Feb 20, 2011

ஜீவா(எ)ஜீவானந்தம்

என் நண்பர் ஒருவரிடம் ஜீவா தபால் தலை வந்திருக்கிறதே? வாங்கினீர்களா என்றேன்.
அவர் "நடிகர் ஜீவாவுக்கெல்லாமா தபால்தலை வெளியிடுகிறார்கள்?" என்றார்.
எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.  இருந்தாலும் சமாளித்துக்கொண்டு, "அவர் இல்லை அவருக்கு தபால் தலை வெளியிடுவார்களா?" என்றேன்.
"ஏன் வெளியிடக்கூடாது.  நடிகைகள் அனுஷ்கா, தமன்னா, அசின், ஆர்யா போன்றவர்களுக்கு அவர்களின் கலைச்சேவையை(?!) பாராட்டி கலைமாமணி விருது கொடுத்திருக்கும் போது இவர்களுக்கு தபால் தலை வெளியிட கூடாதா?" என்றார்.
எனக்கு நண்பரின் நக்கல் புரிந்தது.
"நீங்கள் கேட்டது இந்த கம்யூனிஸ்ட் கட்சிக்காரர் ஜீவாவா?!" என்றார்.
பரவாயில்லை,  இந்த அளவுக்காவது தெரிந்திருக்கிறாரே என்று எனக்கு மகிழ்ச்சி!.
"ஆமாம்" என்று சொல்லிவிட்டு, ஒருவருக்கு இந்திய அஞ்சல்துறை தபால் தலை வெளியிடுகிறார்கள் என்றால் அவர் எப்பேர்ப்பட்டவராக இருப்பார்?.  

"மகாத்மா காந்தி  ஜீவாவை  "இந்தியாவின் சொத்து" என்று கூறியிருக்கிறார் என்றால், இவர் எத்தகைய தலைவர் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்"  
எனக்கு தெரிந்த அளவு ஜீவாவை பற்றி சுருக்கமாக கூறினேன்.
இந்த பதிவின்மூலம் அவரைப்பற்றி இன்னும் விரிவாக........ 
தார்த்தா கி.பென்னேஸ்வரன் 21-11-2004 அன்று
தில்லித் தமிழ்ச் சங்கத்தில் தடம் பதித்த தமிழர்கள் தொடர் சொற்பொழிவுக் கூட்டத்தில் ஆற்றிய உரை.



அனைவருக்கும் வணக்கம்.

1963-ம் ஆண்டின் ஒரு நாள்.

சென்னையின் ஜனசக்தி அலுவலகத்தில் எழுத்துப்பணியில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டு இருக்கிறார் ஒருவர்.

அப்பொழுது இளம்பெண்கள் இருவர் ஜனசக்தி அலுவலக வாயிலில் தயங்கித் தயங்கி நிற்கின்றனர்.

ஜீவா இருக்கிறாரா? என்று ஒரு பெண் மெதுவாகக் கேட்கிறாள். உடனே இருவரும் ஜீவாவின் அறையில் அனுமதிக்கப்படுகின்றனர். இரு பெண்களும் ஜீவாவின் முன் தயங்கி அமர்கின்றனர்.

பரிவான குரலில் என்னம்மா வேண்டும் என்று கேட்கிறார் ஜீவா.

உங்களைத்தான் பார்க்க வந்தோம் என்று ஒரு பெண் கூறினாள்.

பேசாமல் தயக்கத்துடன் இருந்த பெண்ணை நோக்கி நீ யாரம்மா என்று கேட்கிறார் ஜீவா.

அந்தப் பெண் பதில் ஏதும் சொல்லவில்லை. ஏற்கனவே பேசிய பெண், நாங்கள் ஆசிரியப் பயிற்சி முடித்த மாணவிகள் என்கிறாள்.

மீண்டும் ஜீவா, ஒன்றும் பேசாமல் தன்னையே பார்த்துக் கொண்டிருந்த பெண்ணைப் பார்த்து

நீ யாரம்மா? என்று கேட்டார்

கலங்கிய கண்களுடன் அப்பெண் ஒரு துண்டுக் காகிதத்தை ஜீவாவிடம் நீட்டினாள். அதில் -

எனது தாத்தாவின் பெயர் குலசேகரதாஸ். எனது அன்னையின் பெயர் கண்ணம்மா என்று எழுதியிருந்தது.

அந்த வாக்கியங்களை வாசித்த ஜீவா என்ன சொல்வது என்று தெரியாமல் திகைக்கிறார். அத்துண்டுக் காகிதத்தில் என் மகள் என்று எழுதி அந்தப் பெண்ணிடம் நீட்டுகிறார்.


அந்த வார்த்தைகளைக் கண் கொட்டாமல் அந்தப் பெண் உணர்ச்சிகரமாகப் பார்த்துக் கொண்டிருந்தார். எழுதிய அந்தத் துண்டுக் காகிதத்தை ஜீவா திரும்பக் கேட்டார். அப்பெண் அதைக் கொடுக்கவில்லை.

என் மகள் சொல்லவே கூசித்தானே தலையைச் சுற்றி மூக்கைத் தொடுகிறாய் என்று மனந்திறந்து ஜீவா கேட்டு விட்டுவிட்டார்.
ஒரு புன்சிரிப்பினால் பதில் சொன்னாள் ஜீவாவின் மகளான அந்தக் குமுதா.

