Jul 25, 2011

செய்திகள் வாசிப்பது.....!

                             தமிழில் எந்த டிவி சேனலை வைத்தாலும், சினிமா, பாட்டு, நடனம், மெகா தொடர் நாடகங்கள் என்று இருப்பதால் இதையெல்லாம் தவிர்த்து ஓரளவு நம்ம பொது அறிவை வளர்த்துக்குவோம் என்று செய்தி சேனலை வைத்தால், அந்த செய்திகளில் ஒரு நடுநிலை இல்லை!.

                              தமிழில் ஒரு நடுநிலையான செய்தி சேனல் இல்லாதது ஒரு நீண்ட நாள் குறையே!. பெரும்பாலான நடுநிலையாளர்களின் ஏக்கமும் கூட!. சன் டிவி, கலைஞர் டிவியை வைத்தால் தி.மு.க. சம்மந்தப்பட்ட செய்திகளே வருகிறது!. Spectrum, அதை தொடர்ந்த கைது நடவடிக்கைகள் குறித்த செய்திகள் வருவதில்லை. நாட்டில் ஒண்ணுமே நடக்காதது போல் செய்தி போடுகிறார்கள்!. ராசா, கனிமொழி கைது, தயாநிதி பதவி விலகல் நிகழ்வுகள் இவர்களுக்கு தெரியாது போலும்!, அந்த நேரத்தில் ஏதாவது சம்பந்தமில்லாத செய்திகளை போடுகிறார்கள்.

                             இவர்கள் இப்படி என்றால், ஜெயா டிவி-க்கு சமச்சீர் கல்வி வழக்கில் நீதிமன்ற தீர்ப்பு ஒரு செய்தியே இல்லை!. அதை விடுத்து தி.மு.க கட்சியினர் கைது பற்றி நான்காவது முறையாக செய்தி சொல்லிக்கொண்டு இருப்பார்கள்!


                            இவர்கள், ஆளுங்கட்சியாக இருந்தால் மக்களுக்கு வழங்கிய இலவசங்களையும், எதோ போனால் போகட்டும் என்று செய்த ஒரு சில நல்ல காரியங்களையும் செய்தியாக போடுவார்கள்!. எதிர் கட்சியாக இருந்தால் ரேசன் கடையில் வழங்கிய அரிசியில் புழு இருந்தது, பூச்சி இருந்தது, போனவருடம் இவர்கள் ஆளுங்கட்சியாக இருந்த போது கட்டியது என்று தெரியாமல் பள்ளிகூடத்தில், மேல்நிலை நீர்தேக்க தொட்டியில், சாலையில், விரிசல் என்று இவர்கள் கட்சியினரிடமே பேட்டி எடுத்து செய்தி போடுவார்கள்!.

                            இன்னும், மெகா டிவி, வசந்த் டிவி, மக்கள் டிவி, கேப்டன் டிவி, என கட்சி சார்ந்த டிவி –க்களே இருக்கின்றன, அவர்களும் தங்கள் கட்சி தலைவர்கள், ஒன்றிய செயலாளர், கிளை செயலாளர்கள் செய்த நல்ல காரியங்களை(?) பேட்டிகளை(!) போடுவார்களே தவிர மறந்தும், தங்கள் கட்சிக்கோ, கூட்டணி கட்சிக்கோ பாதகமான செய்திகளை போட மாட்டார்கள் (கூட்டணி தர்மம்!). பெரும்பாலான நேங்களில் இந்த டிவி நிறுவனரும், கட்சி அல்லது கோஷ்டி தலைவரும் தங்கள் மனைவியுடன் ஏதாவது ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மற்றவர்களை குறைவாக பாராட்டி, தங்களை வெகுவாக பாராட்ட வைப்பது சரியான காமெடி கலக்கல்!

                         இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால், மேற்கண்ட ஒவ்வொரு சேனலும் ஒரு சில நிமிடங்களை கூடுதலாக ஓடவிட்டு பூமி உருண்டையை சுத்தவிட்டு செய்திகளை சரியான நேரத்திற்கு முன்னதாகவே வாசிக்க தொடங்கி விடுவார்கள்!. செய்திகளை முந்தித்தருகிறார்களாம்!.

                          சரி! இதையெல்லாம் விடுத்து, நம்ம பொதிகை (அரசாங்க) சேனல் பார்க்கலாம் என்றால், ஒரு மத்திய மந்திரி ரயிலை கொடி அசைத்து வழியனுப்பினார், திருவையாற்றில் தியாக ராஜ ஆராதனை நிகழ்ச்சி நடந்ததது!, (யாரோ ஒருவர் சோகமாக வயலின் வாசிப்பதை 5 நிமிடம் காட்டி வெறுப்பேற்றுவார்கள்) சோனியா காந்தி, பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோர் மும்பையில் குண்டு வெடித்த இடத்தை பார்த்து பொதுமக்களுக்கு(இனிமேல் ஒரு வருடத்திருக்கு வெடிக்காது என்று!) ஆறுதல் கூறினார்கள். பிரதமர் மன்மோகன் சிங் சுதந்திரதின கொடியேற்றி “நாட்டில் ஊழலையும், கருப்புபணத்தையும் (11 வது தடவையாக) ஒழிப்போம்” என்று கூறினார் என்று காமடி நிகழ்ச்சி போட்டுக்கொண்டிருப்பர்கள். இவர்களுக்கும் ஸ்பெக்ட்ரம், ஆதர்ஷ் குடியிருப்பு ஊழல், காமன்வெல்த் விளையாட்டு ஊழல் ஆகியவை முக்கிய செய்திகள் இல்லை. ஒரு செய்திக்கும் அடுத்த செய்திக்கும் இடையில், மயான அமைதியில் செய்தி வாசிப்பவர் இருமிக்கொண்டோ, யோசித்துக்கொண்டோ robotic செய்தி வாசித்து வெருப்பேற்றுவார்.

                            சில வருடங்களுக்கு முன்பு விஜய் டிவி செய்தி நிகழ்ச்சி வழங்கினார்கள். கொஞ்சம் உருப்படியாக இருந்தது, இவர்களுடன் போட்டி போட முடியாமல் ஊத்தி மூடிவிட்டார்கள்!

                            இத்தகைய சூழ்நிலையில், ஜூனியர் விகடன், குமுதம் ரிப்போர்டர்ஸ் தினமணி, இந்திய டுடே போன்ற பத்திரிக்கைகளை நடத்தும் நிறுவனங்கள், அதே ஸ்டைலில் ஒரு செய்தி சேனலை நடத்தினால் நன்றாக இருக்கும்!. நடுநிலையாகவும் இருக்கும்!. மக்கள் வரவேற்பார்கள்!!. இல்லையேல் ஒவ்வொரு அரைமணி நேரத்திற்கும் மேற்கண்ட கட்சி சார்ந்த சேனல்களை மாற்றி மாற்றி (பைத்தியம் பிடிக்காத வரை) பார்த்தால் மக்கள் நாட்டு நடப்பை ஓரளவு அலசி ஆராய்ந்து புரிந்துகொள்ள வாய்ப்பிருக்கிறது.

No comments:

Post a Comment