Aug 29, 2011

லோக்பால்-ஜன்லோக்பால்

அரசு அதிகாரிகள், ஊழியர்கள் மீது கூறப்படும் ஊழல், பாரபட்சம் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஒரு அமைப்பு தான், லோக்பால். ஊழலில் ஈடுபடுவோர் மீது, பொதுமக்கள், லோக்பாலிடம் நேரடியாக புகார் அளிக்கலாம். இதன் அடிப்படையில், லோக்பால் அமைப்பு விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்கும். லோக்பாலின் அதிகாரங்கள், செயல்பாடுகள் ஆகியவற்றை நிர்ணயிக்கும் சட்டம் தான், லோக்பால் மசோதா சட்டம்.

ஜன்லோக்பால் மசோதா என்றால் என்ன? : அரசு தயாரித்த லோக்பால் மசோதாவில் ஓட்டைகள் இருப்பதாக கூறி, ஊழலை ஒழிக்கும், முழுமையான மசோதாவாக தயாரிக்கப்பட்டுள்ளது தான், ஜன்லோக்பால் மசோதா. பிரதமர், நீதித் துறையில் உயர் பொறுப்பில் இருப்பவர்கள், அரசு அதிகாரிகள் என, ஊழல் செய்தவர்கள் யாராக இருந்தாலும், இந்த சட்ட மசோதாவின் கீழ் விசாரிக்க முடியும். இதன்படி, லோக்பால் அமைப்பு என்பது, தேர்தல் ஆணையம் போன்ற தன்னிச்சையான அமைப்பாக இருக்கும். இதில், "ஜன்'என்ற வார்த்தைக்கு பொதுமக்கள் என, அர்த்தம். இந்த மசோதாவை நிறைவேற்றுவதற்காகத் தான், அன்னா ஹசாரே போராட்டம் நடத்தி வருகிறார்.

