்கும் சட்டம் தான், லோக்பால் மசோதா சட்டம்.

ஜன்லோக்பால் மசோதா என்றால் என்ன? : அரசு தயாரித்த லோக்பால் மசோதாவில் ஓட்டைகள் இருப்பதாக கூறி, ஊழலை ஒழிக்கும், முழுமையான மசோதாவாக தயாரிக்கப்பட்டுள்ளது தான், ஜன்லோக்பால் மசோதா. பிரதமர், நீதித் துறையில் உயர் பொறுப்பில் இருப்பவர்கள், அரசு அதிகாரிகள் என, ஊழல் செய்தவர்கள் யாராக இருந்தாலும், இந்த சட்ட மசோதாவின் கீழ் விசாரிக்க முடியும். இதன்படி, லோக்பால் அமைப்பு என்பது, தேர்தல் ஆணையம் போன்ற தன்னிச்சையான அமைப்பாக இருக்கும். இதில், "ஜன்'என்ற வார்த்தைக்கு பொதுமக்கள் என, அர்த்தம். இந்த மசோதாவை நிறைவேற்றுவதற்காகத் தான், அன்னா ஹசாரே போராட்டம் நடத்தி வருகிறார்.

Aug 27, 2011

தளபதி - ரீமிக்ஸ்

தளபதி படத்தின் ஒருகாட்சியை ரீமிக்ஸ் செய்திருக்கிறார்கள்.  FUTUR FILM, SHORT FILM  பற்றி கலாய்த்திருக்கிறார்கள் தாராளமாக ரசித்து சிரிக்கலாம்! 

Aug 15, 2011

சாத்தானின் கூப்பாடு

- தினமணி தலையங்கம்

இந்தியா சுதந்திரமடைந்து 64 ஆண்டுகள் முடிந்து 65-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நாள். அந்நியரின் ஆக்கிரமிப்பிலிருந்து இந்தியா விடுதலைபெற்று மக்களுக்காக மக்களால் நடத்தப்படும் ஆட்சிமுறைக்கு வித்திட்ட நாள்.

இந்தியாவின் சுதந்திரத்துக்கு லட்சக்கணக்கான பேர் தங்களது உடல், பொருள், ஆவி அனைத்தையும் தியாகம் செய்திருந்தாலும் இந்திய விடுதலையைத் தலைமை ஏற்று நடத்திய அண்ணல் காந்தியடிகளின் வழிகாட்டுதல்தான் இன்றைய இந்தியாவின் தோற்றத்துக்கு முக்கிய காரணியாக இருந்தது என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. உலகுக்கு அகிம்சை, சத்தியாகிரகம், பொதுவாழ்வில் தூய்மை, தனிமனித வாழ்வில் எளிமை என்று புதுப்பாதை வகுத்தவர் அண்ணல் காந்தியடிகள்.

சுதந்திர தினத்தைக் கொண்டாடும் இந்தவேளையில் குடியரசுத் தலைவர், பிரதமர் முதல் இந்தியாவிலுள்ள அத்தனை அரசியல்வாதிகளும் மகாத்மா காந்தியைப் பற்றி வானளாவப் புகழப் போகிறார்கள். தீவிரவாதத்தை ஒழிக்கவும், உலகில் அமைதியை நிலைநாட்டவும் அண்ணல் காந்தியடிகளின் அகிம்சை, சத்தியாகிரக வழிகள் மட்டுமே தீர்வு என்றும் உபதேசம் செய்யப் போகிறார்கள்.

Aug 13, 2011

சுதந்திரதின நல்வாழ்த்துக்கள்!




Indian independence day scraps graphics for orkut
"அப்பா சொன்னாங்க,  நமக்கு சுதந்திரம் கிடைச்சு 64 வருஷம்  ஆயிடுச்சுன்னு! . சுதந்திரத்த காந்தி தத்தா, நேதாஜி,  பகத்சிங் இப்படி நிறைய தாத்தா, மாமா  கஷ்டப்பட்டு வாங்கி கொடுத்தாங்களாம்.  இப்ப இருக்க தாத்தா,  மாமா எல்லோரும் எனக்கு எதுவுமே வாங்கி கொடுக்காம அவுங்களே வச்சுகிறத்துக்கு கஷ்டப்படுறாங்க!   ஸ்கூல்ல கொடியேத்தி மிட்டாய் மட்டும் தான் கொடுப்பாங்க."  
 
