Apr 24, 2011

குரங்கு பிடிக்கும் பொழப்பு!

                    நான் கல்லூரி படித்து முடித்ததும்,  சிலரைப்போல்  அதாவது காதல் படத்தில் வரும் ஒரு கதாபாத்திரம் சொல்லுவாரே “ வில்லனாகி, ஹீரோவாகி, அப்படியே நேரடியா சி.எம். ஆகவேண்டும் என்று அல்லது ஒரு பாடல் முடிவதற்குள் டாட்டா,  பிர்லா ரேஞ்சுக்கு எங்கேயோ போவாங்களே!, அதுமாதிரி இல்லாவிட்டாலும் கொஞ்சம் கனவுகளை சுமந்துகொண்டு நானும் சென்னையில் ஒரு காலைப்பொழுதில் காலடி எடுத்துவைத்தேன். அங்கே எனக்கு பல அனுபவங்கள் கிடைத்தாலும் பிறகொரு சந்தர்ப்பத்தில் அதைப்பற்றி விரிவாக பதிவிடுகிறேன். இப்போது நான் சொல்ல வந்தது, எனது பங்கு சந்தை அனுபவத்தை பற்றி.  நான் அங்கு பங்குச்சந்தை இடைத்தரகர் ஒருவரின் அலுவலகத்தில் பணியில் சேர்ந்தேன்.             
           துவக்கத்தில் தாராளமானது வைத்து சம்பளம் ரூபாய் 1000 கொடுத்தார்கள்.  அந்த நிறுவனத்தில் மேனேஜர் வேலை என்று சொன்னார்கள். பிறகுதான் தெரிந்தது அலுவலகத்தை கூட்டிப்பெருக்கும் வேலைக்கார அம்மாவை தவிர்த்து நான்மட்டும்தான் சம்பளக்காரன். எனக்கு அப்போது சம்பளம் பெரிதாக தெரியவில்லை.  காரணம் பங்குசந்தையை ஒரு கை பார்க்கவேன்டும் என்ற எண்ணம் இருந்ததால்.   அந்த கால கட்டத்தில் பங்குச்சந்தை கணினிமயமாக்கப்படவில்லை. ஆன்லைன் விற்பனை, டிமேட் கணக்கு கிடையாது. 
           பங்குசந்தையில் கத்திரிக்காய் கணக்காக கூவி கூவி ஷேர் விற்பார்கள். அதையும் அப்போதைய தூர்தர்சனில்தான் பார்த்திருக்கிறேன். மாலை மூன்று மணிக்கு மேல்தான் பங்குகள் என்ன விலைக்கு போயின என்று தெரியவரும்.
           ஆனால் சென்னையில் பெட்டிக்கடை வைத்திருப்பவர் கூட பங்குகளை வாங்கி விற்று நம்பிக்கை இழக்காமல் முடிந்தால் கையில் காசு பார்த்துக்கொண்டிருப்பார்கள். எல்லோரும் பங்குசந்தையில் பங்குகள் வாங்கி விற்று லட்ச லட்சமாக சம்பாதித்துக்கொண்டிருக்கிறார்கள் என்று நினைத்துக்கொண்டிருந்தேன்!.
           எனக்கு அந்த (துர்)பாக்கியம் அந்த நிறுவனத்திலிருந்து விலகும்வரை கிட்டவில்லை.  காரணம் எனக்கு சம்பளம் 1000-லிருந்து  2000-வரை உயர்தப்பட்டலும்  சென்னையை பொருத்தவரை கையில் வாங்கும் சம்பளம் திருவல்லிக்கேணி மேன்சன் வாடகைக்கும், சாப்பாட்டிற்கும், மாதம் இருமுறை தேவி காம்ப்ளக்சில்  பார்க்கும் சினிமாவிற்கும்  போதவில்லை.  மாத கடைசியில் ஊரிலிருந்து மணியார்டர் வந்தால்தான் மெஸ் சாப்பாடு கிடைக்கும். 
          நான் பங்குசந்தையை ஒரு கை பார்த்தேனோ இல்லையோ, அந்த நேரத்தில் “ஹர்ஷத் மேத்தா என்ற நபர் வந்து இரண்டு கை பார்த்ததில் பெரும்பாலானவர்களுக்கு மிச்சமானது கைக்குட்டை மட்டுமே(தலையில் போட்டுக்கொள்ள).
           என்னவோ நான் கோடிக்கணக்கில் பணத்தை போட இருந்து, தப்பித்தது மாதிரி எனக்குள் ஒரு மகிழ்ச்சி.
           ஒரு சுப நாளில் எனக்கு டைபாய்ட் காய்ச்சல் வந்து, எனது சென்னை கனவுகளை அப்படியே மூட்டைகட்டி கூவத்தில் வீசிவிட்டு ஊர் திரும்பினேன்.
          பிறகு எனக்கு அரசாங்கத்தில் வேலை கிடைத்து,  பங்கு சந்தை பற்றி கிட்ட தட்ட   மறந்திருந்த நேரத்தில் (பங்கு சந்தையா?...அப்படினா..?). “ஒரு நண்பனின் கதை(?)பதிவில் நான் குறிப்பிட்ட நண்பர் சேவியர் அறிமுகமானார். 
           ஆரம்பத்தில் அவரை பார்க்கும் பொழுது ஒரு மாதிரியாக மந்திரித்து விட்ட கோழியாக  இருப்பார்.  பிறகுதான் தெரிந்தது அவர் பங்குசந்தையில்  intraday (பங்குளை அன்றே வாங்கி அன்றே விற்பது அல்லது அன்று விற்று அன்றே வாங்குவது) செய்து கொண்டிருக்கிறார் என்று. தற்போதைய பங்குசந்தைபற்றி நிறைய விசயங்களை மூளையில் வைத்துக்கொண்டு பங்குச்சந்தை பற்றி தெரிந்தவர்கள் தெரியாதவர்கள் என்று பார்க்காமல் எல்லோரிடமும் கொட்டிக்கொண்டிருப்பார்.

