அவ்வப்பொழுது எட்டிப்பார்த்து, என்ன ஒண்ணுமே போடலையா, என்று கேட்கும் அன்பர்கள் மன்னிக்கவும். தாங்கள் இவ்வளவு விரைவில் ஆயிரத்தை தாண்டி ஹிட் அடிப்பீர்கள் என்று எதிர்பார்க்கவில்லை. தங்கள் தொடர்ந்த ஆதரவிற்கும் கருத்திற்கும் நன்றி! எழுத நிறைய விசயங்கள் இருக்கிறது. ஆனால் நேரம்? .... இனி வாரம் குறைந்த பட்சம் ஒருமுறையாவது எழுத முயற்சிக்கிறேன்.
=========================================================================
எப்போதும் இல்லாத வகையில் இந்த சட்டமன்ற தேர்தலுக்கு தேர்தல் கமிஷன் மிகவும் கெடுபிடியாக இருப்பது சில பணக்கார கட்சிகளுக்கு வயிற்றை கலக்கியிருக்கிறது. ஆங்காங்கே வாகன சோதனைகளில் கட்டு கட்டாக ரூபாய்களும், நகைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. முறையான ஆவணங்கள் இருந்தால் கைக்கு திரும்பி வரும். இல்லையேல் அரசு கஜானாவுக்கு போவதில் தப்பில்லை. நேர்மையான தேர்தலை நடத்துவதில் தேர்தல் கமிஷன் முனைப்பு காட்டுகிறது. ஆனால் நேர்மையான ஒரு வேட்பாளரை சட்டசபைக்கு அனுப்புவதில் வாக்காளர்கலாகிய நாம்தான் கவனம் செலுத்த வேண்டும்.
=========================================================================
ஆனந்த விகடன் 23.3.2011 தேதியிட்ட இதழில் அரசியல் தலைவர்களுக்கு, சமுகத்தில் மரியாதை மிக்க மனிதர்கள் கீழ்க்கண்டவாறு மதிப்பெண் வழங்கி இருக்கிறார்கள். பாஸ் செய்தவர்களுக்கு வாழ்த்துக்கள்!. இன்னும்
நிறைய மார்க் வாங்க முயற்சி செய்யுங்க. பெயில் ஆனவர்களுக்கு - நல்லா படிச்சி குறைந்த பட்சம் பாஸ் செய்ய பாருங்க.
1. கருணாநிதி -4௦
2. ஜெயலலிதா –35
3. விஜயகாந்த் –21
4. வைகோ -41
5. ராமதாஸ் -31
6. ஸ்டாலின் -31
7. தா.பாண்டியன் –42
8. சரத்குமார் -10
9. திருமாவளவன்_33
அரசியல் கட்சிகள் போட்டி போட்டு இலவசங்களை வாரி வழங்க முற்பட்டுள்ளன. இலவசங்களை கொடுத்து அப்பாவி மக்களை மயக்கலாம். மக்களும் எதோ தங்கள் காசு திரும்பி வந்ததே வந்த வரை லாபம் என்று நினைக்கலாம். ஆனால் இது எங்கு போய் முடியும் என்று தெரியவில்லை. இருந்தாலும் சில கட்சிகள் நிறைய இலவசங்களை வாரி வழங்கி விட்டதால், மற்ற கட்சிகள் என்ன செய்யாலாம் என்று மூளையை(?) கசக்கி சிந்தித்து கொண்டிருக்கின்றன. அவர்களுக்காக நான் உட்கார்ந்து யோசித்து கீழ்க்கண்ட சலுகைகளை தருகிறேன்.
1. ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு நபருக்கு தினமும் நான்கு இட்லி கொஞ்சம் கெட்டி சட்னி (யோசனைக்கு நன்றி மதி-தினமணி)
2. கல்லூரி மாணவ மாணவிகளுக்கு மாதம் 1000 SMS இலவசம்.
(கடி ஜோக்ஸ் தயாரித்து வழங்கப்படும்)
3. மாதம் ஒரு நான்கு சினிமா டிக்கெட் இலவசமாக வழங்கப்படும், தி.மு.க என்றால் சனி ஞாயிறு தவிர்த்து(அன்று மானாட மயிலாட இருப்பதால்) மற்ற நாட்களில் அதுவும் கலைஞர் கதை வசனம் உள்ள படங்களுக்கு மட்டும். அ.தி.மு.க. என்றால் விஜய் படத்துக்கு.
4. வீட்டுக்கு மாதம் 100 unit மின்சாரம் இலவசம் (மின் வெட்டு உள்ள நேரங்களில் மட்டும்)
5. வீட்டு வாடகையை அரசே கொடுக்கும். பிளாட் பாரத்தில் வசிப்பவர்களுக்கு வருடத்திற்கு இரண்டு பாய், இரண்டு தலையணை இலவசம்.
6. வீட்டில் சமைத்து, துணி துவைத்து, காயவைத்து, அயன் செய்து, பாத்திரம் கழுவி, வீட்டை கூட்டி, பள்ளிக்கு போகும் பையன்களை குளிக்க வைத்து பள்ளிக்கு அனுப்ப ஆயாமார்கள் அரசு சம்பளத்தில் வேலை வாய்ப்பு பதிமூப்பு அடிப்படையில் நியமிக்கப்படும்.