ஜீவாவின் முதல் துணைவியார் திருமதி கண்ணம்மாவின் ஒரே பெண்.
கண்ணம்மாவின் தகப்பனார் குலசேகர தாஸ் கடலூரிலிருந்து காங்கிரஸ் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே தலித் சட்டசபை உறுப்பினர்.

குமுதாவைப் பெற்றெடுத்த சில நாட்களில் கண்ணம்மா தன் கண்களை மூடினர். அதன் பிறகு குமுதா தன் தாய்மாமன் வீட்டில் வளர்ந்து வந்தாள். அவர்களையே பெற்றோர் என்று எண்ணி அவள் வளர்ந்து வந்தாள்.

அந்தக் குமுதா தனது 17 வயது வாழ்க்கையைத் தன் தந்தையிடம் சொல்ல, அந்தத் தந்தை தமது 17 ஆண்டுக் கால வாழ்க்கையை, தான் நாடு கடத்தப்பட்டதை, தன் சிறைவாழ்வை, அரசியல், பொதுவாழ்வு போன்றவைகளில் தன்னையும் தன் வருடங்களையும் கரைத்துக்கொண்டதை தன் மகளுக்கு சொல்கிறார். பிறகு அந்த மகள் தந்தை இறக்கும் வரை அவருடைய குடிசையில் வசிக்கிறாள்.

   தோழர் ஜீவா

தோழர் ஜீவாவின் வாழ்க்கைப்பயணம் பல அலைகளைக் கடந்து வந்தது. பல திசைகளில் பயணித்த ஒன்று. கடந்த பாதையெங்கும் முட்புதர்களை மட்டுமே கண்டது. தியாகங்களைக் கண்டது. போராட்டங்களைக் கண்டது. உண்மைகளை எதிர்கொள்ளும் நெஞ்சுரத்தைக் கண்டது. பொய்iயை எதிர்த்து நிற்கும் வல்லமையைக் கண்டது. தன்னுடைய பிறவிக் குணமாக தான் காணும் எதிலும் ஒளிவு மறைவற்ற தீவிரத் தன்iமைய ஏற்றுக் கொண்டது. மற்ற அரசியல் தலைவர்களைப் போல அல்லாது தங்கள் இயக்க சௌகர்யத்துக்காக மட்டும் அல்லாது கலை இலக்கியத்தை மானுட வாழ்வு
முழுமைக்குமான பயன்பாட்டுக்கான சாதனங்களாக நோக்க வைத்த பயணம் தோழர் ஜீவாவின் பயணம் என்று சொல்லலாம்.

நாஞ்சில் நாட்டின் பூதப்பாண்டியில் பட்டம்பிள்ளைக்கும் உமையம்மைக்கும் மகனாக 21-08-1907ல் பிறந்த சொரிமுத்து, மூக்காண்டியாக உருவெடுத்து பின்னர் ஜீவானந்தமாகவும், இடையில் வந்த தனித்தமிழ்ப்பற்றின் காரணமாக உயிரின்பனாகவும் மாறிப் பின்னர் ஜீவானந்தமாகவும் இயக்கத்தோழர்கள் மற்றும் அனைத்துத் தமிழர்களுக்கும் ஜீவாவாக மாறிய வரையிலான அவருடைய பயணம் தான் நம்பியதை உண்மையென்று உறுதியாக நம்பிய பயணமாகவே இறுதி வரை தொடர்ந்துள்ளது.

அவருடைய பொதுவாழ்விலான ஈடுபாடு மிக இளமையிலேயே ஆரம்பித்தது என்று சொல்வார்கள். அது தீண்டாமை மிகவும் கொடுமையாக உலவி வந்த காலகட்டம். ஆலயப்பிரவேச உரிமை தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மறுக்கப்பட்ட காலம். நாஞ்சில் நாட்டின் ஊர்களில் கோயில் திருவிழா தொடங்கியதும் நான்கு முக்கிய தெருக்களிலும் தெரு மறிச்சான் கட்டி விழா தொடங்கி விட்டது என்று அறிவிப்பு செய்வார்கள். தாழ்த்தப்பட்ட சாதியினர் அந்தத் தெருக்களில் நுழையக்கூடாது என்று தெருவில் போடப்படும் தடுப்புத்தான் தெருமறிச்சான். இதைக் கண்டு மனம் வெதும்பிய ஜீவா சேரியைச் சார்ந்த தனது இரு நண்பர்களை அழைத்துக் கொண்டு அந்த தெருமறிச்சானைத் தாண்டி அவர்களை உள்ளே அழைத்துச் சென்றிருக்கிறார். ஊர்மக்களால் கட்டப்பட்ட அந்தத் தெருமறிச்சானைப் பிடுங்கியெறிந்து தன்னுடைய தோழர்களை அத்தெருவுக்குள் அழைத்துச் சென்றிருக்கிறார். நாஞ்சில் நாட்டில் நடந்த ஆலயப்பிரவேசப் போராட்டத்தின் முன்னோடிகளில் ஒருவராக ஜீவா திகழ்ந்ததற்கு இச்சம்பவம் காரணமாக அமைந்தது என்று அவருடைய வாழ்க்கை வரலாற்றை எழுதிய அனைவரும் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