 ஆம்.   பெற்ற சுதந்திரத்தை   பேணிக்காக்கா  விடினும்,  மகிழ்வுடன் கொண்டாடுவது ஒவ்வாரு இந்தியனின் ஜனநாயக கடமை!.

Aug 7, 2011

இவர்கள் பங்குக்கு!

பட்டிமன்றம் முதல் அரசியல் மேடை வரை வறுபடும் தொலைக்காட்சி நிகழ்ச்சி "மானாட மயிலாட' .  விஜய் டிவியும் அவர்கள் பங்குக்கு நையாண்டி செய்திருக்கிறார்கள்.  

Aug 2, 2011

முண்டாசுப்பட்டி குறும்படம்

 சமீபத்தில் கலைஞர் டிவி-ல் நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் இடம்பெற்று, அனைவரையும் வயிறு வலிக்க சிரிக்கவைத்த,  முண்டாசுப்பட்டி குறும்படம்  

Jul 30, 2011

நொறுக்குத்தீனி!

                 “எப்படி இருந்த இருந்த மதுரை  மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் இப்படி ஆயிடுச்சே  என்று மதுரை வந்து செல்லும் பயணிகள் வருத்தப்பட்டுக்கொண்டிருக்கையில், கலெக்டர் சகாயம் களத்தில் இறங்கி மாட்டுத்தாவணியை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்டிருக்கிறார்.  அடைசலான கடைகளை இல்லாமல், இப்போது ஒரு நேர்த்தி தெரிகிறது, மக்கள் நடந்துசெல்லும் பாதையில் இருந்த முறுக்கு கடை, டீ கடை, பழக்கடை என்று சகலமும் அகற்றப்பட்டுள்ளது நல்ல விசயம்.  நியாயமான கழிவறை கட்டணம் வாங்குகிறார்கள் இன்று வரை.  எத்தனை நாட்களுக்கு தொடரும் என்பது அல்லக்கைகளை அடக்கி வைக்கும் ஆட்சியாளர்களின் கைகளில்!
_____________________________________________________________________________   
                    
                          சமீபத்தில் எனக்கும் என்  நண்பர்கள் வட்டாரத்திற்கும் ஒரு மெயில் பார்வர்ட் ஆகி வந்தது.  அதில்  ஒரு வயதான மூதாட்டியின் படத்தை போட்டும், இந்த மெயிலை ஒரு பத்து பேருக்கு பார்வர்ட் செய்ய வேண்டும், இல்லையேல் அவர்களுக்கு அது நடக்கும், இது நடக்கும் என்று ஒரு பீதியை கிளப்பி  அந்த மெயில் இருந்தது.   அப்படி பார்வர்ட் செய்தால் அவர்களுக்கு நல்லது நடக்குமாம்.   அந்த மெயிலை எனக்கு பார்வர்ட் செய்தவர்களுக்கு நடந்த நல்லவிசயம் என்னவென்று எனக்கு தெரியாது.  ஆனால் அந்த மெயிலை பார்வர்ட் செய்யாத எனக்கு கெட்டவை எதுவும் இன்றுவரை நடக்கவில்லை என்பது உண்மை.      பலவருடங்களுக்கு முன்பு பிட் நோட்டீஸ் அடித்து வெங்கடாசலபதி பெயரை சொல்லி இப்படி வரும், இப்போது நாவீனமாகி விட்டதால் இமெயிலில் அந்த மூடநம்பிக்கை விதைக்கப்படுகிறது.  அதுவும் வடக்கே இருந்து. 
        எனக்கு இன்னொரு  சந்தேகம். யாரோ ஒரு விவகாரம் பிடிச்ச ஆள், நம் இந்தியாவில் எத்தனை முட்டாள்கள் இருக்கிறார்கள்? என்று கணக்கெடுக்கிறார்களோ! என்னவோ! ( பார்வர்ட் செய்த நண்பர்கள் கோபப்படக்கூடாது ).
 யாராவது அந்த மெயிலை பார்க்க வேண்டும் என்றால் email ID கொடுங்கள் தவறாமல் அனுப்பிவைக்கிறேன்!
_____________________________________________________________________________

Jul 25, 2011

செய்திகள் வாசிப்பது.....!

                             தமிழில் எந்த டிவி சேனலை வைத்தாலும், சினிமா, பாட்டு, நடனம், மெகா தொடர் நாடகங்கள் என்று இருப்பதால் இதையெல்லாம் தவிர்த்து ஓரளவு நம்ம பொது அறிவை வளர்த்துக்குவோம் என்று செய்தி சேனலை வைத்தால், அந்த செய்திகளில் ஒரு நடுநிலை இல்லை!.

