Dec 8, 2010

விபத்து!

தீபாவளிக்கு இன்னும் மூன்று நாட்கள்தான் இருந்ததால்,   சிறுவர்கள் அதை வரவேற்று தெருவில் வெடிவெடித்து பெற்றோரின் காசை கரைக்க ஆரம்பித்தார்கள்.  அரசு அலுவலர்கள் வாங்கிய போனசின் மிச்ச சொச்சதையும் காலிசெய்யும் விதமாக விளம்பரங்களை பார்த்துவிட்டு தேவையில்லாத பொருட்களை வாங்கிவிட்டு, தீபாவளியன்று செலவுக்கு என்ன செய்வது என்று யோசித்துக்கொண்டிருந்த, நவம்பர் 2,  காலை வேளையில் அந்த விபத்து நடந்தது எனக்கு!                       
         

இன்றைய காலகட்டத்தில்,  தங்களுடைய பணிக்காக பெரும்பாலோருக்கு  வசதியை பொறுத்து ஒரு வாகனம் தேவைப்படுகிறது, (கல்லூரி மாணவருக்கும், திருமணத்திற்கு நிச்சயிக்கப்பட்ட மணமகனுக்கும் தேவைப்படும் காரணம் வேறு!?).  அந்த வகையில் சிற்றூர் பேரூர் என்ற வித்தியாசம் இல்லாமல் இருசக்கர வாகன எண்ணிக்கை பெருகிவிட்டது.  கட்டத்துக்கு உட்பாடாத கடல் அலைகள் போல், (போக்குவரத்து)சட்டத்துக்கு உட்பாடாத இந்த வாகன நெரிசலில் இருந்து விபத்தில்லாமல் வீடுவந்து சேருவதே பெரிது. (பயப்பட வேண்டாம். சும்மா எதுகை, மோனைக்காக).  நான் பலமுறை என்னை நானே பாராட்டிகொள்வேன்!, பைக் வாங்கி ஆறு வருடங்கள் ஆகியும் விபத்தில்லாமல் ஓட்டுகிறோம் என்று!. 

அலுவலக வேலை நிமித்தமாக, அருகில் உள்ள சிற்றூருக்கு, என்னுடைய மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த பொழுது அந்த விபத்து நிகழ்ந்தது. எக்ஸ்ரே காட்டியது, வலது காலில் கணுக்காலுக்கு கீழே பாதத்தில் இரண்டு இடத்தில எலும்பு முறிவு மற்றும் ஒரு இடத்தில் ஜவ்வு விலகி இருந்தது.  டாக்டர் பிளாஸ்டர் ஆப் பாரிஸ்-ல் ஒரு பெரிய கட்டு போட்டுவிட்டு (இந்த பெயர் எப்படி வந்தது?) காசை வாங்கிக்கொண்டு சொன்னார், “சரியாக ஒரு மாதம் ஆகும், காலை கீழே ஊன்ற கூடாது, ஒரு வாரம் சென்று வாங்க என்று. 
இதோ இன்றுடன் முப்பத்தெட்டு நாட்கள் ஆகிவிட்டன.  இன்றுகூட, வீக்கம் குறைய இன்னும் ஒருமாதம் ஆகும் என்றிருக்கிறார். பார்ப்போம்!