ஜீவாவின் துவக்க காலம் கதர், காங்கிரஸ் போன்றவைகளில் ஆழ்ந்த நாட்டம் கொண்டிருந்திருக்கிறது. அவருடைய தாயார் மரணத்தின் போது கொள்ளி வைக்கும்போது கட்டிக்கொள்ளும் கோடித்துணிக்காக கதராடையைக் கேட்டிருக்கிறார் ஜீவா. அது மறுக்கப்பட்டதால் தனது தாயாருக்கு கொள்ளி போடவும் மறுத்திருக்கிறார். பின்னர் அவருடைய சகோதரர் நடராஜனை வைத்து தாயாரின் இறுதிச் சடங்கினை உறவினர்கள் முடித்திருக்கிறார்கள்.

தன்னுடைய மிகவும் இளம்வயதில் 1924ல் பெரியாரை சந்தித்திருக்கிறார் ஜீவா. அந்த சந்திப்பு வைக்கத்தில் நடைபெற்ற மிகவும் சரித்திரப் பிரசித்த பெற்ற ஆலயப் பிரவேசப் போராட்டத்தில் அவரை மிகவும் தீவிரத்துடன் ஈடுபட வைத்திருக்கிறது. சுமார் 20 மாதங்கள் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டதினால் தன்னுடைய பள்ளிப்படிப்பினை இழந்து தன்னுடைய சொந்த ஊரான நாஞ்சில் நாட்டின் சுசீந்திரத்தில் நடைபெற்ற ஆலயப்பிரவேசப் போராட்டத்திலும் கலந்து பல இன்னல்களை அனுபவித்திருக்கிறார் ஜீவா. நாஞ்சில் நாடு திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்ததினால் இப்போராட்டங்கள் அவர் எதிர்பார்த்த அளவுக்கான வீச்சில் நடைபெறாததால் நாஞ்சில் நாட்டை விட்டு வெளியேறியிருக்கிறார் ஜீவா.

பின்னர் சேரன்மாதேவியில் வவேசு என்று அழைக்கப்படும் வரகநேரி வேங்கட சுப்பிரமணிய அய்யர் தலைமையில் நடைபெற்ற பாரத்வாஜர் ஆசிரமத்தில் ஆசிரியராக சேர்ந்திருக்கிறார். அந்த ஆசிரமத்தில் முதிந்தவர்களுக்குக் கொரில்லா போர் முறை, துப்பாக்கிச் சூடு, சங்கேத மொழியில் கருத்துப் பரிமாற்றம் போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டன. பின்னாளில் கலெக்டர் ஆஷ்துரையைச் சுட்டுக் கொன்ற வாஞ்சிநாதனுக்கு புதுச்சேரிக்கு முன்னதாக துப்பாக்கியில் சுடும் பயிற்சியும் அளிக்கப்பட்டது என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் வேதனைக்குரிய விஷயம் என்னவென்றால் இவ்வளவு தேசப்பற்றுள்ள, தீவிரவாத பாரம்பரியம் கொண்ட வவேசு அய்யர் நடத்திய இந்த ஆசிரமத்தில் வருணாசிரம முறையையும் கடைப்பிடித்ததுதான். இது இன்று வரை விளங்காத ஒரு புதிராகவும் இருக்கிறது. இங்கு பிரமாணப் பிள்ளைகளுக்கு ஓரிடத்திலும் பிராமணர் அல்லாதவர்களுக்கு வேறிடத்திலும் உணவு பறிமாறப்பட்டது அப்போது பலரைக் கொதிப்படையச் செய்தது. பெரியார் வைக்கத்திலிருந்து வந்து இதற்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டார். இந்த விஷயத்தில் சமரசம் செய்து வைக்க காந்தியே சென்னைக்கு வந்திருக்கிறார். இந்தப்பிரச்னை பெரியார் காஞ்சியில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் காங்கிரஸை விட்டு வெளியேறி சுயமரியாதை இயக்கத்தினை தொடங்கி வைக்க வழிவகுத்தது. இந்தப் பிரச்னையில் பெரியார், வரதராஜூநாயுடு ஆகியோருடன் துணை நின்ற ஜீவா சேரன்மாதேவி ஆசிரமத்தை விட்டு விலகி காரைக்குடி சென்று சிராவயல் கிராமத்தை சேர்ந்த காசி விசுவநாதன் செட்டியார் உதவியுடன் தன்னுடைய சிராவயல் ஆசிரமத்தை நிறுவியிருக்கிறார். இந்த ஆசிரமத்தில் காந்திய நிர்மாணத் திட்டத்தோடு தேவாரம், திருவாசகம், திருக்குறள், நிகண்டு மற்றும் பாரதியார் பாடல்கள் ஆகியவை போதிக்கப்பட்டன. இங்குதான் சொரிமுத்து ஜீவானந்தமாக பெயர் மாற்றம் பெற்றிருக்கிறார். இந்த ஆசிரமத்தில் இருந்த காலத்தில்தான் ஜீவாவுக்கு சங்க இலக்கியம் முதல் பாரதி வரையிலான எல்லா நூல்களையும் படிக்க வாய்ப்புக் கிட்டியிருக்கிறது.

