Dec 11, 2010

பாலித்தீன் பேக் தவிர்ப்போம்!



 இந்த பூமியின்  இயற்கை வளங்களில்  ஒரு இருபது சதவீதத்தை மட்டுமே மனிதன் தன் அறிவால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியும் என்பது விஞ்ஞானிகளின் கருத்து. அந்த இருபது சதவீதத்தை ஆக்கபூர்வமாக பயன்படுத்தும் அதேவேளையில், அதையும், மிகுதியான என்பது சதவீத இயற்கைவளத்தையும் நாம்  தெரிந்தோ தெரியாமலோ   கொஞ்சம் கொஞ்சமாக பாழ்படுத்திக்கொண்டு  வருகிறோம் என்பதே கண்கூடான உண்மை.
நீர், நிலம் மற்றும் காற்று ஆகியவை பலவகைகளில் மனிதனால் மாசுபடுதப்படுகின்றன.  தொழிற்சாலைகழிவுகள், வாகன புகை, பூச்சிக்கொல்லி மருந்துகள், எலக்ட்ரானிக் கழிவுகள், மற்றும்  பிளாஸ்டிக் பொருள்கள் போன்ற மக்காத குப்பைகள், மேலும்  நாடுகளுக்கிடையேயும், உள் நாட்டிலும் பல்வேறு ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தி  ஏற்படும்  போர்களாலும் இந்த பூமியின் இயற்கை சமச்சீர் அமைப்பில் பாதிப்பு ஏற்ப்பட்டு, இதன் காரணமாக,  மனிதர்கள் உட்பட்ட அனைத்து உயிர்களிலும் மரபியல் ரீதியாகவும் நேரடியாகவும் கொஞ்சம் கொஞ்சமாக பாதிப்பு ஏற்பட்டு இந்த பூமியை ஒரு இறுதிச் சடங்கிற்கு கொண்டு சென்றுகொண்டிருக்கிறோம்.

இந்த பூமியை மேற்கண்டவைகளிலிருந்து பாதுகாத்தால்தான்,  நாம் இங்கு ஒரு ஆரோக்கியமான வாழ்வை வாழமுடியும். நம்   எதிகால சந்ததியினரின் வாழ்க்கைக்கும் ஒரு உத்திரவாதத்தை கொடுக்க முடியும்.  இது நம் ஒவ்வொருவரின் கடமையும் ஆகும்.
முன்னதாக குறிப்பிட்டபடி பூமி மாசுபடுதலில் பல காரணங்கள் இருந்தாலும், அவற்றில் பல இன்றைய விஞ்ஞான வளர்ச்சியில் தவிர்க்க முடியாததாகிவிடுகிறது. அரசாங்கம், அதிகாரிகள் மனசாட்சியுடன்   மனது வைத்தால் இருக்கின்ற சட்டங்களை முறையாக பயன்படுத்தி  ஓரளவு கட்டுப்படுத்தலாம்.  ஆனால்...!

ஆனால், நாம் மனது வைத்தால்.....! ஓரளவு முடியும்.  நாம் தெரிந்தோ தெரியாமலோ இன்றைய நவீன, அவசர உலகில் இந்த நிலம்,  நம் சுற்றுப்புறம்  மாசுபடுதலில் ஒரு காரண கர்த்தாவாக விளங்குகிறோம். இது தவிர்க்க கூடிய ஒரு செயல்தான். அது தான் இந்த கட்டுரையின் தலைப்பு. “கேரிபேக் தவிர்ப்போம்!