இதற்கிடையில், நண்பர்கள், உறவினர்கள், அலுவலக சகாக்கள் குசலம் விசாரித்து ஹார்லிக்ஸ், பழங்கள் வாங்கி வந்தார்கள். பக்கத்துக்கு கடைக்காரர் நேரில் வந்து, “சார் இன்னும் எவ்வளவு நாட்கள் லீவில் இருப்பீர்கள்?. நல்லா ரெஸ்ட் எடுங்க என்றார். ஏன் என்றபோது, “இன்னும் ஒரு பெட்டி  ஹார்லிக்ஸ் ஆர்டர் போடத்தான் என்றார். அவர் அக்கரை புரிந்ததது. வரமுடியாதவர்கள் அலைபேசியில் நலம் விசாரித்தார்கள். (ஒபாமா, மன்மோகன், கலைஞர், மற்றும் ஜேவுக்கு என் அலைபேசி எண் தெரியாது போலும்).
ஆறுதல் சொன்னவர்களில் முக்கால்வாசிப்பேர், “கண் திருஷ்டி என்றார்கள். கால்வாசிப்பேர் என்மேல் மோதிவிட்டு சென்ற அந்த பெயர் தெரியாத நண்பரின் கவனக்குறைவை குறைசொன்னர்கள். விபத்துக்கு நான் காரணம் இல்லை என்று அவர்கள் சாட்சி சொன்னதில் ஆறுதல் பட்டுக்கொண்டேன். மேலும் பாதிப்பேர் “நுடவைத்தியம் பார்த்திருக்கலாம்என்றும் மீதிப்பேர் “ஆங்கில வைத்தியம்தான் நல்லது என்றும் சொன்னார்கள்.  வீட்டில் கண் திருஷ்டிக்கு எலுமிச்சம்பழம் சுத்திப்போட்டர்கள்!. எனக்கு இந்த விலை வாசியில் இரண்டு ரூபாய் வீணாக போகிறதே என்ற கவலை!

இதற்குமுன் விபத்தை பார்த்திருக்கிறேன்.  ஆனால், இப்போதுதான் அனுபவிக்கிறேன்!.  வலியை தவிர்த்து,  புரண்டுபடுக்கமுடியாமல், கட்டுக்குள் அரித்தால் இதமாக சொறிய முடியாமல், இதனால் தூக்கமில்லாமல்,   நடுவில் வட்டமாக ஓட்டை போட்ட பிளாஸ்டிக் நாற்காலியை இரண்டுக்கும், பிளாஸ்டிக் டப்பாவை ஒன்றிற்கும் பயன்படுத்தி.........................வேதனை!

இந்த முப்பத்தெட்டு நாட்களை கடத்தியது மிக சிரமமாக போய்விட்டது. டிவி, செய்தித்தாள்கள், வார இதழ்கள், இணையம்,  பையன்கள் விருப்பப்பட்டால் அவர்களை ஜெயிக்காதவரை கேரம்.  இப்போதுதான் தெரிகிறது பகலில் கூட பெண்கள் அழுதுகொண்டும் ஒருவரை ஒருவர் முறைத்துக்கொண்டும்  இருக்கிறார்கள் தொலைக்காட்சி தொடர்களில்.  செய்தி தாள்களில் “அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில் நெல் தானிய விற்பனை பொது ஏலம் /டென்டர் விளம்பரம் கூட படிக்க நேரம் கிடைத்தது.  மியான்மரில் ‘ஆன் சாங் சுகி வீட்டுச்சிறையிலிருந்து விடுதலை செய்தி பொறாமையை ஏற்படுத்தியது.

இவைகள் என் பொன்னான பொழுதை வீணடிக்கின்றன, என்ற திடீர் ஞானோதயத்தில் இந்த வலைப்பூ ஆரம்பித்து, அதில் இந்த சம்பவத்தையும் எழுதிக்கொண்டிருக்கிறேன். (அதற்க்கு நாங்களா கிடைத்தோம்  என்கிறீர்களா?) கடைசிவரை அந்த விபத்து எப்படி நடந்தது என்று கேட்கவில்லையே?
எல்லோரிடமும் சொன்னதுதான் உங்களிடமும், ‘சாலையில் எதிரே வேகமாக வந்த அந்த அறிமுகமில்லா நண்பர் தனக்கு முன்வந்த மற்றொரு இரண்டு சக்கர வாகனத்தை முந்திக்கொண்டு நடுவில் புக, வலதுபுற கணுக்காலுக்கு கீழே மட்டும் பலத்த அடி(முள் குத்திவிட்டது என்பது போல).  சொல்லாதது...!?
நானும்  சாலை ஓரமாக வந்திருக்கலாம் கவனத்துடன்

1 comment: