Dec 26, 2010

பிச்சைராமனும் கீரபோண்டாவும்!

                நண்பர் கரிகாலன் மன்மதன் அம்பு போகலாமா? என்று கேட்டபொழுது யோசிக்காமல் போகலாம் என்று கூறிவிட்டேன்!. கமல் படம் என்றால் குறைந்த பட்ச உத்திரவாதம் இருக்கும் என்ற நம்பிக்கையிலும், இந்த பதிவில் எனது முதல் திரை விமர்சனத்தை எழுதலாம் என்ற ஆவலிலும்!.  நீண்ட நாட்களுக்கு பிறகு சிவகங்கையில் உள்ள ஒரு திரையரங்குக்கு சென்று படம் பார்த்தோம்.  பிறகுதான் தெரிந்தது மக்கள் ஏன் திரையரங்குக்கு வராமல் வீட்டில் உட்கார்ந்து ---சி.டியில் படம் பார்க்கிறார்கள் என்று!.  எல்லா நடிகர்களும் விபரம் தெரியாமல் கத்திக்கொண்டிருக்கிறார்கள் திருட்டு சி.டியில் படம் பார்க்கவேண்டாம் திரையரங்கத்துக்கு வாங்க!’ என்று.


                மன்மதன் அம்பு முதல் பாதி பேசிக்கொண்டே இருக்கிறார்கள் என்பது மட்டும் புரிகிறது! ஆனால் என்ன பேசினார்கள் என்பதுதான் புரியவில்லை!.  காரணம் தியேட்டரின் ஒலி அமைப்பு அவ்வளவு மோசமாக இருந்தது. கமல் படத்தில் வசனங்களை கூர்ந்து கவனிக்க வேண்டும்.  ஒவ்வொரு வசனமும் நச்சென்று இருக்கும். ஆனால் என்ன மொழியில் பேசுகிறார்கள் என்றே புரியவில்லை!.  பக்கத்தில் இருக்கும் நண்பரை பார்த்தேன்!. அவர் என்னை பார்த்தார்!. நான் நினைத்துக்கொண்டிருந்தேன், எனக்குத்தான் புரியவில்லை,  என் காதில் ஏதோ கோளாறு என்று!.  அவர் நினைத்துக்கொண்டிருந்தார், தமக்குத்தான் புரியவில்லை என்று.  இடைவேளையின்போதுதான் தெரிந்தது மொத்தத்தில் யாருக்குமே புரியவில்லை என்று!?.
இப்போது தியேட்டருக்கு வரும் நடுத்தர மக்களின் வீடுகளுக்கு வகை வகையான HOME THEATERE வந்துவிட்டது!.   வீட்டில் செய்த சுவையான திண்பண்டங்களை சாப்பிட்டுக்கொண்டே தியேட்டர் எபக்ட்–ல் படம் பார்க்கலாம். பாட்டு பிடிக்கவில்லை என்றால் தம் அடிக்க வெளியில் எழுந்து செல்ல வேண்டியதில்லை!, ரிமோட்டில் ஓட்டிவிடலாம்!. இடையில் வேலையிருந்தால் நிறுத்திவிட்டு பிறகு விட்ட இடத்திலிருந்து தொடரலாம்!. மொத்தத்தில் நான்கு பேர் உள்ள ஒரு குடும்பத்திற்கு வாரம் குறைந்த பட்சம் ஒரு 400 ரூபாய் மிச்சம்!
இதை எதற்கு சொல்கிறேன் என்றால்,  திரைப்படங்களை நவீனமாக எடுத்தால் மட்டும் போதாது, அது திரையிடப்படும் தியேட்டரும் நவீனமாக இருக்க வேண்டும்.  நுழைவுச்சீட்டு கட்டணமும் ,  காண்டீனில் விற்கப்படும் திண்பண்டங்கலும் நியாயமான விலையில் தரமானதாக இருக்கவேண்டும்.    (வெளியில் இருந்து கொண்டுவரும் திண்பண்டங்கள் அனுமதிக்கப்படமட்டாது என்று எச்சரிக்கை விளம்பரம் வேறு!)  முக்கியமாக, தரமான படங்களை வெளியிடுங்கள்!.  பிறகு சொல்லுங்கள் தியேட்டருக்கு வாங்க! திருட்டு CD-ல் பார்க்காதிங்க என்று!
                    