           அந்த நேரத்தில் அவர் கையில் கொஞ்சம் காசும் பார்த்ததால், ஆசை யாரை விட்டது என்பது போல எனக்கு பட்டுப்போன என் பங்குச்சந்தை கனவு மீண்டும் துளிர்க்க ஆரம்பித்தது.  கூவத்தில் வீசிய கனவு மூட்டையை  மீண்டும் பிரித்தேன்.  கையில் கொஞ்சம் காசும் இருந்ததால் கொஞ்சம் இறங்கித்தான் பார்ப்போமே என்று இறங்கினேன்!.  பங்குச்சந்தை நவீனமாகியிருந்தது. டிமேட் அக்கௌன்ட், ஆன்லைன் டிரேடிங் என்று!.

           அப்போது அவர்கொடுத்த டிப்ஸ் விளங்கியதால்,  அட விளையாடித்தான் பார்ப்போமே என்ற ஆவலில் காலை இன்னும் கொஞ்சம் ஆழத்தில் (intraday) விட்டுப்பார்த்தேன். ஐஸ் விற்க போனால் மழை பெய்யும், பாப்கார்ன் விற்க போனால் காற்றடிக்கும் என்பது போல (கொஞ்சம் மாத்தித்தான் யோசிப்போமே!) நான் பங்கு வாங்கினால் கரடி எச்சில் உமிழ்ந்தது! (பங்கு விலை இறங்கியது). விற்றால் காளை முட்டியது! (பங்கு விலை ஏறியது).
           ஆனாலும் சேவியருக்கு நம்பிக்கை அதிகம். CALL OPTION,  PUT OPTION  என்று என்ன என்னவோ செஞ்சுதான் பார்க்கிறார். புலிவால் புடிச்சிகிட்டு விட மாட்டேன் என்கிறார். யாராவது பங்குசந்தையில் பணத்தை தொலைக்க இவரிடம் ஆலோசனை கேட்கும் பொழுது, மாட்டிக்காதீங்க என்ற வார்த்தை வாய்வரை வந்தாலும், ‘யாம் பெற்ற இன்பம் பெருக வையகம் என்று தோன்றும்.
           எனக்கு, இருந்த கைக்குட்டையும் காணமல் போவதற்கு முன்னாள் ஆளைவிட்டால் போதும் என்று மீண்டு வந்தது தம்பிரான்(?) புண்ணியம். குரங்கு புடிக்கற பொழப்பு நமக்கு வேண்டாம்னு இப்போ நான் நிம்மதியாக இருக்கிறேன்!.
           அதென்ன குரங்கு புடிக்கிற வேலை என்கிறீர்களா?  இந்த கதையை படிங்க புரியும்!.