இந்த நூல்களின் பரிச்சயமும், சேரன்மாதேவி ஆசிரமத்தில் அவருக்குக் கிடைத்த அனுபவமும் ஜீவாவை தீவிரமான வடமொழி எதிர்ப்பாளராகவும் தனித்தமிழ் ஆர்வலராகவும் மாற்றியிருக்கிறது.

இக்கட்டுரையின் துவக்கத்தில் சொன்னது போல ஜீவாவின் பிறவிக்குணமான எதிலும் தீவிரம் என்கிற விஷயம் இதிலும் வெளிப்பட்டிருக்கிறது. தனித்தமிழ் ஆர்வம் ஜீவானந்தத்தை உயிரின்பனாக பெயர் மாற்றம் செய்திருக்கிறது. இவருடைய துடிப்பான தனித்தமிழ்ப் பேச்சை மிகவும் ரசித்த பாரதி அன்பர் வ.ராமசாமி இம்மாதிரி பிரசங்கத்தை நான் கேட்டதே இல்லை என்றும் ஆனால் தமிழ் மொழியின் வளர்ச்சியை உத்தேசித்து தயவு செய்து தனித்தமிழை விட்டுவிடுங்கள். இந்தத் தமிழைப் பாமர மக்களால் புரிந்து கொள்ள முடியாது. இது மக்களுடைய மொழியல்ல என்று யோசனை தெரிவித்திருக்கிறார். இந்த யோசனை ஏற்றும் மனநிலையில் ஜீவா அப்போது இல்லை. பெரியார் சுயமரியாதை இயக்கத்தை ஆரம்பித்போது ஜஸ்டிஸ் கட்சிக்கும் அதற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. அதனால் ஜீவா காங்கிரஸ் கட்சியில் இருந்து கொண்டே பெரியாரின் சுயமரியாதை இயக்கத்திலும் இருந்திருக்கிறார். அப்போது தூய தமிழ் இயக்கத்தின் முன்னோடியாக இருந்த சுவாமி வேதாச்சலம் என்கிற மறைமலையடிகள் ஜீவாவுக்கு ஆதர்ச புருஷனாக இருந்திருக்கிறார்.

1927ம் ஆண்டு செங்கற்பட்டில் நடந்த சுயமரியாதை மாநாட்டிலும் சென்னையில் நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டிலும் கலந்து கொண்ட ஜீவா மறைமலையடிகளைப் பார்க்க பல்லாவரம் போயிருக்கிறார்.

மறைமலையடிகள் வீட்டை அடைந்து கதவைத்தட்டிய போது பேட்ட குரல் ஜீவாவை மதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. கேட்ட குரல் தனித் தமிழ் இயக்கத்தின் ஆதர்ச நாயகனாகக் கருதப்பட்ட மறைமலையடிகளின் குரல். துரதிருஷ்டவசமாக அக்குரல் தனித் தமிழில் ஒலிக்கவில்லை.

யாரது போஸ்ட்மேனா? என்று தனித்தமிழ்; வித்தகர் கேட்ட கேள்வி ஜீவாவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அதைத் தொடரந்த மறைமலையடிகளுடனான விவாதத்தில் அவர் வடமொழி எதிர்ப்பாளாராக மட்டுமல்லாது ஆங்கித்தின் ஆதரவாளராகவும் இருப்பதையம் உணர்ந்திருக்கிறார் ஜீவா. பிற்காலத்தில் தன்னுடைய தலைமறைவு வாழ்வின் போது மக்களுடன் ஜீவனுள்ள தொடர்பு கொள்ள வேண்டுமென்றால் வரா சொன்னது போல மக்கள் மொழியில் பேசவேண்டும் என்பதை உணர்ந்ததாக பல இடங்களில் பதிவு செய்திருக்கிறார் ஜீவா.

சிராவயலில் ஆசிரமம் நடத்திக் கொண்டிருந்தபோது வ.உ.சிதம்பரனார் அங்கு வருகை புரிந்தபோது மாணவர்களை நூல் நூற்க வைப்பது குறித்து மிகவும் தாக்கிப்பேசியிருக்கிறார். வாள்பிடிக்க வேண்டிய கைகளை நூல் நூற்க வைப்பது ஏன் என்றும் கேள்விகேட்டு பெண்களைப் பற்றியும் சில கருத்துக்களை முன்வைத்திருக்கிறார். ஜீவா நூல் நூற்க வேண்டியதன் அவசியத்தைப் பற்றி தைரியமாக எடுத்துரைத்தது மட்டுமல்லாது வஉசியின் பேச்சில் வெளிப்பட்ட பெண்களைப் பற்றிய தவறான கருத்துக்களை மிகவும் தைரியத்துடன் சுட்டிக்காட்டி அவரை மறுத்திருக்கிறார் ஜீவா. ஜீவாவின் தைரியத்தை மிகவும் மெச்சிய வஉசி பின்னாளில் பெண்களைப் பற்றிய தன் கருத்துக்களை மாற்றிக் கொண்டதையும் அதில் ஜீவாவின் பங்கு பற்றியும் பதிவு செய்திருக்கிறார்.