8. டாஸ்மார்க் கடைகளில் ஒரு குவாட்டருக்கு ஒரு முட்டை இலவசம்.
என் பையன் எனக்கு ஒன்றும் இல்லையா என்றான்!
இதோ அவனுக்கு,
9. இனி பள்ளிகளில் ஹோம் வொர்க் கொடுக்கக் கூடாது.
"ஹையா....ஜாலி"
என் பையன் சொல்லவில்லை! நான் தான் கூவினேன்!
சரி, நீங்களும் கொஞ்சம் யோசித்து சொல்லுங்களேன்.
படித்து ரசித்த தேர்தல் ஜோக்:
“தலைவர் ஏன் கோபமா இருக்கார்”
“ஒரு வீட்டுக்கு ஒட்டு கேட்கபோய், நான் உங்க உங்க வீட்டு பிள்ளை என்று சொல்லி இருக்கிறார். அதற்க்கு அந்த வீட்டு பெரியம்மா, ‘ஏன் இப்படி உருப்படாம ஊரை சுத்திகிட்டு இருக்கே? என்று கேட்டு கொட்டு வைத்து விட்டாராம்”.
=============================================================
ஆச்சர்ய மனிதர்கள்:
சமீபத்தில் ஒரு செய்தி தாளில் படைத்த நெகிழ்ச்சியான செய்தி.
ஆயுள் தண்டனை பெற்று 10 வருடங்களுக்குமேல் மதுரை சிறையில் இருக்கும் தன் மகனை பார்க்க 80 வயதான தாய், பல வருடங்களாக முயற்சி செய்து சமீபத்தில் சந்தித்து பாசமழை பொழிந்தது இருக்கிறார். நெகிழ்ச்சியான நிகழ்ச்சி. அதை விட நெகிழ்ச்சியான செய்தி, அந்த மூதாட்டி தன் மகனை சந்திப்பதற்கு மனுபோடுவதிலிருந்து அனைத்து ஏற்பாடுகளையும் செய்து அவரை பதிராமாக ஊருக்கு பேருந்து ஏற்றிவிட்டு உபகாரம் செய்திருக்கிறார்கள் அந்த சிறை காவலர்கள்!. நல்லமனம் வாழ்க!
இதை படித்துக்கொண்டிருந்த பொழுது எனக்கு ஒரு ஞாபகம் வந்தது. ஒருமுறை எங்கள் தலைமை அலுவலகத்திலிருந்து மற்றொரு அலுவலகத்திற்கு ஒரு பெரிய தொகைக்கு பணம் கொண்டுசெல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அப்பொழுது எனக்கு பாதுகாப்புக்கு அதாவது பணத்திற்கு பாதுகாப்பிற்க்காக ஒரு போலீஸ்காரர் உடன் அனுப்பப்பட்டார்(எஸ்கார்ட்). போலீஸ்காரர் என்றால் பொதுவாக எப்படி இருப்பார் என்று நான் அறிந்திருந்ததால் அவருடன் சகஜமாக பழகாமல் பேருந்தில் பயணித்தேன். அதன் பிறகு அவரின் செயல்கள் எனக்கு மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. போலீஸ்காரர்களை பொதுவாக தவறாக கருதியதர்க்காகவும் வருந்தினேன்.
நான் பயணச்சீட்டு எடுக்க முற்ப்பட்டபொழுது, அதை தடுத்து தானே பயணச் சீட்டு வாங்கினார். பேருந்திலிருந்து இறங்கியதும் குளிர்பானம் குடிக்கலாம் என்று ஒரு கடைக்கு அழைத்துச் சென்றார். அதற்க்கும் என்னை ரூபாய் கொடுக்கவிடாமல் அவரே கொடுத்தார். நாங்கள் கொஞ்சம் சகஜமாக நிறைய விசயங்களை பேசினோம். திரும்பி வரும் பொழுதும் என்னை செலவு செய்ய விடவில்லை. நான் அவரை ஆச்சர்யமாக பார்த்தபொழுது அவர் "என்ன சார் ஆச்சர்யமாக பார்க்கிறீர்கள் நான் வித்தியாசமானவன், இதனாலேயே என்னை என் நண்பர்கள் 'மெண்டல்' என்று கூறுவார்கள்" என்றார். அதன் பிறகு அவர் என்னை எங்கு பார்த்தாலும் முதலில் வணக்கம் ( salute ) சொல்வது அவராகத்தான் இருக்கும். இன்று எனக்கு நல்ல நண்பர் (அவரே எனக்கு அன்று செலவு செய்ததால் அல்ல). நேர்மையானவர்கள் சில இடங்களில் சில நேர்மை தவறியவர்களுக்கு மென்டலாகத்தான் தெரிவார்கள்.
கேட்க-ரசிக்க!
இளையராஜா இசையமைத்து ‘நிழல்கள்’ படத்தில் இடம்பெற்ற “இது ஒரு பொன் மாலை பொழுது” பாடலை கேட்கும் பொழுது இன்றும் நம்மை எங்கோ தாலாட்டி அழைத்துச் செல்வதை உணரமுடிகிறது!. அமைதியான சூழ்நிலையில் கேட்டுப்பாருங்கள், நீங்களும் இந்த பாடலை அப்படி உணர்ந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்! இதோ உங்களுக்காக.....