                              தமிழில் ஒரு நடுநிலையான செய்தி சேனல் இல்லாதது ஒரு நீண்ட நாள் குறையே!. பெரும்பாலான நடுநிலையாளர்களின் ஏக்கமும் கூட!. சன் டிவி, கலைஞர் டிவியை வைத்தால் தி.மு.க. சம்மந்தப்பட்ட செய்திகளே வருகிறது!. Spectrum, அதை தொடர்ந்த கைது நடவடிக்கைகள் குறித்த செய்திகள் வருவதில்லை. நாட்டில் ஒண்ணுமே நடக்காதது போல் செய்தி போடுகிறார்கள்!. ராசா, கனிமொழி கைது, தயாநிதி பதவி விலகல் நிகழ்வுகள் இவர்களுக்கு தெரியாது போலும்!, அந்த நேரத்தில் ஏதாவது சம்பந்தமில்லாத செய்திகளை போடுகிறார்கள்.

                             இவர்கள் இப்படி என்றால், ஜெயா டிவி-க்கு சமச்சீர் கல்வி வழக்கில் நீதிமன்ற தீர்ப்பு ஒரு செய்தியே இல்லை!. அதை விடுத்து தி.மு.க கட்சியினர் கைது பற்றி நான்காவது முறையாக செய்தி சொல்லிக்கொண்டு இருப்பார்கள்!

Jul 24, 2011

ஆப்பிள் சாப்பிட்ரிங்களா? -குறும்படம்


ராம்கோபால் வர்மாவின் "KAUN" படத்தின் பாதிப்பில் எடுக்கப்பட்ட படம். பயந்த சுபாவம் கொண்டவர்கள் இந்த குறும்படத்தை பார்க்க வேண்டாம்.
நான் பயப்படவில்லை என்று சத்தியம் செய்ய முடியாது.  5.1 ஒலி பின்னணியில் பார்த்த பொழுது கொஞ்சம் தூக்கிவாரிப்போட்டது உண்மை!
இந்த குறும்பட டீம் ஒரு நல்ல திகில் படத்தை படைக்க தகுதி வாய்ந்தவர்கள். வாழ்த்துக்கள்!

உண்மைய சொல்லனும்னா....!

                  குறும்படம் எடுக்கிறது  சுலபம் இல்லை.  Future படம் எடுக்குறதுல இருக்கிற சிரமங்கள் இதிலும் இருக்கு.  இந்த படத்தை பாருங்க, ஒரு இயக்குனரின் கஷ்டங்கள் ரொம்ப காமடியா இருக்கும்.

Jun 16, 2011

மருத்துவ குறிப்புகள்!

வாழை!

வாழைப்பழம் எல்லாத் தரப்பு மக்களுக்கும் எளிதில் கிடைக்கும் சத்துகள் பல நிரம்பிய பழமாகு‌ம். மேலு‌ம், இத‌ற்கு கால‌நிலை எதுவு‌ம் இ‌ல்லாம‌ல் எ‌ல்லா கால‌ங்க‌ளிலு‌‌ம் ‌கிடை‌க்கு‌ம் ஒரு பழ‌ம் எ‌ன்பது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