சிராவயல் ஆசிரமத்தில் பல அற்புதமான காரியங்களை நிகழ்த்தியிருக்கிறார் ஜீவா. அவைகளை அக்காலத்திய சமூக நடைமுறை மனதில் கொண்டு பார்க்கும் போது அச்செயலின் பிரம்மாண்டம் நமக்கு விளங்கும். பல ஆதி திராவிடக் குழந்தைகளுக்கு கௌதமன், மணிவாசகன், மணித்தொண்டன், கிளிமொழி, மங்கையர்க்கரசி போன்ற பெயர்களைச் சூட்டி அவர்களுக்கு வடமொழி சுலோகங்களைப் பயிற்றுவித்து பல பொது மேடைகளில் அவர்களை அச்சுலோகங்களை சொல்லும்படி செய்திருக்கிறார் ஜீவா.

1927ம் வருடம். இலங்கைக்கு செல்லும் வயலில் ஜீவா சிராவயலில் நடத்தி வந்த ஆசிரமத்தைப் பற்றிக் கேள்விப்பட்ட காந்தியார் வவேசு அய்யருடன் அந்த ஆசிரமத்துக்கு வருகை புரிந்திருக்கிறார். அகிம்சைவாதியான காந்தி தன்னுடைய சபர்மதி ஆசிரமத்தில் நோய்வாய்ப்பட்ட ஆட்டுக்குட்டியை விஷ ஊசி போட்டுக் கொன்றதை ஏற்கனவே சுதேசமித்திரன் பத்திரிகையில் படித்த ஜீவா அது குறித்து காந்திஜியிடம் துணிச்சலாக முதல் சந்திப்பிலேயே எதிர்த்து வாதிட்டிருக்கிறார். வருணாசிரமம் குறித்த காந்திஜியின் கருத்துக்கள் குறித்தும் ஜீவா வாதம் செய்திருக்கிறார். ஜீவாவின் துணிச்சல் கண்டு மிகவும் வியந்து போன காந்தியடிகள் விதத்துக்கிடையே உங்களுக்குச் சொத்து எவ்வளவு இருக்கிறது என்று கேட்டார்.

இந்தியாதான் என் சொத்து என்று ஜீவா பதிலளித்திருக்கிறார்.

இல்லை. இல்லை. நீங்கள்தான் இந்தியாவின் சொத்து என்று ஜீவாவைப்பார்த்து மகிழ்ச்சியுடன் காந்தியடிகள் சொல்லியிருக்கிறார்.

இந்த சந்திப்பு ஜீவாவுக்கு சிறிது சிறிதாக காந்தியடிகள் மீதும் காங்கிரஸ் மீதும் கொண்டிருந்த ஆழமான ஈடுபாட்டினை சிறிது அசைத்து வைக்கிறது.

இன்று இறைவன் அருளால் நமக்கு வாய்த்த அற்புதமான தலைவர்கள் ஜீவாவின் பதிலை வேறுவிதமாக அர்த்தப்படுத்திக் கொண்டு இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் வசதியாக ஜீவாவை அடிக்கடி நினைவுபடுத்திக் கொள்வதும் இல்லை.

சிராவயல் ஆசிரமத்தின் நிர்வாகிகளுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடுகளினால் அங்கிருந்தும் வெளியேறுகிறார் ஜீவா.
ஜீவாவின் தீவிர அரசியல் ஈடுபாடு படிப்படியாக அந்நாளில் நிலவிய அரசியல் சூழலில் தீவிரமடைந்து வந்துள்ளது. 1932ல் சட்ட மறுப்பு இயக்கத்தில் பங்குகொள்ளவைத்து சிறைவாசம் பெற்றுத்தந்தது. அந்த ஆண்டு ஜனவரியில் காங்கிரஸ்காரராக சிறைக்குள் புகுந்த ஜீவா நவம்பரில் வெளியேறும்போது சிறைக்குள் கிடைத்த நட்பு மற்றும் அங்குக் கிடைத்த நூல்களின் ஈர்ப்பில் கம்யூனிஸ்டாக வெளியே வருகிறார்.

இக்காலகட்டத்தில் பொதுஉடைமை இயக்க முன்னோடிகளில் முக்கியமானவராகக் கருதப்படும் சிங்காரவேலரின் நட்பு ஜீவாவுக்குக் கிடைக்கிறது. தன்னுடைய வீட்டு நூலகத்தை பயன்படுத்திக்கொள்ள ஜீவாவுக்கு அனுமதி அளிக்கிறார். இது ஜீவாவின் வாழ்வில் மிகப்பெரிய ஜன்னலைத்திறந்து வைத்துள்ளது.

வேறு ஒரு விஷயத்தையும் இங்கே குறப்பிட்டாக வேண்டியிருக்கிறது. தமிழகத்தின் முதல் பொதுவுடமை வாதியாகக் கருதப்படும் சிங்காரவேலருக்கும் ஜீவாவுக்கும் உள்ள ஒருமைப்பாடு இதர அரசியல் தலைவர்களிடமோ சுதந்திர போராட்ட காலத்திய பொதுவுடமைவாதிகளிடமோ காணப்படாத ஒரு பண்பாடு ஆகும். இருவரும் ஒரே சமயத்தில் சமூக விடுதலை தளத்திலும் செயலாற்றியிருப்பது இலவ்விரு தலைவர்களும் ஒரே சமயத்தில் சுயமரியாதை இயக்கத்திலும் தேசவிடுதலைத் தளத்திலும் முன்னணியில் நின்றிருக்கிறார்கள். தீவிரமாகப் பங்கேற்றிருக்கிறார்கள்.