யோசித்து பார்ப்போம்...! இரண்டு ரூபாய்க்கு ஒரு வாழைப்பழம் வாங்கினால்கூட நாம் கேட்டாலும் கேட்காவிட்டாலும் ஒரு ‘கேரிபேக் என்னும் பாலிதீன்பை மக்காத குப்பையையும் சேர்த்து வீட்டுக்கு வாங்கிவந்து விடுகிறோம். “அந்நியன் கணக்கு (அஞ்சி பொருளுக்கு, அஞ்சி நாளைக்கு, அஞ்சி கேரிபேக் வாங்கினால்...! ) போட்டுபார்த்தால்.... விடை எண்ணால் கிடைக்காது!.  நேரடியாக பார்கலாம்!.  வீட்டை சுற்றி, ஊரை  சுற்றி, ...ஏன் நம்மை சுற்றி தினந்தோறும் வெறுப்பாகவும் அதில் நம் பங்களிப்பு இல்லை என்பது போலவும் பார்த்துக்கொண்டிருக்கிறோம்!.
எனக்கு தெரிந்து, நான் சிறுவனாக இருந்த பொழுது, எண்ணை வாங்க கடைக்கும், இருமல்மருந்து வாங்க மருத்துவமனைக்கும் பாட்டில் எடுத்து சென்றுள்ளேன்.  நீங்களோ, அல்லது உங்களின் முன்னோர்களே அப்படித்தான்.  ஆனால் இன்று எண்ணை போன்ற திரவ பொருட்கள் மட்டுமல்லாமல் அனைத்து நுகர் பொருட்களும் பாலிதீன் பைகளால் பேக்கிங் செய்யப்பட்டு விற்பனைக்கு வருகின்றன. டீ கடைகளில் டீ கப் பிளாஸ்டிக்கும் சுற்றுச் சூழலுக்கு ஒரு சவாலாக இருக்கிறது.  இன்னும் நவீனமாக இப்போதெல்லாம் கேரிபேக்கில் சுடச்சுட டீ பார்சல் செய்து தருகிறார்கள்!.
விளைவு... மண்ணில் மக்காத குப்பைகளாக பரவிக்கிடக்கின்றன. மரம், செடி, கொடிகளின் வேர்களுக்க நீர் செல்வதற்க்கு ஒரு தடையாக இருக்கிறது. பொதுவாக 18 மைக்ரானுக்கு குறைவான  பாலித்தீன் பைகள், பிளாஸ்டிக் பொருட்களை மறு சுழற்சி செய்ய முடியாது ஒரு கேரிபேக் மண்ணில்  மக்கிப்போக  400 ஆண்டுகளாகும் என்கிறது ஒரு புள்ளி விவரம். நம் வீட்டை சுற்றி கிடக்கும் இந்த பைகளில் மழை நீர் தேங்கி, தேங்கிய நீரில், கொசு முட்டை இட்டு இனப்பெருக்கம் ஏற்படுகிறது. சாக்கடைகளில் அடைப்பு ஏற்பட்டு, கொசு உற்பத்தியாகி சுகாதார கேடும் ஏற்படுகிறது.  ஆடு, மாடுகள் இந்த பாலிதீன் பைகளை உண்பதால், அதன் பாலில் கெமிக்கல் கலந்திருக்கிறது. அந்தப் பாலைத்தான் நாமும் குடித்துக் கொண்டு இருக்கிறோம். உச்சகட்ட கொடுமையாக தாய்ப்பாலிலும் இந்த கெமிக்கல் இருக்கிறது என்பது நிரூபணம் செய்யப்பட்டிருக்கிறது.
வீட்டை சுற்றி, ஊரை  சுற்றி, ...ஏன் நம்மை சுற்றி தினந்தோறும் வெறுப்பாகவும்
அதில் நம் பங்களிப்பு இல்லை என்பது போலவும் பார்த்துக்கொண்டிருக்கிறோம்!
நாம் பயன்படுத்தும் பிளாஸ்டிக்கில் பிஸ்பினால்-ஏ (Bisphenol -A) என்ற கெமிக்கல் இருக்கிறது. இதை அதிக அளவில் பயன்படுத்தும்போது ஆண், பெண் இருவருக்கும் மலட்டுத்தன்மை ஏற்படுகிறது. அதனால்தான் இன்று எங்கு பார்த்தாலும் செயற்கை வழி கர்ப்பங்கள் பெருகி வருகின்றன. அதுமட்டுமல்ல, 10, 11 வயதிலேயே பெண் குழந்தைகள் பூப்படைந்து விடுகிறார்கள். கேன்சர், ஒபிஸிட்டி, தைராய்டு கோளாறு என பல நோய்களுக்கும் வாசல்படியாக இருக்கிறது.

இந்த கேரிபேக்கை  பயன் படுத்துவதற்கு  மாநில அளவில் எடுத்துக்கொண்டால், ஒரு சில மாவட்ட நிர்வாகங்கள் மட்டுமே தடை விதித்துள்ளன. அதுவும் பயன் படுத்துவதற்கு மட்டும் தான்.  தயாரிப்புக்கு ஏன் தடை விதிக்க மாட்டேன் என்கிறார்கள் என்பதுதான் புரியாத புதிராக இருக்கிறது!. மாநில அளவில் தயாரிப்பதற்கு தடை விதித்தால்தான்  ஒரு நிரந்தரமான முடிவுகிட்டும். சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குரல் கொடுத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். அரசு செவிசாய்க்கவில்லை. விரைவில் அரசு நல்ல முடிவு எடுக்கட்டும்!.

அதுவரை,  நம்மால் முடிந்த ஒரு காரியத்தை செய்வோம்!

இனி கடைக்கு செல்லும் பொழுதோ அலுவலகம் செல்லும் பொழுதோ ஒரு துணிப்பை நம் வாகனத்திலோ அல்லது கைபையிலோ இருக்கட்டும். (திருமண விழாக்களில்  மஞ்சள் பை கிடைக்கிறது. வாங்கி பயன் படுத்துவதில்லை. கௌரவ குறைவாகவும் கருதுகிறோம் என்பது யதார்த்தமான உண்மை!).

கடைக்காரர் கொடுக்கும் அந்த கேரிபேக் என்னும் குப்பையை தவிர்த்து, நாம் கொண்டு செல்லும் துணி பையில் பொருள்களை வாங்கி வருவோம்!.  பிளாஸ்டிக் டீ கப்பையும்  தவிர்ப்போம். இந்த பூமியின் இயற்கை வளத்தை பேணிக்காப்பதில் நாமும் சிறிது பொறுப்பேற்றிருக்கிறோம் என்ற ஆத்ம திருப்தியில் எதிர் வரும் புத்தாண்டை வரவேற்போம்!  வாழ்த்துக்கள்!!

        


        







4 comments:

  1. GOOD. EVERYONE SHOULD FOLLOW THIS

    ReplyDelete
  2. your paintings are very nice sir..

    ReplyDelete
  3. வணக்கம்...

    வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… Followers ஆகி விட்டேன்… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

    அறிமுகப்படுத்தியவர் : ஏஞ்சலின் அவர்கள்

    அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : காகித பூக்கள்

    வலைச்சர தள இணைப்பு : ஞாயிற்றுக்கிழமை, சுற்றுலா

    ReplyDelete