மேலு‌ம் வாழைப்பழத்திற்கு இன்னொரு விசேஷம் இரு‌ப்பதாக‌க் கூறு‌கிறா‌ர்க‌ள் இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள். அதாவது ‌தினமு‌ம் ‌மூ‌ன்று வேளை உணவு‌க்கு‌ப் ‌பிறகு ஒரு வாழை‌ப்பழ‌ம் சா‌ப்‌பி‌ட்‌டா‌ல் மூளை சுறுசுறு‌ப்பாக இ‌ய‌ங்கு‌ம் எ‌ன்‌கி‌ன்றன‌ர் அவ‌ர்க‌ள்.
மூளையை சுறுசுறுப்பாக்குவதுடன் பல்வேறு நன்மைகளையும் தருகிறது வாழை‌ப்பழ‌ம். அதாவது, வாழைப்பழம் மனிதனின் மூளைக்கு தேவையான எல்லாப் புரதச் சத்துக்களையும் கொண்டுள்ளது.
வாழைப்பழம் மூன்று இயற்கையான இனிப்பு வகைகளைக் கொண்டுள்ளது. அதாவது சக்ரோஸ், பிரக்டோஸ் மற்றும் குளுகோஸ் உடன் சேர்ந்து நம் குடலுக்குத் தேவையான ஃபைபரையும் அ‌திகமாக‌க் கொண்டுள்ளது.
ஒரு ம‌னித‌ன் இரண்டு வாழைப்பழம் சாப்பிட்ட 11/2 மணி நேரத்தில் உடலுக்குத் தேவையான, உடனடியான, உறுதியான, கணிசமான, ஊக்கமுள்ள ஊட்டச்சத்தை பெறு‌கிறா‌‌ன் எ‌ன்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
வாழை‌ப்பழ‌த்‌தி‌ல் ஊ‌ட்ட‌ச்ச‌த்து‌க்க‌ள் ம‌ட்டு‌ம் ‌நிறை‌ந்‌திரு‌க்க‌வி‌ல்லை, மேலு‌ம், பல நோய்கள் வராமல் தடுக்கக்கூடிய நோய்தடுப்பு மரு‌ந்தாகவு‌ம் கூட வாழை‌ப்பழ‌ம் உ‌ள்ளது. எனவே ஒ‌வ்வொரு ம‌னிதனு‌ம் ‌‌தினமு‌ம் ஒரு வாழை‌ப்பழ‌த்தையாவது சா‌ப்‌பிடு‌ம் வழ‌க்க‌த்தை ஏ‌ற்படு‌த்‌தி‌க் கொ‌ள்ள வே‌ண்டு‌ம்.

May 14, 2011

தன்மானத் தமிழன்!

நன்றி: தினமணி 14.5.2011 தலையங்கம்
தமிழகத் தேர்தல் முடிவு இன்ப அதிர்ச்சியை அளித்திருக்கிறது. அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெறப்போகிறது என்று நாம் முன்பே எதிர்பார்த்தோம் என்றாலும் இந்த அளவுக்கு ஒரு மிகப்பெரிய வெற்றியை மக்கள் அதிமுகவுக்கு அளிப்பார்கள் என்பதை நிச்சயமாக எதிர்பார்க்கவில்லை. எதிர்க்கட்சி அந்தஸ்துக்குக்கூட அருகதை இல்லாத அளவுக்கு திமுக தோல்வியைத் தழுவி இருக்கிறது என்றால் எந்த அளவுக்கு மக்கள் திமுக ஆட்சியின்மீது வெறுப்படைந்திருந்தனர் என்பது தெளிவாகிறது.

இதை ஜெயலலிதா தலைமையிலான அஇஅதிமுக கூட்டணியின் அமோக வெற்றி என்று கூறுவதைவிட, திமுக தலைமையிலான கூட்டணிக்கு எதிராக எழுந்த மக்களின் மௌனப் புரட்சி என்று கூறுவதுதான் சரியாக இருக்கும். தமிழகம் முழுவதும் திமுகவுக்கு எதிராக ஒரே மாதிரியான மனோபாவம் காணப்பட்டிருப்பது புதியதொன்றும் அல்ல. தமிழக மக்கள் கடந்த 2006 சட்டப்பேரவைத் தேர்தலைத் தவிர, ஏனைய தேர்தல்களில் எல்லாம் ஏதாவது ஒரு கட்சிக்குப் பேராதரவு அளித்துத் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க வாக்களித்து வந்திருக்கிறார்கள் என்பதுதான் சரித்திர உண்மை.

May 1, 2011

மேதின வாழ்த்துக்கள்!

உழைக்கும் வர்க்கம் அனைவருக்கும் மேதின நழ்வாழ்த்துக்கள்!

Apr 24, 2011

குரங்கு பிடிக்கும் பொழப்பு!