அதே நேரம் பெரியார் சுயமரியாதை இயக்கத்தை ஜமீன்தார்கள், மிட்டாதாரர்கள், ராவ்பகதூர்களின் கட்சியான ஜஸ்டிஸ் கட்சியுடன் இணைக்க முற்பட்டபோது சுயமரியாதைக் கட்சியை பெரியார் அவமரியாதைக் கட்சியாக்கி விட்டார் என்று கண்டிக்கவும் இருவரும் தயங்கியதில்லை.

பகத்சிங்கின் நான் ஏன் நாத்திகன் ஆனேன் என்னும் கடிதத்தை ஜீவா தமிழில் மொழிபெயர்க்க பெரியார் அதனை பிரசுரிக்கிறார். அப்போதைய அரசு இருவரையும் கைது செய்து சிறையில் அடைக்கிறது. பெரியார் மன்னிப்புக்கடிதம் எழுதிக் கொடுத்து சிறையை விட்டு வெளியே வருகிறார். இதற்கு முதலில் தீவிரமாக மறுத்த ஜீவா கட்சியின் கட்டுப்பாட்டுக்கு இணங்கி தானும் ஒரு மன்னிப்புக் கடிதத்தை எழுதிக்கொடுத்து வெளியேறுகிறார். சுயமரியாதை இயக்கத்துடன் சமதர்மக்கொள்கைகளையும் ஏற்றுக்கொள்வதாக முதலில் அறிவித்த பெரியார் 1934ல் கம்யூனிஸ்ட் கட்சிக்குத் தடைவிதிக்கப்பட்டதும் சமதர்மக்கொள்கைகளை அந்தக் கட்சி கைவிடுவதாகவும் மீண்டும் சுயமரியாதை இயக்கமாக அறிவிக்கப்படுகிறது என்றும் தெரிவிக்க கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்த ஜீவா காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியில் தன் சமூகபப்பணிகளைத் தொடர்கிறார். 1937ல் கோவை லட்சுமி மில் போராட்டத்தைத் தொடர்ந்து திருத்துறைப்பூண்டியில் ஈஎம்எஸ் நம்பூதிரபாடு தலைமையில் காங்கிரஸ் சோஷலிஸ்ட் மாநாட்டில் ஜீவா செங்கொடியினை ஏற்றுவித்தார். அதைத்தொடர்ந்து 1938ல் மதுரை பசுபதி மில் தொழிலாளர்கள் போராட்டத்தில் கைது செய்யப்டுகிறார் ஜீவா. இப்படியான போராட்டங்களுக்கான களம் வலுவடைகிறது ஜீவாவின் வாழ்வில். அதன் பிறகு அவரது வாழ்வல் அலைக்கழிப்பு தொடங்குகிறது. காங்கிரசிலிருந்து வெளியேற்றப்பட்டு பின்னர் சென்னை மாகாணத்திலிருந்தே வெளியேற்றப்பட்டு பம்பாய் சென்று அங்கும் அரசியல் காரணங்களுக்காகக் கைது செய்யப்பட்டார் ஜீவா. இதுபோன்று இருமுறை சென்னை மாகாணத்தை விட்டு வெளியேற்றப்பட்டிருக்கிறார் ஜீவா.


அந்நேரத்தில் காங்கிரஸ் கட்சியானது தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதிகளில் ஒன்று குற்றப் பரம்பரை சட்ட ஒழிப்பு என்பதாகும். இதை எதிர்த்து ஜீவா, முத்துராமலிங்கத்தேவர் மற்றும் பி ராமமூர்த்தி போன்றவர்கள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் வாதாடிப்பார்த்தும் ஒன்றும் நடக்கவில்லை. இதைத்தொடர்ந்து ராஜாஜி மதுரை வந்தபோது ஜீவாவும் சசிவர்ணத்தேவரும் கலந்து கொண்ட பேரணி மதுரை மாவட்டம் கம்பத்தில் துவங்கி உசிலம்பட்டி செக்காலூரணி வழியாக மதுரை வந்தடைந்தபோது மக்கள் வெள்ளம் அலைமோதியது. ராஜாஜியிடம் மகஜர் ஒன்று சமர்ப்பிக்கப்பட்டது. ஒருவழியாக அடுத்து வந்த சட்டசபைக்கூட்டத்தில் அந்த சட்டம் ரத்துச் செய்யப்பட்டது. இவ்வாறு ஜீவா அரசியல் பொருளாதார பிரச்னைகள் மட்டுமல்லாது சமூகப்பிரச்னைகளிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருந்தார்.