ஒரு ஊரிலே ஒரு பெரிய வியாபாரி வந்து தங்கி இருந்தாரு. அவர் ஒரு நாளு அந்த ஊருல இருக்குற எல்லார் கிட்டேயும் ஒரு அறிவிப்பு செஞ்சாரு.அதாவது அவர் குரங்கு வியாபாரம் பண்ணப்போறதாவும் ஊருல இருக்குற எல்லாரும் அவர் கிட்டேகுரங்கு பிடுச்சு குடுக்கலாம்னும், அப்படி குடுக்கற ஒவ்வொரு குரங்குக்கும் அவர் 10 ரூபாய் குடுக்கறதாகவும் சொன்னாரு..
இத கேட்ட ஊரு மக்கள், அவங்களால முடிஞ்ச அளவுக்கு காட்டுல போய் குரங்குபுடுச்சி இந்த வியாபாரி கிட்டே குடுத்து காசு வாங்கிகிட்டாங்க. கிட்ட தட்டஒரு வாரம் ஆச்சு.. எல்லாருக்கும் குரங்கு பிடிக்கறதுல நாட்டம் குறைஞ்சிபோச்சு..
இப்ப அந்த வியாபாரி, ஒவ்வொரு குரங்குக்கும் 20 ரூபாய் குடுக்கறதா சொன்னாருஉடனே எல்லாருக்கும் ஆர்வம் வந்து திருப்பியும் காட்டுக்கு போய் முடிஞ்ச அளவு குரங்கு பிடிச்சு அந்த வியாபாரி கிட்டே குடுத்து பணம் வாங்கிகிட்டாங்களாம் .
இப்படியே ரெண்டு வாரம் போச்சு.. ஊருல ஒருகுரங்கு கூட இல்ல.. காட்டுலேயும் ஒரு குரங்கு கூட இல்ல.. எல்லாம் அந்த வியாபாரி கிட்டே தான் இருந்துச்சு.. இப்போ அந்த வியாபாரி சொன்னாராம்..நான் ஊருக்கு போயிட்டு வரேன்.. வரும் பொது இன்னும் நிறைய குரங்கு பிடிச்சு குடுங்க.. அப்படி பிடிக்கற குரங்குக்கு.. இந்த வாட்டி 50 ரூபாய் குடுக்கறேன்னுநான் வர வரைக்கும்  இந்த பிடிச்ச குரங்க எல்லாம் பாத்துக்க என்னோட P.A. வை விட்டுட்டு போறேன்னு சொன்னாராம்.

மக்களுக்குஎல்லாம் அப்படியே Tension ஆயிடுச்சு.. என்னடா இது இப்போ ஊருலேயும் ஒரு குரங்குகூட இல்லகாட்டுலேயும் ஒரு குரங்கு கூட இல்ல..
இப்ப பாத்து இந்த வியாபாரி 50 ரூபாய் குடுக்கறேன்னு சொல்லறாரேஎன்ன பண்ணலாம்னு யோசிச்சிட்டு இருந்தாங்களாம்..அப்போ பாத்து அந்த வியாபாரியோட P.A வந்து ஊரு மக்கள் கிட்டே சொன்னாராம்.. இங்க பாருங்க..
உங்களுக்கோ பிடிக்க குரங்கு இல்ல.. இங்க நீங்க பிடிச்சு வெச்ச குரங்கு எல்லாம் பத்திரமா என்கிட்டதான் இருக்கு.. என் முதலாளி வர்ரதுக்குள்ள இந்த குரங்கை எல்லாம் 35 ரூபாய்க்கு வாங்கிக்கோங்க.. அவர் வந்தவுடனே இதை எல்லாம் 50 ரூபாய்க்கு  வித்துடுங்கன்னு சொன்னாராம்..
திருப்பியும்… ஊர் மக்கள் எல்லாம்  அவங்க பிடிச்சு குடுத்த குரங்கையே 35 ரூபாய்க்கு வாங்கினாங்களாம்.. சரி நமக்கு எதுவும் நஷ்டம் இல்லையே.. எப்படியும் அந்த முதலாளி வந்த வுடனே  இதை எல்லாம் 50 ரூபாய்க்கு வித்துடலாம்என்ற எண்ணத்தோட
இப்போ ஊருக்கு போன முதலாளியும் திரும்ப வரல.. அவரோட P.A. வும் எஸ்கேப்பு….

         இதுதான் குரங்கு புடிக்கிற கதை!.  
         இப்பொழுதெல்லாம் யாராவது பங்குசந்தை பற்றி கேட்டால்,            
        என்னங்கண்ணா? பங்குசந்தையா......? அப்படினா? 

(குறிப்பு: இது என்னுடைய சொந்த அனுபவத்தின் வெளிப்பாடு  மட்டுமே!.  யாருக்காவது நன்றாக குரங்கு பிடித்து விற்று, வாங்க நல்ல திறைமை இருந்தால் இந்த பதிவை பொருட்படுத்தவேண்டாம்!)

2 comments:

  1. Antha Xavier yaaru. avarai paarkanum bola irukku. Enakku konjam pangu chanthaiyilae doubt irukku. Athai clear panna avar number kodunga. Avar photo vaiyum unga web site la podunga. ithu ennudaiya thazhmaiyana opinion.

    ReplyDelete
  2. Anna kurangu pidikara kathai nalllairukungna

    ReplyDelete