உருவாக்கியது யார்? : கர்நாடகா லோக்ஆயுக்தா முன்னாள் நீதிபதி சந்தோஷ் ஹெக்டே, சுப்ரீம் கோர்ட் வக்கீல் பிரசாந்த் பூஷன், சமூக ஆர்வலர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் கொண்ட குழு தான், ஜன்லோக்பால் மசோதாவை தயாரித்தது.
போராட்டம் நடத்துவது யார்? : ஜன்லோக்பால் மசோதாவின் காதாநாயகன், சந்தேகமில்லாமல், அன்னா ஹசாரே தான். இவருக்கு துணையாக, ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரி கிரண்பேடி, சுவாமி அக்னிவேஸ், மல்லிகா சாராபாய், சட்ட நிபுணர் சாந்தி பூஷன் ஆகியோரும், இந்த மசோதாவை நிறைவேற்றுவதற்காக, போராடி வருகின்றனர்.
ஜன் லோக்பாலால் பொதுமக்களுக்கு என்ன பயன்? : தங்களின் தேவைகளுக்காக, பொதுமக்கள் அரசு அலுவலகங்களை அணுகும்போது, குறிப்பிட்ட காலத்துக்குள், அவர்களின் தேவை நிறைவேற்றப்பட வேண்டும். அப்படி இல்லையெனில், தாமதத்துக்கு காரணமான அதிகாரிகளுக்கு அபராதம் விதிக்கப்படும். இந்த தொகை, பாதிக்கப்பட்டோருக்கு, இழப்பீடாக வழங்கப்படும். உதாரணமாக, சாதிச் சான்றிதழ் பெறுவதற்காக வரும் பொதுமக்களை, "இன்று போய் நாளை வா'என, அதிகாரிகள் இழுத்தடித்தால், இனிமேல், அபராதம் தான். ரேஷன் கார்டு, பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை போன்றவற்றுக்காக விண்ணப்பித்து, குறிப்பிட்ட நாட்களுக்குள் கிடைக்கவில்லை என்றால், பொதுமக்கள், லோக்பால் அமைப்பின் உதவியை நாடலாம். அதேபோல், உங்களின் புகாரை, போலீசார் பதிவு செய்ய மறுத்தாலும், லோக்பால் அமைப்பிடம் முறையிடலாம். ஒரு மாதத்துக்குள் பொதுமக்களின் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். அரசு நிதியில் அமைக்கப்படும் சாலைகள் தரமற்றதாக உள்ளதா, ஊராட்சி நிதி முறைகேடாக பயன்படுத்தப்படுகிறதா, ரேஷன் பொருட்கள் முறைகேடாக பயன்படுத்தப் படுகின்றனவா, லோக்பால் அமைப்பில் புகார் செய்தால், ஊழல் செய்தவர்கள், இரண்டு ஆண்டுக்குள் சிறைக்குள் தள்ளப்படுவர்.
அமைப்பின் உறுப்பினர்கள் ஊழல்வாதிகளாக இருந்தால் என்ன செய்வது? : இதற்கும், ஜன்லோக்பாலில் தீர்வு இருக்கிறது. இந்த அமைப்பின் நடவடிக்கைகள் வெளிப்படையானதாக இருப்பதால், ஊழலுக்கு, பெரும்பாலும் வாய்ப்பு இல்லை. அப்படி இருந்தும், இந்த அமைப்பின் உறுப்பினர்களில் ஒரு சிலர் ஊழல் செய்து விட்டால், சம்பந்தப்பட்ட நபர் குறித்து, புகார் செய்யலாம். புகார் அளிக்கப்பட்ட இரண்டு மாதங்களுக்குள், விசாரணை நடத்தி, ஊழல் செய்தது நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரி, டிஸ்மிஸ் செய்யப்படுவார் என்பது, ஜன்லோக்பால் மசோதாவில் முக்கிய அம்சம்.
விசாரணை அமைப்புகளுக்கு என்ன வேலை? : லோக்பால் அமைப்பு செயல்படத் துவங்கி விட்டால், தற்போது உள்ள ஊழல் கண்காணிப்பு ஆணையம், சி.பி.ஐ.,யின் ஊழல் தடுப்பு பிரிவு போன்றவை எல்லாம் என்ன செய்யும் என்ற கேள்வி எழுகிறதா? இந்த விசாரணை அமைப்புகள் அனைத்தும், லோக்பாலுடன் இணைக்கப்படும் என்பது, ஜன்லோக்பால் மசோதாவில் கூறப்பட்டுள்ளது. பார்லிமென்டில் மசோதா நிறைவேற்றப் பட்டால் மட்டுமே, இந்த சட்டம் நடைமுறைக்கு வரும்.

ஜன் லோக்பால் மசோதாவில் அப்படி என்னதான் இருக்கிறது?
சுப்ரீம் கோர்ட், தேர்தல் கமிஷன் போல், ஜன்லோக்பாலும், ஒரு சுதந்திரமான அமைப்பாக இருக்கும். இதன் விசாரணையில், அமைச்சர்கள், அதிகாரிகள் உட்பட, எவரும் தலையிட முடியாது. ஊழல் புகார் கூறப்பட்டவர்கள் மீதான விசாரணை, ஒரு ஆண்டுக்குள் முடிக்கப்படும். அடுத்த ஒரு ஆண்டில், வழக்கு விசாரணை முடிவடையும். குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட ஊழல் பெருச்சாளி, புகார் கொடுக்கப்பட்ட இரண்டு ஆண்டுகளுக்குள், "மாமியார் வீட்டுக்கு' கம்பி எண்ணப் போய் விடுவார். பிரதமர், நீதித் துறையில் உயர் பொறுப்பு வகிப்பவர்கள், அரசு உயர் அதிகாரிகள் என, அனைவரும், இந்த மசோதாவின் வரம்பிற்குள் கொண்டு வரப்படுவர். ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான நபரால், அரசுக்கு இழப்பு ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட நபரிடம் இருந்து, அந்த இழப்புக்கான நஷ்ட ஈடு பெறப்படும்.

No comments:

Post a Comment