                    நான் கல்லூரி படித்து முடித்ததும்,  சிலரைப்போல்  அதாவது காதல் படத்தில் வரும் ஒரு கதாபாத்திரம் சொல்லுவாரே “ வில்லனாகி, ஹீரோவாகி, அப்படியே நேரடியா சி.எம். ஆகவேண்டும் என்று அல்லது ஒரு பாடல் முடிவதற்குள் டாட்டா,  பிர்லா ரேஞ்சுக்கு எங்கேயோ போவாங்களே!, அதுமாதிரி இல்லாவிட்டாலும் கொஞ்சம் கனவுகளை சுமந்துகொண்டு நானும் சென்னையில் ஒரு காலைப்பொழுதில் காலடி எடுத்துவைத்தேன். அங்கே எனக்கு பல அனுபவங்கள் கிடைத்தாலும் பிறகொரு சந்தர்ப்பத்தில் அதைப்பற்றி விரிவாக பதிவிடுகிறேன். இப்போது நான் சொல்ல வந்தது, எனது பங்கு சந்தை அனுபவத்தை பற்றி.  நான் அங்கு பங்குச்சந்தை இடைத்தரகர் ஒருவரின் அலுவலகத்தில் பணியில் சேர்ந்தேன்.             
           துவக்கத்தில் தாராளமானது வைத்து சம்பளம் ரூபாய் 1000 கொடுத்தார்கள்.  அந்த நிறுவனத்தில் மேனேஜர் வேலை என்று சொன்னார்கள். பிறகுதான் தெரிந்தது அலுவலகத்தை கூட்டிப்பெருக்கும் வேலைக்கார அம்மாவை தவிர்த்து நான்மட்டும்தான் சம்பளக்காரன். எனக்கு அப்போது சம்பளம் பெரிதாக தெரியவில்லை.  காரணம் பங்குசந்தையை ஒரு கை பார்க்கவேன்டும் என்ற எண்ணம் இருந்ததால்.   அந்த கால கட்டத்தில் பங்குச்சந்தை கணினிமயமாக்கப்படவில்லை. ஆன்லைன் விற்பனை, டிமேட் கணக்கு கிடையாது. 
           பங்குசந்தையில் கத்திரிக்காய் கணக்காக கூவி கூவி ஷேர் விற்பார்கள். அதையும் அப்போதைய தூர்தர்சனில்தான் பார்த்திருக்கிறேன். மாலை மூன்று மணிக்கு மேல்தான் பங்குகள் என்ன விலைக்கு போயின என்று தெரியவரும்.
           ஆனால் சென்னையில் பெட்டிக்கடை வைத்திருப்பவர் கூட பங்குகளை வாங்கி விற்று நம்பிக்கை இழக்காமல் முடிந்தால் கையில் காசு பார்த்துக்கொண்டிருப்பார்கள். எல்லோரும் பங்குசந்தையில் பங்குகள் வாங்கி விற்று லட்ச லட்சமாக சம்பாதித்துக்கொண்டிருக்கிறார்கள் என்று நினைத்துக்கொண்டிருந்தேன்!.
           எனக்கு அந்த (துர்)பாக்கியம் அந்த நிறுவனத்திலிருந்து விலகும்வரை கிட்டவில்லை.  காரணம் எனக்கு சம்பளம் 1000-லிருந்து  2000-வரை உயர்தப்பட்டலும்  சென்னையை பொருத்தவரை கையில் வாங்கும் சம்பளம் திருவல்லிக்கேணி மேன்சன் வாடகைக்கும், சாப்பாட்டிற்கும், மாதம் இருமுறை தேவி காம்ப்ளக்சில்  பார்க்கும் சினிமாவிற்கும்  போதவில்லை.  மாத கடைசியில் ஊரிலிருந்து மணியார்டர் வந்தால்தான் மெஸ் சாப்பாடு கிடைக்கும். 

Apr 20, 2011

தங்கராசு!

சிறுகதை - சேர்முகபாண்டியன்
                                 தங்கராசை நீண்ட வருடங்களுக்குப்பிறகு எங்க ஊரில் பார்த்தேன். ஊருக்கு ஒரு வேலையாக வந்திருந்த நான், அந்த வேலையை முடித்துவிட்டு மாலை மதுரை செல்லும் பேருந்திற்காக காத்திருந்த பொழுது  தங்கராசை எதேச்சையாக பார்த்தேன். அடையாளம் கண்டுகொண்டு அதே தயக்கத்துடன் அருகில் வந்தான்.
“எப்படி இருக்க தங்கராசு? என்றேன்.
அவன் சொன்ன பதிலை கேட்டவுடன் முதலில் எனக்கு ஒன்றும் புரியவில்லை!  அவன் வார்த்தையிலும் முகம் காட்டிய உணர்ச்சிகளிலும் கோபம இல்லை.  ஆனால் ஒரு ஆதங்கமும், ஏமாற்றமும் தெரிந்தது.  எதற்க்காக அப்படி சொன்னான்?. என்று எனக்கு யோசிக்க நேரம் தேவைப்பட்டது.
“என்ன தங்கராசு சொல்ற
“ஆமாம் நீங்க எழுதிக்கொடுத்த ஒரு கடிதத்திலேயே என் வாழ்க்கை, இதோ இந்த சட்டையை போல் ஆகிவிட்டது. இப்போது முகத்தில் செயற்கையான ஒரு சிரிப்பை வரவழைத்துக்கொண்டு அழுந்தச் சொன்னான்.