             படம் நன்றாக இருக்கிறதா இல்லையா என்று,  வேறு ஒரு நல்ல தியேட்டரில் வாய்ப்பு  கிடைத்தால்  பார்த்து விட்டு சொல்கிறேன். அல்லது முன்னதாக 5.1 D.V.D  கிடைத்தால் ரொம்ப நல்லது!.  அது வரை காத்திருக்க விருப்பமில்லா நண்பர்கள் வியாழக்கிழமை ஆனந்த விகடனில் விமர்சனம் வந்து விடும். 44 மார்க்குக்கு மேல் இருந்தால் யோசிக்காமல் பார்த்துவிடுங்கள்!. நான் உத்திரவாதம்!. 40 முதல் 43 வரை இருந்தால், ரொம்பவும் போரடித்தால் பார்க்கலாம்!. அதற்கும் குறைவாக இருந்தால்...? இந்த குளிருக்கு பேசாமல் இழுத்து போத்தி படுங்கள். உத்தமம்.
            ந்த விபத்துக்கு பிறகு இப்போது அலுவலகம், மற்றும் வேறு வேலையாக என் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருக்கிறேன்.  மெதுவாக பாதுகாப்பாக!.  ரோடு ரோலர் வண்டி வந்தால் கூட ஒதுங்கி வழிவிடுகிறேன் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்!. எத்தனை நாளைக்கு என்றுதான் தெரியவில்லை!. (இந்த விசயத்தை இத்துடன் விடுங்கள் என்று உங்களில் ஒருசிலர் மனதளவில் வேண்டுகோள் விடுவது புரிகிறது...!)
            ங்கள் அலுவலகத்தில், ஒரு எட்டு வருடங்களுக்கு முன்பு பிச்சைராமன் என்பவர் கடைநிலை ஊழியராக பணிபுரிந்தார்.  அப்பாவி என்பார்கள்.  அதன் அர்த்தம் அவர் செயல்பாடுகளை பார்த்தபிறகுதான் புரிந்த்தது!. அவர் சாதாரணமாக பேசும் ஒவ்வொரு பேச்சும் நகைச்சுவைதான் என்பது அவருக்கே தெரியாது!.  ஒருமுறை பேசிக்கொண்டிருக்கும்போது சொன்னார், ‘என் மகன் கீர போண்டா பைக்காமே, அது வாங்கணும்னு சொன்னான் என்றார். எங்களுக்கு முதலில் புரியவில்ல பிறகுதான் புரிந்த்தது.  அவர் கீர போண்டா பைக் என்று சொன்னது ‘ஹீரோ ஹோண்டா பைக்கை!
நான் வேலையில் சேர்வதுக்கு முன்பாக நடந்ததாக கேள்விப்பட்டது, ஒருமுறை மேலதிகாரி ஒரு குறிப்பிட்ட பைலை எடுத்துக்கொண்டு ‘chamber’ –க்கு(தனது அறைக்கு) வாங்க என்றிருக்கிறார்.  நீண்ட நேரம் ஆகியும் அவர் வரவில்லை!.  சில மணி நேரம் கழித்து வந்த அவரிடம் எங்கே போனீர்கள் என்று கேட்டபோது ‘போங்க சார்!, சேம்பரில் நான் எவ்வளவு நேரம் காத்திருப்பது?, என்னை வரச் சொல்லிவிட்டு நீங்கள் ஏன் வரவில்லை என்றார்? ‘எந்த சேம்பருக்கு போனீர்கள் என்ற போது, ‘கல்யாணி சேம்பருக்குத்தான் என்றார். கல்யாணி சேம்பர்ஸ்  என்ற பெயரில் ஒரு செங்கல் சூளை உள்ளது. அவர் அங்கு சென்று காத்திருந்த்திருக்கிறார்!.  அவர் அப்பாவியாக நடிக்கவில்லை இயல்பிலேயே அப்பாவி!.
                               ந்த வலைப்பூ ஆரம்பித்து ஒரு மாதம் கூட ஆகவில்லை. அறிமுகமான  நண்பர்கள் வட்டம் வரையே பரந்துள்ளது. அதற்குள் முன்னூறுக்கும் மேற்பட்ட  ஹிட்ஸ்கள் கொடுத்த நண்பர்களுக்கு மிக்க நன்றி!.  Follow  செய்த அந்த மூன்று நண்பர்களுக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ்!. பதிவிட்ட சில விசயங்கள் சொதப்பலாக இருந்தாலும், பொறுத்துக்கொண்டு ஆதரவும் ஆலோசனைகளும் தாருங்கள். மேலும் தரமாகவும், சுவையாகவும் பதிவிட முயற்ச்சிக்கிறேன். இப்போது தானே (வலைப்பூவில்)தவழ  ஆரம்பித்துள்ளேன்!

3 comments:

  1. மதி
    பிச்சை ராமன் பற்றி நிறைய anecdotes உண்டு .கைவசம் பல கதை என்னிடம் உள்ளது . சொல்றேன் ஒன்னொன்னா எழுதுங்க .ஆனா அவர் சங்கத்து மேல வச்சிருந்த நம்பிக்கை குறித்த பாலா விஷயங்களையும் சிலாகித்துச் சொல்லிக்கொண்டே இருக்கலாம் .
    ப.சேர்முக பாண்டியன்

    ReplyDelete