இருப்பினும்....,
இந்த சம்பவத்தை எழுதிய நோக்கம், நான் பட்ட கஷ்டங்களை சொல்லவேண்டும், அதனால், என்மேல் அனுதாபம் வரவேண்டும் என்பதற்காக அல்ல!. அதனால்தான் கொஞ்சம் நகைச்சுவை கலந்து எழுதினேன்!. சாலைப்போக்குவரத்தில் ஒரு எச்சரிக்கை தேவை, என்பதற்காக எழுதப்பட்ட விழிப்புணர்வு கட்டுரை அது!. “அனுபவிச்சு எழுதியிருக்கேன்” என்று தாராளமாக சொல்லலாம். ஒரு சாதாரண விபத்தின் பாதிப்புகளே இப்படி இருக்கும் போது, இதைவிட அதிக பாதிப்புகளை ஏற்படுத்திய விபத்துக்களை நாம் அன்றாடம் செய்திதாள்களில் படிக்கிறோம்!, தொலைகாட்சி செய்தியில் பார்க்கிறோம்!, கேள்விப்படுகிறோம்! ஏன்..., சில நேரங்களில் நேரிலும் பார்க்க நேரிடுகிறது! அப்போதெல்லாம், நமக்கு தெரிந்தவர்கள், உறவினர்கள் அதில் பாதிக்காதவரை, அது நமக்கு ஒரு செய்தி!. அந்த விபத்தின் பாதிப்புகள் சம்பந்த்தப்பட்டவர்களையும், அவர்களின் உறவினர்களையும் எந்த அளவு அலைகளிக்கின்றன என்பது அளவிடமுடியாதது!.
குடும்பத்துடன் காரில் வந்த ஒரு தொழிலதிபர், அவசரப்பட்டு, மழை வெள்ளம வந்த சாலையில் காரை செலுத்தி, மனைவி, மகள், மற்றும் மகனை இழந்து இவர் மட்டும் தப்பியது சமீபத்திய சோகம்.
மேலும், மதுரையை வேலம்மாள் இன்ஜினியரிங் கல்லூரியில் படிக்கும் டி.கெளதம், தன் நண்பர் வி.பி.கெளதமுடன் பல்சர் பைக்கில் சென்ற பொழுது எதிரே வந்த பஸ் மீது மோதி, இதில், இருவருக்கும் தலையில் பலத்த அடி. இதில் வி.பி.கெளதம் இறந்துவிட, டி.கெளதம் இன்று மதுரை வடமலையான் மருத்துவமனையில் தீவிர சிகிட்சை பிரிவில் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறார்!. என்பது ஒரு சோகம்!. இவர் தந்தை சாதாரண சத்துணவு அமைப்பாளர். இவரின் கல்லூரி நண்பர்கள் ‘மறுபிறவி’ என்ற அமைப்பை ஏற்ப்படுத்தி கலை நிகழ்ச்சி நடத்தி நன்கொடை வசூலித்து சிகிச்சை செலவிற்கு கொடுத்திருப்பது மனிதாபிமானமிக்க நெகிழ்ச்சியான செய்தி!.
ஆனால் ஒரு விபத்தை, கொஞ்சம் கவனம் எடுத்தால், முடிந்த வரை நம்மால் தவிர்க்க முடியும்!. பல போக்குவரத்து ஆலோசனைகள் அவ்வப்பொழுது பலவகைளிலும் நமக்கு அறிவுருத்தப்பட்டாலும், நாம் அவற்றில் பலவற்றை உதாசீனப்படுத்திவிட்டு வாகனம் ஒட்டிக்கொண்டிருக்கிறோம். மேலும் சில நேரங்களில் நமது தவறை ஒப்புக்கொள்ள மனமில்லாமல், மற்றவர்களை குறைசொல்வதின் மூலம் நியாயப்படுத்திக்கொள்கிறோம்.
கொஞ்சம் யோசித்தால் போக்குவரத்தில் நாம் செய்யும் தவறுகளை உணரலாம், எனக்கு நேர்ந்த விபத்தின் மூலம் நான் கற்ற பாடம்...!
1. வாகனம் ஓட்டும் போது எவ்வித சிந்தனைக்கும் இடமளிக்கக்கூடாது!
சிந்தனைகள் ஒரு வித தூக்கத்தை போன்றது!. அது பெரும்பாலும் விபத்து நிகழ்வதற்க்கு ஒருசில வினாடிகளுக்கு முன்பாகத்தான் நம்மை விழிக்க வைக்கிறது. சில நேரங்களில் விபத்துக்குப்பிறகு!
2. வேகம்!. அது ஒரு வகை போதையை போன்றது!. வேகத்தில் நாம் கட்டுப்பாடு இழந்து விடுகிறோம்!. இங்கும் விபத்துக்கு சில வினாடிகளுக்கு முன்பாகத்தான் தெளிகிறோம்!. கட்டுப்பாடான வேகம் விபத்தை தவிர்க்கும்!.
3. நீண்ட நேரம் ஒரே சீரான வேகத்துடன் செல்வதால், லேசான தூக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது!. எனவே அவ்வப்பொழுது வேகம் குறைத்தும், வாகனத்தை நிறுத்தி சிறிது ஓய்வு எடுத்தும் செல்வதால் இந்த லேசான தூக்கத்தை தவிர்க்கலாம்!.
4. முக்கியமாக முன்னால் வேகமாக செல்லும் வாகனத்தை முந்தி செல்ல வேண்டும் என்ற எண்ணத்தை தவிர்க்க வேண்டும்!. அது எவ்வளவு அவசரமான வேலையாக இருந்தாலும்!.
5. ஒரு குறிப்பிட்ட தொலைவு வரை சாலையில் வாகனங்கள் வரவில்லை, அப்படியே எதிரில் வந்தாலும் வரும் வாகனங்களும் கட்டுப்பாடுன்தான் வருகின்றன. நம்மேல் மோதுவதற்கு வாய்ப்பில்லை என்பதை உறுதிசெய்துகொண்ட பிறகு வேகத்தை சற்றே அதிகரிக்கலாம்.
விபத்து ஏற்பட பல காரணங்கள் இருந்தாலும், நம்மால் தவிக்ககூடிய மிக எளிதான காரணங்களை இங்கே பட்டியலிட்டுள்ளேன். போக்குவரத்து சம்பந்தமாக, ஹெல்மெட் அணிவது உட்பட ஏராளமான விதிகள் மேலும் பின்பற்றப்பட வேண்டும் என்பதே எண்ணம்!.
மனித உயிர் அளவிட முடியா மதிப்பு மிக்கது!. ஒரு விபத்தில் எந்த உயிர் பிரிந்தாலும் அது, அவருடைய குடும்பத்திற்கு எவ்வளவு காப்பீட்டு தொகையாலும் ஈடு செய்யமுடியாத இழப்பை ஏற்படுத்துகிறது!, கால காலத்திற்கும்!.
பாதுகாப்பான சாலை போக்குவரத்தை உறுதி செய்வோம்!
நன்றாக இருக்கிறது
ReplyDelete