Apr 18, 2011

மதுரை முதல் மத்தி வரை-மூன்று ரியல் ஹீரோக்கள்!

கடந்த வாரங்களில் மதுரையிலிருந்து டெல்லி வரை இந்திய மக்களை சிந்திக்க வைத்து, நேர்மைனா என்ன? (ஊழல்) கரை நல்லது! என்று நினைத்துக்கொண்டிருந்த பலரை தூக்கமிலக்கச் செய்து, மக்களிடையே ஒரு நம்பிக்கையை ஏற்ப்படுத்திய,  கீழ்க்கண்ட இந்த மூவருக்கும் ஊருலகதின் வாழ்த்துக்கள்! தொடரட்டும் இவர்கள் பணி!


ஒரு மாவட்ட ஆட்சியர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்தார்! பல்வேறு துறைகளுக்கு தூக்கியடிக்கப்பட்டலும்,  ஊழல் தவிர்த்து நெஞ்சை நிமிர்த்தியவர்!

மதுரை -மாவட்ட ஆட்சியர் திரு சகாயம்






ஊரை கூட்டி அலப்பறை பண்ணி, படிக்கும் மாணவர்களையும்,  நோயாளிகளையும் மக்களையும் நோகடித்து நடக்கும் தேர்தலை தவிர்த்து உண்மையான அமைதிப்பூங்காவாக தேர்தல் நேரத்தில் தமிழகத்தை மாற்றிக்காட்டிய 

மாநில தேர்தல் ஆணையர் திரு பிரவீன்குமார்.


அரசியல், பதவிகள் என்னும் முகமூடிகளை போட்டுக்கொண்டு,  எதை சுருட்டலாம் என்று யோசித்து காலம் காலமாக ஊழலையும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட தொழிலாக செய்துவந்தவர்களை கண்டு மக்கள் கையாலாகாமல் வெறுத்துப்போய். இவர்களை ஒழிக்க ஒரு இந்தியன் வரமாட்டானா என்று  ஏங்கி இருந்த நேரத்தில் முடக்கப்பட்டு கிடந்த லோக்பால் மசோதாவை நிறைவேற்ற குரல் கொடுத்து உண்ணாவிரதம் இருந்து, அதன் மூலம் மக்களிடையே ஒரு அமைதியான புரட்சித்தீயை பரவச் செய்த

காந்தியவாதி அன்னா ஹசாரே

Mar 21, 2011

நொறுக்குத்தீனி!

வ்வப்பொழுது எட்டிப்பார்த்து, என்ன ஒண்ணுமே போடலையா, என்று கேட்கும் அன்பர்கள் மன்னிக்கவும்.  தாங்கள் இவ்வளவு விரைவில் ஆயிரத்தை தாண்டி ஹிட் அடிப்பீர்கள் என்று எதிர்பார்க்கவில்லை. தங்கள் தொடர்ந்த ஆதரவிற்கும் கருத்திற்கும் நன்றி!  எழுத நிறைய விசயங்கள் இருக்கிறது. ஆனால் நேரம்? .... இனி வாரம் குறைந்த பட்சம் ஒருமுறையாவது  எழுத முயற்சிக்கிறேன்.
=========================================================================
ப்போதும் இல்லாத வகையில் இந்த சட்டமன்ற தேர்தலுக்கு தேர்தல் கமிஷன் மிகவும் கெடுபிடியாக இருப்பது சில பணக்கார கட்சிகளுக்கு வயிற்றை கலக்கியிருக்கிறது.   ஆங்காங்கே வாகன சோதனைகளில் கட்டு கட்டாக ரூபாய்களும், நகைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. முறையான ஆவணங்கள் இருந்தால் கைக்கு திரும்பி வரும். இல்லையேல் அரசு கஜானாவுக்கு போவதில் தப்பில்லை.  நேர்மையான தேர்தலை நடத்துவதில் தேர்தல் கமிஷன் முனைப்பு காட்டுகிறது.  ஆனால் நேர்மையான ஒரு வேட்பாளரை சட்டசபைக்கு அனுப்புவதில் வாக்காளர்கலாகிய நாம்தான்  கவனம் செலுத்த வேண்டும்.
=========================================================================
னந்த விகடன் 23.3.2011  தேதியிட்ட இதழில் அரசியல் தலைவர்களுக்கு, சமுகத்தில் மரியாதை மிக்க மனிதர்கள்  கீழ்க்கண்டவாறு மதிப்பெண் வழங்கி  இருக்கிறார்கள். பாஸ் செய்தவர்களுக்கு வாழ்த்துக்கள்!. இன்னும் 
நிறைய மார்க் வாங்க முயற்சி செய்யுங்க.  பெயில் ஆனவர்களுக்கு - நல்லா படிச்சி  குறைந்த பட்சம் பாஸ் செய்ய பாருங்க.
       1.       கருணாநிதி   -4
       2.       ஜெயலலிதா  35
3.       விஜயகாந்த்   21
4.       வைகோ      -41
5.       ராமதாஸ்     -31
6.       ஸ்டாலின்    -31
7.       தா.பாண்டியன் –42
8.       சரத்குமார்     -10
9.       திருமாவளவன்_33
10.   தங்கபாலு     _09

ரசியல் கட்சிகள் போட்டி போட்டு இலவசங்களை வாரி வழங்க முற்பட்டுள்ளன.   இலவசங்களை கொடுத்து அப்பாவி மக்களை மயக்கலாம்.  மக்களும் எதோ தங்கள் காசு திரும்பி வந்ததே வந்த வரை லாபம் என்று நினைக்கலாம்.  ஆனால் இது எங்கு போய் முடியும் என்று தெரியவில்லை. இருந்தாலும் சில கட்சிகள் நிறைய இலவசங்களை வாரி வழங்கி விட்டதால், மற்ற கட்சிகள் என்ன செய்யாலாம் என்று மூளையை(?) கசக்கி சிந்தித்து கொண்டிருக்கின்றன. அவர்களுக்காக நான் உட்கார்ந்து யோசித்து கீழ்க்கண்ட சலுகைகளை தருகிறேன்.

1.   ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு நபருக்கு தினமும் நான்கு இட்லி கொஞ்சம் கெட்டி சட்னி (யோசனைக்கு  நன்றி மதி-தினமணி)

2.    கல்லூரி மாணவ மாணவிகளுக்கு மாதம் 1000 SMS  இலவசம்.
(கடி ஜோக்ஸ் தயாரித்து வழங்கப்படும்)
3.    மாதம் ஒரு நான்கு சினிமா டிக்கெட் இலவசமாக வழங்கப்படும், தி.மு.க என்றால் சனி ஞாயிறு தவிர்த்து(அன்று மானாட மயிலாட இருப்பதால்) மற்ற நாட்களில் அதுவும் கலைஞர் கதை வசனம் உள்ள படங்களுக்கு மட்டும். அ.தி.மு.க. என்றால் விஜய் படத்துக்கு.
4.  வீட்டுக்கு மாதம் 100 unit  மின்சாரம் இலவசம் (மின் வெட்டு உள்ள நேரங்களில் மட்டும்)
5.  வீட்டு வாடகையை அரசே கொடுக்கும். பிளாட் பாரத்தில் வசிப்பவர்களுக்கு வருடத்திற்கு இரண்டு பாய், இரண்டு தலையணை இலவசம்.
6.   வீட்டில் சமைத்து, துணி துவைத்து, காயவைத்து, அயன் செய்து, பாத்திரம் கழுவி, வீட்டை கூட்டி, பள்ளிக்கு போகும் பையன்களை குளிக்க வைத்து பள்ளிக்கு அனுப்ப ஆயாமார்கள் அரசு சம்பளத்தில் வேலை வாய்ப்பு  பதிமூப்பு அடிப்படையில் நியமிக்கப்படும்.
7.   வரன் தேடுபவர்கள் கோரிக்கையை ஏற்று அரசாங்க மேட்ரிமோனியல் இணைய தளம் ஏற்படுத்தப்படும். www.governmentmatrimony.com
8.    டாஸ்மார்க் கடைகளில் ஒரு குவாட்டருக்கு ஒரு முட்டை இலவசம்.

      என் பையன் எனக்கு ஒன்றும் இல்லையா என்றான்!

      இதோ அவனுக்கு, 
9.   இனி பள்ளிகளில் ஹோம் வொர்க் கொடுக்கக் கூடாது.

      "ஹையா....ஜாலி"
       என் பையன் சொல்லவில்லை!  நான் தான் கூவினேன்!

சரி, நீங்களும் கொஞ்சம் யோசித்து சொல்லுங்களேன்.
  
டித்து ரசித்த தேர்தல் ஜோக்:

“தலைவர் ஏன் கோபமா இருக்கார்

“ஒரு வீட்டுக்கு ஒட்டு கேட்கபோய், நான் உங்க உங்க வீட்டு பிள்ளை என்று சொல்லி இருக்கிறார்.  அதற்க்கு அந்த வீட்டு பெரியம்மா, ‘ஏன்  இப்படி உருப்படாம ஊரை சுத்திகிட்டு இருக்கே? என்று கேட்டு கொட்டு வைத்து விட்டாராம்.