இதற்குப்பின் தொடர்ச்சியான சிறைவாசங்களும் தலைமறைவு வாழ்க்கையும் ஜீவாவின் அன்றாட வாழ்க்கையின் அங்கம் ஆகின்றன.
இடையில் 1937ல் நவம்பர் 20ம் தேதி பல இன்னல்களுக்கிடையில் ஜனசக்தி பத்திரிகையை துவங்கினார் ஜீவா. முதல் இதழில் பாரதிதாசனின் புதியதோர் உலகம் செய்வோம் என்ற பாடலும் ஜீவாவின்

காலுக்குச் செருப்புமில்லை
கால்வயிற்றுக்கூழுமில்லை
பாழுக்கு உழைத்தோமடா - என் தோழனே
பசையற்றுப்போனோமடா

என்னும் பாடல்கள் வெளியாகின. ஜீவாவின் இந்தப்பாடலைப் பாடாத நாடக மேடைகள் தமிழகத்தில் இல்லை என்று சொல்லப்படுகிறது.

அதிலும் இசைமேதை மறைந்த கேபி சுந்தராம்பாள் அவர்கள் இப்பாடலைப் பாடும்போது பலர் கண்ணீர் விட்டு அழுதிருக்கின்றனர் என்று ஜீவாவைப் பற்றி வெளிவந்த அனைத்து நூல்களிலும் பதிவாகியிருக்கின்றது. ஜீவாவின் மரண இறுதிச்சடங்கின் போது நாடகக்கலைஞர் டிகே சண்முகம் அவர்கள் சென்னை இடுகாட்டில் இப்பாடலைப்பாடிய போது கண்ணீர் உகுக்காதவர்கள் யாரும் இல்லை என்று சொல்வார்கள்.

1957ல் டிசம்பரில் திருச்சியில் நடந்த கம்யூனிஸ்ட் கட்சி தமிழக பிரதிநிதிகளின் மாநாட்டை தொடர்ந்து நடந்த பொதுக்கூட்டத்தில் மாநாட்டுத் தீர்மானங்களை விளக்கி ஜீவா பேசிய பேருரையே ஜாதி ஒழிப்பும் மொழிப்பிரச்னையும் என்ற நூல் ஆகும்.

நாட்டின் சுதந்திரத்துக்குப்பின் ஒருமுறை சட்டசபை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார் ஜீவா. சட்டமன்றத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக அவர் ஆற்றிய உரை மிகவும் பிரசித்தமானது.

நான் தமிழன். என்னுடைய மொழியே இந்த ராஜ்யத்தில் ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் என்பது என்னுடைய கோரிக்கை. கல்விக் கூடங்களிலும் ஆட்சி மன்றத்திலும் நியாய மன்றத்திலும் நிர்வாகத்துறையிலும் பிரதேச மொழியே இயங்கவேண்டும். ஆகவே வெகுசீக்கிரமாக தமிழ்மொழியை ஆட்சி மொழியாக்க அரசியலார் தக்க நடவடிக்கை எடுத்துக் கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். ஜனநாயகத்தின் முதல் அடிப்படையான கொள்கை இதுதான். இப்படிச் செய்தால்தான் ஜனநாயகத்தின் முதல் வடிவம் சிருஷ்டிக்கப்படும். தமிழ் தெரிந்தால் போதும். இந்நாட்டின் ஆட்சியாளராகவும் ஆகலாம். உயர்நீதிமன்ற நீதிபதியாகவும் ஆகலாம். கல்லூரிப்பேராசியராகவும் ஆகலாம்.

இது ஜீவா காட்டிய உண்மையான மொழிப்பற்று. இங்கு மொழிப்பற்று கட்சி கோஷமாக வில்லை. கடைவிரித்த வியாபாரப் பொருளாகவில்லை.

அதேபோன்று கம்பன் மீதும் பாரதி மீதும் ஜீவா கொண்டிருந்த பற்றினைப் பற்றி தனியாகவே ஒரு கட்டுரையோ நூலோ எழுதலாம். திராவிட இயக்கங்கள் கம்பராமாயணத்தைக் கடுமையாகத் தாக்கி நூல்கள் எழுதி, அதில் உள்ள சில பகுதிகளை மட்டும் எடுத்துக் கொண்டு விரசமான கட்டுரைகளும் தாக்குதல்களும் தொடர்ந்தபோது கம்பனில் பொதிந்துள்ள நயங்களை அந்த திராவிட இயக்கத்தவர்களின் கடுமையான தாக்குதல்களுக்கு எவ்வித அடிபணிதலும் இல்லாது தன்கருத்துக்களை முன்வைத்தவர் ஜீவா. குன்றக்குடி அடிகளாரும் ஜீவாவும் கலந்து கொண்ட பட்டிமண்டபங்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. இன்று ஆபாசமும் முட்டாள்தனங்களும் மலிந்து கிடக்கும் தொலைக்காட்சி நிறுவனங்கள் முதல் இந்தியாவின் அனைத்துத் தமிழ்ச்சங்கங்களும் அருவருப்பின்றி வளர்த்து வரும் அருவருப்பான பட்டிமன்றப் பாவலர்கள் இவைகள் பற்றி அங்கங்கு கிடைக்கும் குறிப்புக்கதை; தேடிக்கண்டு பிடித்து கொஞ்சம் வெட்கப்பட்டுக் கொள்ளலாம். ஜீவாவை கம்பராமாயண உபன்யாசகர் என்று திராவிட கட்சிகள் நையாண்டி செய்த அதே மேடையில் கம்பனை வியந்து பார்த்து கருத்துக்களை வெளியிட்டவர் ஜீவா. தாமரை இதழ்களில் பாரதி பற்றி ஜீவா எழுதிய கட்டுரைகள் பாரதி ஆய்வாளர்களுக்கு மிகவும் பயனுள்ளவை என்று சொல்லலாம்.