=============================================================
ஆச்சர்ய மனிதர்கள்:

மீபத்தில் ஒரு செய்தி தாளில் படைத்த நெகிழ்ச்சியான செய்தி.

ஆயுள் தண்டனை பெற்று 10 வருடங்களுக்குமேல் மதுரை சிறையில் இருக்கும் தன் மகனை பார்க்க 80 வயதான தாய், பல வருடங்களாக முயற்சி செய்து சமீபத்தில் சந்தித்து பாசமழை பொழிந்தது இருக்கிறார். நெகிழ்ச்சியான நிகழ்ச்சி. அதை விட நெகிழ்ச்சியான செய்தி, அந்த மூதாட்டி  தன் மகனை சந்திப்பதற்கு மனுபோடுவதிலிருந்து அனைத்து ஏற்பாடுகளையும் செய்து அவரை பதிராமாக ஊருக்கு பேருந்து ஏற்றிவிட்டு உபகாரம்  செய்திருக்கிறார்கள் அந்த சிறை காவலர்கள்!.  நல்லமனம் வாழ்க!  
        இதை படித்துக்கொண்டிருந்த பொழுது எனக்கு ஒரு ஞாபகம் வந்தது.  ஒருமுறை எங்கள் தலைமை அலுவலகத்திலிருந்து மற்றொரு அலுவலகத்திற்கு ஒரு பெரிய தொகைக்கு பணம் கொண்டுசெல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.  அப்பொழுது எனக்கு பாதுகாப்புக்கு அதாவது பணத்திற்கு பாதுகாப்பிற்க்காக ஒரு போலீஸ்காரர் உடன் அனுப்பப்பட்டார்(எஸ்கார்ட்). போலீஸ்காரர் என்றால் பொதுவாக எப்படி இருப்பார் என்று நான் அறிந்திருந்ததால் அவருடன் சகஜமாக பழகாமல் பேருந்தில் பயணித்தேன்.  அதன் பிறகு அவரின் செயல்கள் எனக்கு மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.  போலீஸ்காரர்களை பொதுவாக தவறாக கருதியதர்க்காகவும் வருந்தினேன்.

            நான் பயணச்சீட்டு எடுக்க முற்ப்பட்டபொழுது,  அதை தடுத்து  தானே  பயணச் சீட்டு   வாங்கினார்.    பேருந்திலிருந்து இறங்கியதும் குளிர்பானம் குடிக்கலாம் என்று ஒரு கடைக்கு அழைத்துச் சென்றார்.  அதற்க்கும்  என்னை ரூபாய் கொடுக்கவிடாமல் அவரே கொடுத்தார்.  நாங்கள் கொஞ்சம் சகஜமாக நிறைய விசயங்களை பேசினோம். திரும்பி வரும் பொழுதும் என்னை செலவு செய்ய விடவில்லை.  நான் அவரை ஆச்சர்யமாக பார்த்தபொழுது அவர் "என்ன சார் ஆச்சர்யமாக பார்க்கிறீர்கள் நான் வித்தியாசமானவன்,  இதனாலேயே என்னை என் நண்பர்கள் 'மெண்டல்' என்று கூறுவார்கள்"  என்றார்.  அதன் பிறகு அவர் என்னை எங்கு பார்த்தாலும் முதலில் வணக்கம் ( salute  )  சொல்வது அவராகத்தான் இருக்கும்.  இன்று எனக்கு நல்ல நண்பர் (அவரே எனக்கு அன்று செலவு செய்ததால் அல்ல).   நேர்மையானவர்கள் சில இடங்களில் சில நேர்மை தவறியவர்களுக்கு மென்டலாகத்தான்  தெரிவார்கள்.

கேட்க-ரசிக்க!

இளையராஜா இசையமைத்து ‘நிழல்கள்படத்தில் இடம்பெற்ற “இது ஒரு பொன் மாலை பொழுது  பாடலை கேட்கும் பொழுது இன்றும் நம்மை எங்கோ தாலாட்டி அழைத்துச் செல்வதை உணரமுடிகிறது!. அமைதியான சூழ்நிலையில்  கேட்டுப்பாருங்கள், நீங்களும் இந்த பாடலை அப்படி உணர்ந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்!  இதோ உங்களுக்காக.....