தமிழகத்தின் சிறந்த மேடைப்பேச்சாளராகக் கருதப்பட்ட ஜீவா ஆற்றிய சிந்தனை ஆழமிக்க சொற்பொழிவுகள் அப்போது போதிய பொறியியல் வசதிகள் இல்லாத காரணத்தால் சுந்தரராமசாமி குறிப்பிடுவது போல காற்றில் கலந்த பேரோசைகளாகப் போய்விட்டன. அவர் குடியரசு, பகுத்தறிவு, புரட்சி, ஜனசக்தி, தாமரை ஆகிய பத்திரிகைகளில் எழுதிய கவிதைகளும் கட்டுரைகளும் ஆய்வுக்கட்டுரைகளும் மட்டுமே இப்போது கிடைக்கின்றன. தோழர் ஜீவபாரதி அவர்கள் ஜீவாவின் மொத்தப் படைப்புக்களையும் ஒருங்கிணைத்து வெளியிடவேண்டி தீவிரத்துடன் செயல்பட்டு வருகிறார். வரும் 2007ல் ஜீவாவின் நூற்றாண்டு வருகின்றது. அதற்குள் அவை சாத்தியப்படவேண்டும்.

ஜீவா அடித்தளமிட்ட கலை இலக்கியப் பண்பாட்டு இயக்கமானது இன்று கலை இலக்கியப் பெருமன்றம், மக்கள் எழுத்தாளர் சங்கள், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் என்று இலக்கிய இயக்கத்தையும், முகாமையும் தோற்றுவித்துள்ளது.

ஜீவாவின் வாழ்வில் இறுதியாக ஒரு காட்சி.

அப்போது முதல்வராக இருந்த காமராஜர் சென்னை வண்ணாரப்பேட்டை அருகே ஒரு பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள வருகிறார். அப்போது கட்சித்தொண்டர் ஒருவர் ஜீவா அந்தப்பகுதியில் வசிப்பதாகவும் அவர் மிகவும் உடல்நலம் குன்றி இருப்பதாகவும் கூற அவரை சந்திக்க செல்கிறார். பல குண்டு குழிகளைத் தாண்டி சாக்கடைகளைத் தாண்டி ஜீவா வசித்து வந்த குடிசைக்கு செல்கிறார். அந்த குடிசையின் இழிந்த நிலை காமராஜரை திடுக்கிட வைக்கிறது. ஜீவாவின் பக்கத்தில் அமர்ந்து ''ஜீவா என்ன கஷ்டம் இது? முதல்வரின் கோட்டாவில் உனக்கு ஒரு அரசாங்க வீடு ஒதுக்கிக் கொடுக்கிறேன்.

அங்கு போய் நீ இரு""

ஜீவா சொல்கிறார் - தமிழ்நாட்டில் இருக்கும் எல்லாருக்கும் இருக்க வசதியாக அரசு வீடுகள் கிடைக்கட்டும். அன்று நான் நீங்கள் கொடுக்கும் வீட்டுக்குக் குடியேறுகிறேன்"" என்று.
விரக்தியுடன் முணுமுணுத்துக் கொண்டே காமராஜர் வெளியேறுகிறார்...

ஜீவா நீ உருப்படமாட்டே..

இன்று அப்படி உருப்படாத தலைவர்கள் யாரும் நம்மிடையில் இல்லை. தோழர் ஜீவாவின் நினைவுகள் மட்டும் நம்மிடையே இருக்கின்றன.

நன்றி.

வணக்கம்.

உதவிய நூல்கள்

1. ஜீவா என்றொரு மானிடன் பொன்னீலன்
2. ஜீவானந்தம் வாழ்க்கை வரலாறு இஸ்மத் பாட்சா
3. ஜீவாவின் வாழ்க்கை வரலாறு கே.பாலதண்டாயுதம்
4. ஜீவானந்தம் டி.செல்வராஜ்
5. ஒரு ஜீவநதி பொன்னீலன்
6. கடலோரத்து வானவில் டாக்டர் முத்து குணசேகரன்
7. பாரதி பற்றி ஜீவா கே.ஜீவவாரதி

ஜீவாவின் நூல்கள்
1. மதமும் மனித வாழ்வும்
2. சோஷலிஸ்ட் தத்துவங்கள்
3. புதுமைப்பெண்
4. இலக்கியச்சுவை
5. சங்க இலக்கியத்தில் சமுதாயக்காட்சிகள்
6. மொழியைப்பற்றி
7. ஜீவாவின் பாடல்கள் தொகுப்பு
8. மேடையில் ஜீவா (தொகுப்பு)
9. சோவியத் இலக்கியம் பற்றி ஜீவா
10. கலை இலக்கியத்தின் புதிய பார்வை
11. தேசத்தின் சொத்து (தொகுப்பு)






1 comment:

  1. Youth of today must know about the tall leader and try to follow him

    ReplyDelete